அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி -13
ஸ்வாமி மணவாள மாமுனிகள்
இராமானுஜர் காலத்திற்கு பிறகும் பாகவத கைங்கர்யம் செய்வது மற்றும் பாகவத அபச்சாரம் செய்யாமல் இருப்பது என்ற உயர்ந்த கொள்கைகள் தொடர்ந்து ஶ்ரீ வைஷ்ணவ ஆசாரியர்களினால் வலியுறுத்தப்பட்டது என்பது ஆசாரியர்களின் கிரந்தங்களில் இருந்தும் , அவர்களுடைய வாழ்க்கை முறைகளில் இருந்தும் நன்கு புலப்படுகின்றன.
நம்பிள்ளைக்குப் பின்வந்த ஆசார்யர்களில் மிக முக்கியமான ஆசாரியர் " பிள்ளை லோகாச்சார்யார்", அவர் இயற்றிய 18 ரகசிய க்ரந்த நூல்களிலிருந்தும் குறிப்பாக ஶ்ரீவசநபூஷணம் என்ற நூலிலிருந்து பாகவத கைங்கர்யம் என்பது மேன்மையிலும் மேன்மை மற்றும் பாகவதாபசாரம் என்பது கொடியதிலும் கொடியது என்பது போன்ற பல விஷயங்கள் தெரியவருகிறது. ஸ்வாமி மணவாள மாமுனிகள், பிள்ளலோகாச்சாரியர் மற்றும் அவரது தம்பி ஶ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் எழுதிய ரகசிய க்ரந்தங்களுக்கு உரை எழுதி, அதன் அர்த்தங்களை உலகத்தாருக்குப் பரப்பியவர்.
ஶ்ரீவசநபூஷணம் நான்கு ப்ரகரணமாக , 463 சூரணைகள் கொண்ட ஒரு ரகசிய க்ரந்த நூல். இதில் இரண்டாம் ப்ரகரணத்தில் பாகவத மேன்மை , பாகவதாபசாரம் கொடியதிலும் கொடியது என்று வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது .
ஶ்ரீ வசநபூஷண சூரணைகள்:
194. பாகவதாபசாரந்தான் அநேக விதம்
195. அதிலேயொன்று அவர்கள் பக்கல் ஜந்மநிரூபணம்
மேற்கூறிய கருத்துக்கள் வார்த்தமாலை என்ற நூலில் இருப்பதையும் மேலே பார்த்தோம். இங்கே ஆசார்யர் பாகவதாபசாரம் பலவிதங்கள் என்று சொல்லி , ஜந்ம நிரூபணம் பற்றி முதலில் சொல்கிறார் என்றால் பிறப்பு அடிப்படையில் வேற்றுமை காண்பது என்பது பாகவதாபசாரத்தில் முதன்மையாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
தெரிந்தோ அல்லது தெரியாமலோ கடைபிடிக்கப்பட வேண்டிய வைணவர்களில் பலர் பிறப்பு அடிப்படையிலான அபச்சாரத்தைக் காலகாலமாக பல நேரங்களில் செய்து வருகின்றனர்.
202. "தமர்களில் தலைவராய சாதியநாதணர்களேலும்" என்கையாலே.
"அமரவோர் அங்கமாறும் வேதம் ஓர் நான்கும் ஓதித் தமர்களில் தலைவராய சாதியந்தணர்களேலும் நுமர்களைப் பழிப்பராகில் நொடிப்பதோர் அளவில் ஆங்கே அவர்கள்தாம் புலையர்போலும் அரங்கமா நகருளானே" என்ற திருமாலை பாசுரம் இதற்கு பிரமாணமாம்.
204. ஜ்ஞநாநுஷ்டாநங்களை யொழிந்தாலும் பேற்றுக்கு அவர்கள் பக்கல் ஸம்மந்தமே யமைகிறாப்போலே அவையுண்டானாலு மிழவுக்கவர்கள் பக்கல் அபசாரமே போரும்.
ஒருவனுக்கு மோக்ஷம் கிடைக்க வேணுமானால் ஜ்ஞாந அநுஷ்டாநங்கள் இல்லாவிட்டாலும் ஒரு பாகவதருடைய சம்பந்தம் கிடைத்ததாகில் அதுவே போதும்.
ஜ்ஞாந அநுஷ்டாநங்கள் பரிபூரணமாக இருந்தும், பாகவதாபசாரம் உண்டாகில் , அஃதொன்றே விநாசத்துக்கு வழிவகுக்கும்.
205. இதில் ஜன்ம வ்ருத்தாதி நியமமில்லை.
ஜந்மமும் ஆசாரமும் எதுவாயினுமாகுக, பகவத் சம்பந்முடையவர்கள் பாகவதர்கள். அவர்களுடைய சம்மந்தம் பேற்றுக்கு ஹேது. அவர்கள் திறத்தில் அபசாரம் இழவுக்கு ஹேது - என்று இவ்வளவே உள்ளது.
பாகவதர்களின் சம்மந்தம் ஒன்றே மோக்ஷத்துக்கு வழிவகுக்கும், அவர்கள் இடத்தில் மேற்கூறிய எந்தவொரு அபச்சாரம் என்பது இழவுக்கு வழிவகுக்கும்.
207. ப்ராஹ்மண்யம் விலை செல்லுகிறது, வேதாத்யயநாதி முகத்தாலே பகவல்லாப ஹேதுவென்று; அதுதானே யிழவுக்குறுப்பாகில் த்யாஜ்யமாமிறே.
வேதங்களை ஓதி அவற்றின் பொருள்களையும் நன்குணர்ந்து எம்பெருமானைப் பெறுவதற்கு உறுப்பாயிருக்கும் தன்மையினாலேயே ப்ராமண்யம் சிறப்பித்து கூறப்படுகின்றதேயன்று, எக்கேடு கொண்டிருந்தாலும் ப்ராமண்யம் சிறந்ததேயாமென்று சொல்லப்படவில்லை.
220 ஜந்மத்துக்குக்கொத்தையும் அதுக்கு பரிகாரமும் " பழுதி ஒழுகல்" என்கிற பாட்டிலே அருளிச் செய்தார்.
"பழுதிலா வொழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க
வழிபட்டு அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே"
திருமாலின் அடியார்கள் எந்த குலத்தில் பிறந்தவர்கள் ஆயினும் , நான்கு வேதங்களைக் கற்றுதேர்ந்த ப்ராமண்யர்கள் அவர்களை தொழ வேண்டும் என்ற உயர்ந்த கருத்துகளை திருமாலை என்ற திவ்ய பிரபந்தத்தில் தொண்டரப்பொடியாழ்வர் அருளிச்செய்ததை இங்கே குறிப்பிடுகிறார்.
221. வேதகப் பொன்போலே இவர்களளோட்டை சம்மந்தம்.
உறங்காவில்லி தாஸர் "வேதகப்பொன்" என்று இராமானுஜரால் அழைக்கப்பட்டார் என்றும், இராமானுஜர் திருமேனி அவரைத் தொட்டதன் மூலம் சுத்தம் (தேஹசுத்தி) உண்டாயிற்று என்றும், அவருடைய ஸ்பரிஸ சம்பந்தம் இரும்பை பொன்னாகும் தன்மைக் கொண்டதனால் வேதகப் பொன் என்று அழைக்கப்பட்டார் என்றும், இங்கே குலப் பிறப்பு பகவத், பாகவத சம்பந்தத்துக்குத் தடை இல்லை என்பதனை உறங்காவில்லி சரித்திரத்தில் பார்த்தோம்.
234. மாறனேரி நம்பி விஷயமாகப் பெரிய நம்பி உடையவருக்கு அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது.
பெரிய நம்பி இராமானுஜருக்கு அருளிச்செய்த சமாதான வார்த்தை என்பது, பாரதத்தில் விதுரனுக்குத் தர்மன் அந்திமச்சடங்குகளைச் செய்ததது தவறா? இராமாயணத்தில் ஜடாயுக்கு ராமன் ஈமச்சடங்குகளைச் செய்தது தவறா? என்று பதிலுக்குக் கேள்விகளைக் கேட்டு, தருமன் இராமனை விட அடியேன் உயர்ந்தவனும் அல்ல, விரதன் ஜடாயுவை விட மாறனேர் நம்பி தாழ்ந்தவரும் அல்ல? என்று சமாதானம் அருளினார்.
மேலும் அந்தி தொழ ( சந்தியாவந்தனம்) ஆளிடுவாருண்டோ? பாகவதர் பெருமை தெரிவிக்கும் "பயிலும் சுடரொளி மூர்த்தி" " நெடுமாற்கடிமை" திருவாய்மொழி பாசுரங்கள் நாம் கற்று ஒழுகுகைக்கன்றி வெறும் கடலோசையாகவோ? இதெல்லாம் அடியேன் சொல்லி தேவரீர் உணரவேண்டுமோ? என்று பெரிய நம்பி கூறினார். இது கேட்டு இராமானுஜருக்குப் பெரிய நம்பியிடம் இன்னும் பக்தி பெருக்கெடுத்தது.
இந்த சமாதான வார்த்தைகளை ஸ்மரணம் செய்ய , பகவத் பாகவத விஷயத்தில் குலப் பிறப்பு என்பது தடை இல்லை என்பதனை உணரமுடியும்.
பகவத் சம்பந்தமுடையவர்கள் பாகவதர்கள் என்றும் , அவர்களிடத்தில் குலப் பிறப்பு போன்ற எந்தவொரு அபச்சாரம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதனை பிள்ளைலோகாச்சார்யார் ஶ்ரீ வசந பூஷணம் இரண்டாம் பிரகாரத்தில் விபரமாக விளக்குகிறார். சொல்வதோடு நில்லாமல் நான்காம் வர்ணத்தில் பிறந்த விளாஞ்சோலைப் பிள்ளை என்ற பாகவதரை ஆசார்ய ஸ்தானத்தில் அமர்த்தி அழகு பார்த்தார். திருவாய்மொழி பிள்ளை என்ற மிக முக்கியமான ஆசார்யரை திருத்தி பணிகொண்டு அழைத்து வர வேண்டும் என்ற உயர்ந்த பணியினை விளாஞ்சோலைப் பிள்ளையிடம் இட்டு வைத்திருந்தார் பிள்ளை லோகாச்சார்யார்.
இவ்வாறாக ஶ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பகவத் கைங்கர்யத்தில் சாதிகள் தடையில்லை என்பதும், எழுதி அணிந்த வைஷ்ணவத்தை விட, எல்லை நிலத்தில் வைஷ்ணவத்மே சிறந்தது என்று விளக்கினார். எல்லைநிலமான சமுதாய விளிம்பு மக்களின் கைங்கர்யமே மிகவும் உயர்ந்த கைங்கர்யம் என்றும், பாகவதாபசாரம் என்ன என்பதனையும் தெளிவாக உணர்த்தி, அந்த அபச்சாரம் கொடியதிலும் கொடியது என்றும் , தொடர்ந்து ஆழ்வார்கள் காலம் தொடக்கமாக ஆசார்யர்கள் காலம் வரை தவறாமல் ஶ்ரீ வைஷ்ணவ நூல்களிலும் , செயல்கள் மூலம் நடைமுறையிலும் சமுதாய சீர்திருத்தம் செய்து காட்டினார்கள் என்றால் மிகையாகாது.
சமுதாய சீர்திருத்தம் என்பது இரண்டு விதமான முறையில் சீர்திருத்த முடியும் என்று வரலாறுகள் கூறுகின்றன.
ஒன்று எதிர்மறை வாதத்தின் மூலம் சீர்திருத்தத்தை ஏற்காதவர்களைத் துன்புறுத்துவது, மன உளைச்சல் செய்வது , அவர்களை சிதைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் சீர்திருத்த முயற்சியை மேற்கொள்வது. சீர்திருத்தத்தை மனதளவில் சுதந்திரமாக ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால், ஒரு சாராரின் உத்துழைப்பு முழுவதுமாக கிடைக்காது. சீர்திருத்தம் ஏற்படுவது என்பது கடினமாக இருக்கும். மேலும் கட்டுப்பாடுகள் தளரும் நேரங்களில் சீர்திருத்தம் என்பது தோல்வியை ஏற்படுத்தும். இதுவே தமிழகத்தில் இப்பொழுது கடைபிடிக்கப்படும் சீர்திருத்த முறை.
சீர்திருத்தம் என்பது இருசாராரின் அனுசரணையுடன் ஒத்துழைப்புடன் அன்பின் மூலமாக ஏற்படுத்துவது. இதனையே ஶ்ரீவைஷ்ணவ ஆசாரியர்கள் நடைமுறைப் படுத்தினார்கள். இந்த வழிமுறை என்பது நேர்மறை எண்ணத்தில் உருவாக்கப்பட்ட சமுதாய சீர்திருத்தம். இந்த மிகச்சிறந்த வழியை நடத்தி காட்டி சமூக சீர்திருத்தம் செய்த பெருமை ஶ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பரம்பரைக்குச் சாரும்.
எம்பெருமானார் திருவடிகளே சரணம்
மகர சடகோபன்
தென்திருப்பேரை
கருத்துகள்
கருத்துரையிடுக