அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி -14
காரே கருணை இராமானுஜர்
பகவத் சம்பந்தம் உள்ளவர்கள் மட்டுமே பாகவதர்கள் என்று விளக்கத்தை பிள்ளலோகாச்சாரியர் அருளிச்செய்த ஶ்ரீ வசநபூஷணத்தில் மூலம் அறிந்தோம்.
இதை இரண்டையும் படித்துவிட்டு பகவத் சம்பந்தமுடைய பாகவதர்களிடம் மட்டுமே அபச்சாரம் செய்யாமல் இருக்க வேண்டும், ஆனால் மற்றவர்களிடம் செய்யலாமா என்று ஒருவர் வினவினார்.
பாகவதாபசாரம் செய்யாமல் இருப்பது என்பது மானுட தர்மம் என்று நாமும் வலியுறுத்தி கூறியிருந்தோம்.
பகவத் சம்பந்தம் உள்ள பாகவதர்களிடம் பன்னிரண்டு விதமான அபச்சாரங்களில் எந்த ஒரு அபச்சாரமும் செய்யக்கூடாது என்பது முதலில் தெளிவாகி விட்டதா என்று கேள்வி கேட்டேன். அதில் சந்தேகம் இல்லாத ஒரு தெளிவு இருப்பதைக் கூறினார்.
அடுத்தது நமது கேள்வி என்பது பகவத் சம்பந்தம் இல்லாத மற்றவர்களை, அப்படியே விட்டுவிடுவதா அல்லது அவர்களையும் திருத்தி பகவத் சம்பந்தம் ஏற்படுவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வதா? . பகவானின் இன்னருளுடன் முயற்சி செய்து அனைவரையும் பகவத் சம்பந்தமுடைய பாகவதர்களாக மாற்றுவதுதான் சிறந்த அணுகுமுறை என்று கூறினார்.
பாகவதர்களாக மாற்றுவதற்கு அபச்சாரம் செய்யாமல், வேறுபாடு காட்டாமல், அன்பு செலுத்தி அரவணைத்து செல்வதன் மூலம் மானுடத்தை உணர்ந்து, பகவத் சம்பந்தம் ஏற்படும்.
ஆதலால் வேறுபாடு காட்டாத அன்பு , அபச்சாரம் அற்ற அன்பு என்பது எப்பொழுதும் எல்லோரிடமும் காட்ட வேண்டும் என்பதுதான் இங்கே அடிப்படையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது மற்றொன்றும் உலாவி வருகிறது. இராமானுஜர் எல்லோருக்கும் திருமந்திர உபதேசம் செய்யவில்லை என்றும் , ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் உபதேசித்தார் என்றும், சில நூல்களிலிருந்து சுட்டிக்காட்டி கூறுகின்றனர்.
இராமானுஜர் வர்ணத்தை ஒத்துக்கொண்டார் என்றும் கூறுகின்றனர்.
ப்ராபந்நாம்ருதம் என்ற நூலில் திருக்கோஷ்டியூர் நரசிம்மர் கோயில் கோபுரத்தின் மேலேறி, அங்கே கூடியிருந்த 74 ப்ராமணோத்தமர்களுக்கு மந்திரங்களை உபதேசித்தார் என்று உள்ளது.
புத்தூர் கிருஷ்ண ஸ்வாமி அய்யங்கார் " ப்ராபந்நாம்ருதம்" என்ற நூலை தமிழில் மொழி பெயர்க்கும் போது , நூலின் முதல் பக்கத்தில் இந்த நூல் மூலத்தில் நிறைய இலக்கண பிழைகள் இருப்பதாகவும், வடநாட்டில் இராமானுஜரின் புகழைப் பரப்புவதற்காக இந்த நூல் வடமொழியில் ஏற்படும்போது பிழைகள் ஏற்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டு இந்த நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இதனால் இந்த நூலில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் என்பது ஆதாரங்களாக அப்படியே எடுத்துக்கொள்ள முடியாது என்பது என் கருத்து.
ப்ராபந்நாம்ருதம் என்ற நூலில் கூறப்பட்டுள்ள விஷயங்களை மற்ற ஆசார்ய கிரந்தங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து , முரண்பாடுகள் இல்லை என்ற போது எடுத்துக்கொள்ளலாம்
இதில் அடிப்படையில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்பது , வர்ணத்தை ஒழிப்பது என்பது ஆசாரியர்களின் நோக்கம் அல்ல. நோக்கம் என்பது வேறுபாடு காட்டாமல் அன்பு செலுத்தி, பகவத் கைங்கர்யம் செய்வதில் ருசியை ஏற்படுத்துவது. அந்த பகவத் கைங்கர்யம் என்ற ருசிக்கு தடையாக இருக்கும் அனைத்தையும் சமுதாயத்திலிருந்து விலக்குவது. சாதி தடையாக இருக்குமனால் சாதிப்பார்ப்பதை விலக்குவது. வர்ணம் தடையாக இருக்குமனால் வர்ணத்தை விலக்குவது.
"ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர்
ஏரார் எதிராசர் இன்னருளால் – பாருலகில்
ஆசை உடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறும் என்று
பேசி வரம்பறுத்தார் பின்"
- உபதேச ரத்தின மாலை 36
பொய்யில்லாத மணவாள மாமுனி தனது உபதேச ரத்தினமாலையில் , இராமானுஜரின் கருணை உள்ளத்தினால் உலகில் ஆசையுடையவருக்கெல்லாம் மந்திரத்தை உபசரித்து , இது வரை பின்பற்றி வந்த வரம்பை அறுத்தார் என்று அருளுகிறார்.
வடிவழகிய நம்பி தாஸர் எழுதிய " ஶ்ரீ ராமானுஜ வைபவம்" என்ற நூலில் திருக்கோஷ்டியூர் நரசிம்மர் சந்நிதி திருவோலக்கத்தில் பாகவதோத்தமர்களுக்கு மந்திரத்தை உபதேசித்தார் என்று உள்ளது. பாகவதோத்தமர்கள் என்று சொல்லும்போது பகவத் சம்பந்தமுடைய அனைத்து வைணவர்கள் என்றுதான் அர்த்தமே தவிர ப்ராமணோத்தமர்களுக்கு மட்டுமே என்ற அர்த்தம் கிடையாது.
பின்பழகராம் பெருமாள் ஜீயர் எழுதிய குருபரம்பரா பிராபாவம் என்று நூலில்
இராமானுஜர் திருக்கோஷ்டியூர் நரசிம்மர் சந்நிதியில் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு மந்திரத்தை உபதேசித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஶ்ரீ வைஷ்ணவர்கள் , விசிஷ்டாத்வைத சம்பிரதாயத்தை பின்பற்றும் அனைவருக்கும் பொருந்தும். இங்கேயும் ப்ராமணோத்தமர்களுக்கு மட்டுமே உபதேசித்தார் என்று இல்லை.
குரு பரம்பரா பிரபாவ சாரம் என்று காஞ்சி பிரதிவாத பயங்கர அண்ணங்காராச்சாரியார் ஸ்வாமி எழுதிய நூலிலும் , குருபரம்பரா பிராபாவத்தில் கூறிய அதே கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கூறிய பாசுரம் மற்றும் இராமானுஜ சரிதம் செய்யுள், குருபரம்பரா பிராபவஸாரம் என்ற நூல்களின் மூலம் சிலரின் வாதமான குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும் உபதேசித்தார் என்ற வாதத்தை பொய்யாக்கிறது.
இதை மனதில் கொண்டு ஆசாரியர்கள் தங்கள் நூல்களில் பாகவதாபசாரம் கொடியதிலும் கொடியது என்று வலியுறுத்தி எழுதி வைத்துள்ளனர் என்பது உறுதியாகப் புலப்படுகிறது.
மலருக்குப் பெருமை மணம்
மலரிலிருந்து மணம் பிரியாது
மலரிலிருந்து மணம் பிரிந்தால்
மலருக்கு அர்த்தம் இல்லை
மானுடத்துக்குப் பெருமை அன்பு
மானுடத்திலிருந்நு அன்பு பிரியாது
மானுடத்திலிருந்நு அன்பு பிரிந்தால்
மானுடவாழ்வில் அர்த்தம் இல்லை.
அபச்சாரம் அற்ற அன்பு
வேறுபாடு இல்லாத வேற்றுமை
வேற்றுமையில் ஒற்றுமை
ஒற்றுமை ஒன்றே உன்னதம்
உன்னதம் பெற்று உயிரோடு உயர்ந்து வாழ்ந்து உயர்வடைய ஒரே வழி உடையவர் திருவடி என்பதை உணர்வோம்.
மகர சடகோபன்
தென்திருப்பேரை
கருத்துகள்
கருத்துரையிடுக