அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி -12
இராமானுஜர் காலத்திற்குப் பின்னும் இந்த உயர்ந்த கொள்கையான "எல்லை நிலையான பாகவத கைங்கர்யம்" என்ற நிலையைச் சீராகப் பின்பற்றிப் போற்றிப் பாதுகாத்து வந்தனர்கள் என்பதற்கு பின்பழகராம் பெருமாள் ஜீயர் அருளிச் செய்த "வார்த்தா மாலை" என்பது சிறந்த உதாரணமாகும்.
"பின்பழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில்
அன்பு அதுவும் அற்று மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்"
- உபதேசரத்தினமாலை 66
மணவாள மாமுனிகள் அருளிச்செய்த உபதேசரத்தினமாலையில் பின்பழகராம் பெருமாள் ஜீயர் நம்பிள்ளையின் சிஷ்யர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இராமானுஜர், எம்பார், பட்டர், நஞ்ஜீயர், நம்பிள்ளை என்பது ஆசாரியர்களின் பரம்பரை. பரம்பரையாக ஶ்ரீவைஷ்ணவத்தில் பாகவத ஏற்றம் என்பது நடைமுறையில் ஆசாரியர்களினால் கடைபிடிக்கப்பட்டுள்ளது.
அக்காலத்தில் சாதிகள் தடையாக இருந்திருக்கிறது என்பது சிலரது நடவடிக்கைகள் மூலம் தெரிய வருகிறது. ஆனாலும் ஶ்ரீவைஷ்ணவ ஆசாரியர்கள் அதனைக் களைவதற்கு பல முயற்சிகள் எடுத்துள்ளனர் என்றும், அதனை நடைமுறைப் படுத்துவதில் தாங்களே முன் நின்றார்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
இராமானுஜரின் சிஷ்யரான நடதூராழ்வான், இராமானுஜரின் மற்றொரு மருமகன். அவர் விஷயமாக வார்த்தாமாலை 283ல்,
வார்த்தாமாலை 283:
நடதூராழ்வான் ஒரு ஶ்ரீவைஷ்ணவர் கையைப் பிடித்துக்கொண்டு போகாநிற்க, நடுவில் திருவீதியிலே ஒரு திருக்குலத்தில் ஶ்ரீவைஷ்ணவர் அணுகிவர, கைக்கொடுத்துக் கொண்டு போகிற ஶ்ரீவைஷ்ணவர் அவரை ஜாதி நிரூபணம் பண்ணி, "கடக்கப்போ" என்ன, ஆழ்வான் அதைக் கேட்டு மூர்ச்சித்தார்; மூர்ச்சை தெளிந்தபின்பு அருகுநின்ற ஶ்ரீவைஷ்ணவர்கள் 'இதுவென்' என்ன; திருக்குலத்திலே திருவவதரித்து இரண்டாற்றுக்கும் நடுவே வர்த்திக்கப்பெற்ற மஹாநுபாவனா பறையன்? நெடுங்காலம் ஆத்மாபஹாரம் பண்ணித்திரிந்த நானன்றோ பறையன்' என்று அருளினார்.
நடதூராழ்வான் திருவரங்க வீதியில் ஒரு வைஷ்ணவர் கையைப் பிடித்து நடந்துவர, திருக்குலத்தார் வைணவர் அருகில் வர , கைப்பிடித்து வந்த வைணவர், அவரைத் தள்ளிப்போ என்று சொல்ல, அதைக் கேட்டு நடதூராழ்வான் மயங்கி விழுந்தார். மயக்கம் தெளிந்த பின்பு கைப்பிடித்த வைணவர் இது என்ன? என்று கேட்க, திருவரங்கத்தில் பிறந்து ( இரண்டு ஆற்றுக்கிடையில்) வாழும் திருக்குல வைணவரா பறையன் , நான் அன்றோ பறையன் என்று நடதூராழ்வான் அருளினார்.
வைஷ்ணவர்களிடையில் சாதிகள் பார்க்கக்கூடாது என்பதற்கும், சாதிப் பார்ப்பது பாகவத அபசாரம் என்பதும் நடதூராழ்வான் வாக்கு.
பட்டர் சாத்தாத பாகவதனுடைய ஶ்ரீபாத தீர்த்தத்தைப் பருகி அவருக்கு ஏற்பட்ட தோஷத்திலிருந்து விடுபட்டார் என்பது ஒரு சரித்திரம் உள்ளது. பட்டர் என்ற ஶ்ரீவைஷ்ணவ ஆசார்யருக்கே பாகவதனுடைய ஶ்ரீபாத தீர்த்தம் ஸ்வீகரித்து, அபச்சாரத்திற்கு விமோக்ஷனம் என்றால், ஶ்ரீவைஷ்ணவத்தில் பாகவத ஏற்றம் பற்றித் தெளிவாக உரைத்துள்ளதை அறியமுடிகிறது.
பட்டரின் சிஷ்யரான நஞ்ஜீயர் வாக்கு , வார்த்தா மாலை 270 ல் இவ்வாறாக உள்ளது.
வார்த்தா மாலை 270:
"நம்பிள்ளை நஞ்சீயரை " அவதாரங்கள் எதற்காக? என்ன; ' ஈஸ்வரன் அவதரித்து பண்ணின ஆனைத்தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமை' என்று ஜீயரருளிச் செய்தார்.
பாகவத அபச்சாரம் செய்த ஹிரண்ய கசிபு, இராவணன், கம்ஸன் போன்றவர்களை அழித்து, பாகவதர்களுக்கு தன்தரிசனத்தை நேரில் காட்டவே அவதாரங்கள் என்பது ஜீயர் வார்த்தை.பாகவத அபசாரம் செய்பவர்களின் ஸ்வரூபம் அழிக்கப்படும் என்பதுதான் இதன் அர்த்தம். பாகவத அபசாரம் கொடுமையிலும் கொடுமை என்று காண்பிக்கப்பட்டது.
நம்பிள்ளை, பிள்ளை ஏறு உடைய தாஸரிடம் பெருமாள் அமுது செய்த பிரசாதத்தைக் கொடுத்து , அவர் தொட்ட பிரசாதத்தைத் தான் ஸ்வீகரித்தார் என்ற சம்பவத்தையும் பார்த்தோம்.
நம்பிள்ளை சிஷ்யர் பின்பழகராம் பெருமாள் ஜீயர் வார்த்தாமாலை என்ற நூலில் பாகவத அபசாரம் கொடுமையிலும் கொடுமை என்று காட்டியுள்ளார்.
இவ்வாறாகத் தொடர்ந்து பாகவதப் பெருமை போற்றி பாதுகாக்கப்பட்டு வந்தது.
பாகவத அபசாரம் பலவிதம் என்று பட்டியலிட்டு வார்த்தா மாலை 273 ல் குறிப்பிட்டுள்ளார். அதில் முக்கியமாக 12 அபசாரங்களைக் குறிப்பிட்டு , இதை பாகவதர்களிடம் மனதளவில் கூட நினைக்கக்கூடாது , மறந்தும் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்துகிறார்.
வார்த்தா மாலை 273:
பாகவதாபசாரந்தான் பஹுவிதம்; அதில் பிரதானமான அபசாரம் பன்னிரண்டு; அவையாவன;
1. ஜந்ம நிரூபணம்: அதாவது ஜாதியையிட்டு பாகவதரைத் தாழ நினைப்பது. எம்பெருமானுடைய பக்தர்கள் ஜாதியால் ஸூத்ரர்களாயினும் ஸுத்ரர்கள் அல்லர், அவர்கள் அந்தணர்களாகவே எண்ணப்படுகிறார்கள். குற்றமற்றவனான வைஷ்ணவனை ஒருவன் கண்டால் அவ்வைஷ்ணவன் எக்குலத்தவராயினும் அவனை தண்டம் போல் பூமியில் விழுந்து வணங்கவேண்டும்.
2. சரீர நிரூபணம்: அதாவது ஶ்ரீவைஷ்ணவன் உடம்பைப் பார்த்து, ஆண், பெண், பறவை, விலங்கு, அசுரன் , ராட்சதன் என்று சரீர பேதத்தையிட்டு இகழ்வது.
3. பாவ (பாக) நிரூபணம்: கரு தரித்தல், பிறத்தல், வளர்த்தல், குறைத்தல் , பருத்தல், அழித்தல் என்ற ஆறு விகாரங்களை பாகவதர் விஷயத்தில் ஆராய்ந்து அவர்களை இகழ்வது.
4. ஆஸ்ரம நிரூபணம்: அதாவது பிரம்மச்சரியம், கிரகஸ்தன், வாநப்ரஸ்தன், சந்நியாசம் என்னும் நான்கு நிலைகளில், இன்ன நிலை என்று பாகவதர்களிடம் ஆராய்ந்து இகழ்வது.
5. அவயவ நிரூபணம்: அதாவது பாகவதனுடைய திருமேனி, உடலின் உறுப்புகளின் அமைப்புகளை ஆராய்ந்து இகழ்வது.
6. ஆலஸ்ய நிரூபணம்: அதாவது ஸ்நானம் செய்யாத பாகவதனுடைய உடம்பில் ஏற்படும் துர்நாற்றத்தை ஆராய்ந்து இகழ்வது.
7. வாஸ நிரூபணம்: திருவரங்கம் திருமலை காஞ்சி முதலிய திவ்ய தேசங்களில் வசிக்கும் ஶ்ரீவைஷ்ணவர்களை ஆதரிப்பதுப் போல், குப்பத்திலிருந்து எழுந்தருளின ஶ்ரீவைஷ்ணவரையும் அவர் இருந்த இடமே திவ்ய தேசம் என்று நினைத்து ஆதரிக்கவேண்டும். ஆதரிக்காமல் இகழ்வது அபசாரம்.
8. பந்து நிரூபணம்: அதாவது தன்னுடைய தேஹபந்துகளில் ஒரு ஶ்ரீ வைஷ்ணவர் இருந்தால், அவருடைய வைஷ்ணவத்வத்தையிட்டு ஸ்வாமியாக நினையாமல், வெறும் உறவினராக நினைத்தல் அபசாரம்.
9. ப்ரகாஸ நிரூபணம்: அதாவது தன் ஆசாரியரையும், எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளில் சேர்ந்த ஆசாரியர்களையும், கௌரவிக்க தகுந்த ஜீயர் முதலானாரையும், உலகறிந்த ஆசாரிய கைங்கரியம், ஶ்ரீவைஷ்ணவ கைங்கரியம் முதலானவற்றைச் செய்பவர்களையும், எம்பெருமானே எல்லாம் என்று ஏதாவது ஒரு மூலையில் எவரும் அறியாமல் வாழும் ஶ்ரீவைஷ்ணவர்களையும் ஒன்றாக மதிக்காமல் இகழ்வது
10. ப்ரகார நிரூபணம்: நந்தவனத்தை வளர்க்கும் வைஷ்ணவர்கள், கோயில் திருப்பணி செய்யும் வைஷ்ணவர்கள், புஷ்பங்கள், பரிவட்டங்கள், திருவிளக்கு சமர்ப்பிக்கும் வைஷ்ணவர்கள், பார்வைக்கு ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்கிற வைஷ்ணவர்களையும் ஏற்றத்தாழ்வு ஆராய்ந்து இகழ்வது.
11. வர்த்தன நிரூபணம்: அதாவது பாகவதன் செய்யும் தொழிலின் அடிப்படையில் ஆராய்ந்து இகழ்வது.
12. தோஷ நிரூபணம்: அதாவது தேஹத்தைக் கொண்டு செய்யும் குற்றங்களைக் கண்டு ஆராய்ந்து இகழ்வது. அவர்களை முக்கரணங்களிலும் குறைந்த அறிவுடைய வர்கள் என்றும் அநுஷ்டானம் இல்லாதவர்கள் என்றும் இகழ்வது.
"எக்குலத்திலும் பிறந்து என் பக்தனாயிருப்பவனை நிந்திப்பவனை எவ்வளவு கற்பகோடி காலமானாலும் பொறுக்கமாட்டேன்" என்று வராகப்பெருமாள் பூமி பிராட்டியிடம் உபதேசித்தார்.
பரனசாலையில் பிராட்டி சீதாதேவி மனதளவில் லெக்ஷ்மணன் என்ற மிகச்சிறந்த பாகவதன் மேல் அபசாரம் பட்டதனால், பிராட்டிக்குப் பொறுக்க முடியாத கஷ்டங்கள் ஏற்பட்டன. பாகவத அபசாரத்துக்கு பிராட்டி, ஆசாரியர்கள், ஶ்ரீவைஷ்ணவர்கள் என்று எவரும் விதிவிலக்கு இல்லை என்பதனை நமது புராணங்களும் இதிகாசங்களும் நன்கு புலப்படுத்துகின்றன.
பாகவதாபசாரம் கொடியதிலும் கொடியது என்ற எண்ணத்துடன், மனிதாபிமான தன்மையுடன் மானுடம் போற்ற வாழ்வது மானிடத்தின் மேன்மை என்று உணர்ந்து, எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தி அரவணைத்து வாழ்வது மானிடம் கண்ட மாமாண்பு.
இதனை உலகோருக்கு உணர்த்திய உத்தமர் இராமானுஜர்.
இராமானுஜர் திருவடிகள் வாழி! வாழி ! வாழி!
மகர சடகோபன்
தென்திருப்பேரை
கருத்துகள்
கருத்துரையிடுக