குயில்
குயில் என்பது அழகான குரல் வளம் கொண்ட பறவை. அதன் குரல் அவ்வளவு இனிமையானது. அதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அதுவும் ஆண்குயில் மற்றும் பெண்குயில் பேசுவதைக் கேட்பது இன்னும் இனிமை. அளவு அறிந்து பேசும் பறவையினம்.
ஒவ்வொரு படைப்புக்கும் பின்னால் ஒரு அர்த்தம் இருக்கும். குயில் என்பது படைக்கப்பட்ட நோக்கம், அதிலிருந்து சில பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
ஆனால் குயில் ஒரு சோம்பேறி பறவை என்பதை மறந்து விடக்கூடாது. அதன் செயல்களை உற்று நோக்கினால், அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கின்றன என்பது தெரியவருகிறது. தான் வசிப்பதற்கும், முட்டையிடுவதற்கும், தன் குஞ்சுகளைப் பாதுகாப்பதற்காகவும் ஒரு இடத்தைக் கட்டுவது இல்லை. ஆண் பெண் குயில் இரண்டும் சேர்ந்து செய்யலாம், அதைச் செய்யாமல், பக்கத்தில் இருக்கும் காக்கை கூட்டைத் தேடி அலையும். தான் வாழ்வதற்கு ஒரு இடத்தை அமைத்துக் கொள்ள முடியாத அளவுக்குச் சோம்பல் தன்மை படைத்தவை. தன்னுடைய முட்டைகளை தான் அடைக்காத்துப் பாதுகாத்து மற்றும் குஞ்சுகளை வளர்ப்பதில்லை. குஞ்சுகள் இந்த உலகத்திற்கு வரும் போதே மாற்று தாயான காகத்தின் பாதுகாப்பில் வளர்கிறது , காகம் அடையாளம் காணும் வரை.
கூடுகளை அலைந்து கண்டுபிடித்து தந்திரங்களைக் கையாண்டு , ஆண்குயில் காகத்தை ஏமாற்றி, கோபத்தை ஏற்படுத்தி கூட்டுக்கு வெகுதொலைவு வரை அழைத்துச் செல்லும். அந்த சமயத்தில் காக்கை கூட்டில் பெண் குயில் முட்டை இடும். அப்பொழுது ஒரு முட்டைக்கு ஒரு காக்கை முட்டையைக் கூட்டிலிருந்து தள்ளி விடும் பழக்கம் கொண்டவை. இல்லையென்றால் முட்டையைத் தின்றுவிடும்.இதிலிருந்து அதனுடைய தன்னலம் வெளிப்படுகிறது. ஆண்குயிலின் ஏமாற்றும் தன்மை வெளிப்படுகிறது.
காகத்திடம் அகப்பட்டால் அலகில் கொத்தி அழித்து விடும். குயிலினங்கள் அழிவதற்குக் காரணம் அதன் சோம்பேறித் தன்மை மற்றும் அதனுடன் சேர்ந்த ஏமாற்றும் தன்மை.
காக்கை அடைகாத்து குஞ்சு பொறித்தவுடன், இறை முழுவதும் குஞ்சு குயிலுக்கே வேண்டும் என்று நினைத்து குயில் குஞ்சுகள் காக்கை குஞ்சை கூட்டிலிருந்து தள்ளும். வஞ்சகம் என்பது குயிலுக்குப் பிறவிக்குணமாகப் பிறந்தவுடன் ஒட்டிக் கொள்கிறது.
இந்த சோம்பல் குணம் மற்றும் அதன் மூலம் விளைந்த வஞ்சக் குணம் இரண்டுமே தகாத குணமாகப் பார்க்கப் படுகிறது. அதைத் தவிர்க்க வேண்டும். சோம்பல் என்பது வாழ்வதற்குத் தடையாக இருக்கிறது, ஆனால் சோம்பல் தன்மைகொண்டவர்கள் அடுத்தவர்களின் கையை எதிர்பார்த்து வாழ்கிறார்கள். சிலசமயங்களில் வஞ்சகத்தைக் கையாண்டு வாழ நினைக்கிறார்கள். இது அவர்களைத் தனிமைப்படுத்துவது மட்டுமல்ல , அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும்.
பெண்குயில் அதிகமாக வெளியில் எங்கும் வருவதில்லை. பொதுவாகக் குயில்கள் தனியே வாழும் பறவை. குயில் இனிமையாகப் பாடக்கூடிய ஒரு பறவை இனம். ஆண் குயில் பருவகாலங்களில் கலவிக்காகக் குரல் எழுப்பும். பெண்குயில் பதில் உரைக்கும் அதே எண்ணிக்கையான வார்த்தைகளுடன். அதிகம் பேசுவதில்லை. கேட்ட கேள்விகளுக்கு அதே எண்ணிக்கையில் பதில்.
ஒன்று சேர்ந்தபிறகு அந்த காலத்துக்கு இணைபிரியாமல் வாழ்கிறது.
முட்டையிடும் காலங்களில் ஆண்குயில் பெண் குயிலுக்கு உதவிசெய்யும். காதலன் காதலியைத் தேடுவதில் குயில்கள் கூவி ( பேசி) இணைவதில் வல்லமை படைத்தவை.
முட்டையிட்ட பிறகு பிரிந்து தனியாக வாழும் பறவை.
பிறந்து சில காலங்கள் கழித்து, குஞ்சுகள் குரல் எழுப்பும் சமயத்தில் காகம் அடையாளம் கண்டு துரத்தித் துரத்தி விரட்டும். சில சமயங்களில் கொத்தி அழித்துவிடும். அப்பொழுது விலகிச் சென்று தனியாக வாழும். தனியாக வாழ்வது என்பது அன்று முதல் பழக்கப்பட்ட ஒரு விஷயமாக குயிலுக்கு உள்ளது.
ஒரு விசித்திரமான பறவை. முழுவதும் கருப்பு, கண்கள் சிவந்து காணப்படும், அழகான குரல்வளம் கொண்ட பறவை.
இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்,
1.சோம்பல், வஞ்சகம் என்ற இரண்டையும் தவிர்க்க வேண்டும்
2. தான் வாழ்வதற்கு தான் உழைக்கவேண்டும்
3. அடுத்தவர்களை நம்பி வாழ்வதை தவிர்க்க வேண்டும்
4. இனிமையாக அளவோடு பேசவேண்டும்.
5. கலவி ஒன்றே பிரதானமான வாழ்க்கை என்று கொள்ளாமல், குழந்தைகளை வளர்க்கவும், தன்னலம் இல்லாமல் சமுதாய உணர்வுடன் வாழவேண்டும்.
குயிலிடமிருந்து மேற்கூறிய பாடங்களைக் கற்றுக் கொண்டால் ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் செம்மையாக வாழலாம்.
மகர சடகோபன்
தென்திருப்பேரை
கருத்துகள்
கருத்துரையிடுக