சங்க தமிழ் (மாலை) -2


சங்க நூல்கள் காட்டும் முழு நிலா காலங்களில் தமிழர்கள் கொண்டாடும் விழாக்கள்.

பங்குனி உத்திரநாள்:

“உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்” (அகம்.137:8-9)

ஓண நாள்:

“கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓணநல் நாள்” (மதுரை.590-591)

கார்த்திகை நாள்:

"மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து,
அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்:
மறுகுவிளக் குறுத்து, மாலை தூக்கிப்,
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவுடன் அயர வருக"
             -  அகநானூறு 141-10

தை நீராடல்:

"நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும்

தைஇத் தண் கயம் போல"
                         
                           - ஐங்குறுநூறு 


"இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ,

தைஇத் திங்கள் தண் கயம் படியும்பெருந் தோட் குறுமகள்"

                               - நற்றிணை 


"வை எயிற்றவர் நாப்பண், வகை அணிப் பொலிந்து, நீ

தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ?"

                       - கலித்தொகை 


"பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர்

தைஇத் திங்கள் தண்ணிய தரினும்,

வெய்ய உவர்க்கும் என்றனிர்"

                         - குறுந்தொகை 


தை நீராடல் பற்றி சங்கப்பாடல் கூறும்போது, தை நோன்பு என்பது  மார்கழி ஆதிரை முழு நிலா அன்று தொடங்கி தை பூசம்  முழு நிலா அன்று தாய் அருகா நின்று தைந் நீராட்டத்துடன் முடிவடையும் என்று பரிபாடல் உணர்த்துகிறது.‌

"கனைக்கு மதிர்குரல் கார்வானம் நீங்கப்
பனிப்படு பைதல் விடுதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிரை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப
வெம்பா தாக வியனில வரைப்பென
அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்
பனிப்புலர் பாடிப் பருமண் வருவியன்
ஊதையூர் தர வுறைசிறை வேதியர்
நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பிற்
றையன் மகளிர் ஈரணி புலர்த் தர
வையை நினக்கு மடைவாய்த்தன்று.”
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ,
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!
                    -பரிபாடல் -( 74-87)


ஆனால் சைவ வைணவ சமய இலக்கியங்கள் இதனை மார்கழி நீராடல் என்று அழைக்கிறது. 

ஆண்டாள் தனது திருப்பாவையில் "மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாள்" என்று தொடங்குகிறாள். 

"ஆழி மழைக் கண்ணா" பாசுரத்தில் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து" என்று பாடியுள்ளாள். 

மார்கழி மாத முழுநிலா காலத்தில் நீராட போதுவீர் என்று ஆண்டாள் அழைப்பதன் மூலம், நோன்பு தொடக்கம் என்பது மார்கழி ஆதிரை நாள் என்று கருதப்படுகிறது.‌ மார்கழி ஆதிரையில் தொடங்கி தைப்பூசம் அன்று நீராட்டம் முடிவடைந்து இருக்கலாம். இதைப் பார்க்கும்போது ஆண்டாளின் வாக்கியம் தெள்ளத்தெளிவாக பரிபாடல் வரிகளுடன் ஒத்துச் செல்கிறது. 


"போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் போற்றி 

அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றி 

எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றி 

எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றி 

எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றி 

மால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றி 

யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் போற்றி

யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்"

                  - திருவெம்பாவை

மாணிக்கவாசகப் பெருமான் திருவெம்பாவையில் மார்கழி நீராடல் என்றே குறிப்பிடுகிறார்.


"மாதர்கொள் மாதரெல்லாம்

மார்கழித் திங்கள் தன்னில்

ஆதிரை முன்ஈ ரைந்தே

ஆகிய தினங்கள் தம்மில்

மேதகு மனைகள் தோறும்

அழைத்திருள் விடிவ தான

போதிவர் தம்மிற் கூடிப்

புனற்றடம் ஆடல் செய்வார்

                              - திருவாசகம்

மார்கழி ஆதிரை தொடங்கி பத்து நாள்கள் பெண்கள் ஒருவரையொருவர் அழைத்துக்கொண்டு அதிகாலையிலே எல்லோரும் ஒன்றுகூடி நீராட (மார்கழி நீராடல்) சென்றனர் என்று குறிப்பிடுகிறார். 


இரு பெரும் சமயங்களும் மார்கழி நீராடல் என்ற பாவை நோன்பை இன்று, மார்கழி முதல் நாளில் தொடங்கி தை முதல் நாள் அன்று முடிக்கின்றனர்.  ஆனால் மார்கழி ஆதிரையில் தொடங்கி, தைப்பூசம் அன்று நீராடல் முடிவடைகிறது என்பதனை ஆண்டாள் திருப்பாவை மற்றும் பரிபாடல் பாடல்கள் மூலம் அறிகிறோம்.‌

நீராடல் நோக்கத்தைப் பார்த்தால் ஒரு ஒற்றுமை புலப்படுகிறது. சங்க இலக்கியங்களில் இளம்பெண்கள் அதிகாலை எழுந்திருந்து ஒன்று கூடிக் குளிர்ந்த நீரில் நீராடி, தங்களுக்குச் சிறந்த நாயகன் கிடைக்க வேண்டும், அவனை அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து நோன்பு நோற்றார்கள். இவ்வுலக வாழ்க்கை இன்பத்தை அடைவது என்பது நோக்கம்.

சமய இலக்கியங்களில் தலைவனாகக் கருதப்படும் இறைவனை அடைய அதிகாலையில் எழுந்திருந்து குளிர்ந்த நீரில் நீராடி நோன்பு நோற்றார்கள். அவ்வுலக வாழ்க்கை இன்பத்தை அடைவதற்கான நோக்கம். 

பக்தி இலக்கியம் கூறும் மார்கழி நீராடலும் சங்க இலக்கியங்கள் கூறும் தைந்நீராடல் என்பதும் ஒன்றே என்று கருதப்படுகிறது.

ஆண்டாள் திருப்பாவையில் "சங்கத் தமிழ் மாலை முப்பதும்" என்று குறிப்பிடுகிறாள். ஆண்டாள் திருப்பாவைக்குச் சூட்டிய பெயர் என்பது "சங்கத்தமிழ் மாலை".

சங்க நூல்களும் பக்தி நூல்களும் ஒன்றுக்கொன்று பிரிக்க இயலாத நிலையில் பிணைந்துள்ளது. சங்கநூல்கள் தவிர்த்து பக்தி நூலைப்பார்ப்பது, பக்தி நூலைத் தவிர்த்து சங்க நூலைப் பார்ப்பது என்பதெல்லாம் தமிழ்த்தாயைத் தாழ்த்த நினைக்கும் யுத்திகள். 

சங்கத் தமிழ் (மாலை) தப்பாமல் கற்போம் , பாதுகாப்போம், போற்றுவோம். 

மகர சடகோபன்
தென்திருப்பேரை 









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

கம்பனின் அம்பறாத்தூணி

எல்லைச்சாமி