அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி -11

 

வழக்கத்தில் இல்லாத ஈரங்கொல்லி என்ற தூய தமிழ்ச் சொல், வண்ணாத்தான்  குலத்தைக் குறிக்கும் சொல். துணிகளை உவர் மண்ணுடன் சேர்ந்து நீரில் ஊறவைத்து, துணியின் ஈரத்தை போக்குவதால் (கொல்லுவதால்) இவர்களுக்கு "ஈரங்கொல்லி" என்ற பெயர் வருவதற்கான காரணம். நம்பிள்ளை ஈடு வ்யாக்னத்தில்  இந்தச் சொல் கீழ்க்கண்டவாறு பிரயோகிக்கப் பட்டுள்ளது. . 


"ஒருநாள் ஸ்ரீ வைஷ்ணவ வண்ணாத்தான்   திருப்பரிவட்டங்களை அழகிதாக வாட்டி  எம்பெருமானார்க்குக் கொண்டு வந்து காட்ட, போரத் திருவுள்ள முகந்தாராய் இவனையும் கூடக்கொண்டு பெருமாள் பாடே புக்கு, ‘நாயன்தே! இவன், திருவரைக்குத்  தகுதியாகும்படி இவற்றைத் தொட்டபடி   பார்த்தருள வேண்டும்’ என்று காட்ட, கண்டு போர உகந்தருளி  எம்பெருமானாரை அருளப்பாடிட்டு, ‘இவனுக்காக, கம்சனுடைய  ஈரங்கொல்லி நம் திறத்திற்செய்த குற்றம் பொறுத்தோம்’ என்று திருவுள்ளமானார்" என்பது  திருவாய்மொழி 4-3-5, 5-10-6 பாசுரத்துக்கான ஈடு வ்யாக்னம்


வண்ணான் குலத்தினர் வெள்ளாவியில் வைத்து துணிகளை வெளுப்பதை "வாட்டி" என்ற சொல்லால் உபயோகப்படுத்தினர். 

வண்ணான் குலத்தினர் உவர் மண் அல்லது காரம் போன்றவற்றைத் துணியின் அழுக்குகளைப் போக்குவதற்குப் பயன்படுத்தினர் . அதனை "வண்ணாங்காரம்" என்று அழைத்தனர்


இராமானுஜ சம்பிரதாயத்தில்   வண்ணாத்தான் குலத்திற்கு ஒரு ஏற்றம் உண்டு. ஶ்ரீரங்க நாதன் உடுத்துக் களைந்த  திருப்பரிவட்டங்களை  அழகாக வெளுப்புச் செய்து , ஒழுங்கான முறையில் அடுக்கி அதனை எடுத்து வரும் அழகைத் தினம்  ரஸித்து வந்தார் அண்ணல் இராமானுஜர். அவன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார். அந்த வண்ணாத்தானை  ஶ்ரீரங்கவாசிகள் "ஶ்ரீவைஷ்ணவ  வண்ணாத்தான்" என்று அழைத்தார்கள்.


ஸ்வாமிக்கு உழைத்து வாழும் ஏழையர்கள் மீதும் , சமுதாயத்தின் எல்லை நிலை மக்கள் மீதும் எப்பொழுதும் பாசமும் பரிவும் உண்டு. ஒருநாள் திருவரங்க நாதனின் திருப்பரிவட்டங்களை நன்றாக அடுக்கி எடுத்துக்கொண்டு ஸ்வாமியின் மடத்தின் வாயிலாகச் சென்றான். திருப்பரிவட்டங்களை ஸ்வாயியிடம் காண்பித்தான். அவனை  நலம் விசாரித்து, அவன் திருக்கைகளைப் பற்றிக்கொண்டு ஸ்வாமி இராமானுஜர் அரங்கன் திருமுற்றத்திற்கு எழுந்தருளி, " நாயந்தே! இவன் திருவரைக்கீடாம் படி இவற்றைத் தொட்டபடி பார்த்தருள வேணும்" என்று காட்ட, பெருமாளும் கண்டு போரவுகந்தருளி, இராமானுஜரை அருளப்பாடிட்டு, " இவனுக்காக கம்ஸனுடைய ஈரங்கொல்லி நம்திறத்தில் பண்ணின குற்றம் பொறுத்தோம்" என்று அருளினார். 


கம்ஸனுடைய ஈரங்கொல்லி என்பவன்  அவனிடம் ராஜசேவை பண்ணின வண்ணான். வில் விளையாட்டு ஒன்றை ஏற்படுத்தி, யாகம் நடத்தி கண்ணனைக் கொல்வதற்காக அழைப்பு விடுத்திருந்தான் மலையை ஒத்த தோள்களையுடைய கம்ஸன். கண்ணனைக் கொல்வதற்காக மல்யுத்த வீரர்கள் மற்றும்  குவலாய பீடம் என்ற மதயானையை அரண்மனை வாயிலில் நிறுத்தினான்.‌கண்ணன், பலராமர் இருவரும் ஆயர்பாடியிலிருந்து கிளம்பி மதுரா   நகரத்துக்குள் வந்தார்கள். கம்ஸன் அரண்மனைக்குச் செல்வதற்கு முன் கண்ணன் வண்ணானிடம் சென்று வெளுத்த துணிகளைக் கேட்டான். அவன் துணிகளைத் தர மறுத்துவிட்டார். அதன்பிறகு  மாலாக்காரரிடம் சென்று புஷ்பங்களைக் கேட்க, அவரும் கொடுத்தார். கண்ணன் எம்பெருமானுக்குத் துணி கொடுக்க மறுத்த கம்ஸனின் ஈரங்கொல்லியையும்   ஶ்ரீரங்க ஈரங்கொல்லியுடன் சேர்த்துப் பொறுத்து அருளினார். அனைத்து ஈரங்கொல்லியின் குற்றங்களையும் பொறுத்து அருளினார் என்பதுதான் இதன் மூலம் அறியப்படுகிறது.


இராமானுஜர் ஈரங்கொல்லியின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று அரங்கன் முன் நிறுத்திய சம்பவம் என்பது  சாதிகள் பகவத்கைங்கர்யம்  செய்வதில் தடையில்லை என்றும் , சாதிகளினால் வேறுபடுத்தக் கூடாது என்பதனையும், தானே நடத்திக் காட்டினார். 

ஸ்வாமியின் கருணை என்பது கடல் போன்றது. திருவரங்கத்தமுதனார் இராமானுஜ நூற்றந்தாதியில், 


 "காரேய் கருணை ராமானுஜ, இவ்விடத்தில் ஆரே அறிபவன் நின்னருளின் தன்மை" 

என்று புகழும் படிக்கானது இராமானுஜரின் கருணை. 


இராமானுஜர் தெய்வமாக வழிபடும் கண்ணன் எம்பெருமானுக்குக் கள்வனின் பயத்தால் திருப்பரிவட்டம் வழங்க மறுத்த வடமதுரா ஈரங்கொல்லிக்கும் தந்தோம் என்று அரங்கன் சொல்ல, இராமானுஜரின் கருணை என்ன? அதைவிட எம்பெருமான் கருணை என்ன? ஒன்றை ஒன்று விஞ்சும் அளவுக்கு அதிகமாக இருப்பது என்பது இந்தச் செயலின் மூலம் தெரிய வருகிறது. 


தென்னிந்தியாவில் மலிக்காபூர் படையெடுத்த காலத்தில், திருவரங்கம் மதுரை கோயில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த விபரத்தை "மதுரா விஜயம்" என்ற நூலில் நான்கு பாகங்களாக எழுதியுள்ளார்கள். மலிக்காபூர் படையெடுத்த சமயத்தில் ஆசார்யர் பிள்ளை லோகாச்சாரியார் தனது 103வது வயதில் மூலவருக்கு கல்திரையிட்டு மறைத்து, திருவரங்கச் செல்வர் என்ற உற்சவ மூர்த்தியை உபய நாச்சிமார்களுடன் எழுந்தருளப்பண்ணிக் கொண்டு தெற்கு நோக்கி பயணம் செய்தார். திருமாலிருஞ் சோலை மலையில் ஒரு குகையில் மறைத்து வைத்து திருவரங்க நாதனை பாதுகாத்து வந்தார். அந்த சமயத்தில் அவரது 106 வது வயதில் திருநாடு அலங்கரித்தார் (இறந்துவிட்டார்). அதற்குப் பிறகு 48 ஆண்டுகள் கோழிக்கோடு, மேலக்கோட்டை, திருப்பதி முதலிய இடங்களுக்குச் சென்று , கடைசியில் திருவரங்க நாதன் செஞ்சி வந்து சேர்ந்தார். செஞ்சியிலிருந்து திருவரங்கத்துக்கு எழுந்தருளப்பண்ணிக் கொண்டு வந்தார்கள்.


அப்பொழுது திருவரங்கத்தில் திருவரங்க நாதனை அடையாளம் காண முதியோர்கள் யாரும் இல்லை. தினம் அரங்கனின் திருப்பரிவட்டங்களை வெளுத்துக் கொடுக்கும் ஈரங்கொல்லி ஒருவர் வயது முதிர்ந்த நிலையில் இருகண்கள் பார்வையும் இழந்து இருந்தார். தினம் அரங்கனின் வேஷ்டியைத் துவைத்துப் பிழிந்து அதன் தீர்த்தத்தை (ஈர ஆடை தீர்த்தம்) பருகும் வழக்கம் கொண்டதனால், முதிர்ந்த கண்பார்வை இழந்த நிலையிலும் தன்னால் அரங்கனை அடையாளம் காணமுடியும் என்று சபையினர் முன் உரைத்தார். அதன்படி பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து ஈரவாடை தீர்த்தம் வயது முதிர்ந்த ஈரங்கொல்லிக்குச் சாதிக்கப்பட்டது. அந்த தீர்த்தத்தைப் பருகிய உடன், நம்பெருமாளே என்று சப்தமிட்டு உரைத்தார். அன்று முதல் உற்சவ மூர்த்தி திருவரங்க நாதன், நம்பெருமாள் என்ற திருநாமத்தால் அழைக்கப்பட்டார். ஈரங்கொல்லி கொடுத்த திருநாமத்தை இன்றளவும் உகப்பாக ஏற்றுக்கொண்டு, மற்றவர்களையும் அந்த திருநாமத்தால் அழைப்பதையே பேருகப்புக் கொள்கிறான் அரங்கன் என்றால் , ஈரங்கொல்லி சமுதாயத்துக்குக் கிடைத்த மாபெரும் ஏற்றம். இந்த சம்பவம் இராமானுஜர் காலத்துக்குப் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்டது. ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் காலம்காலமாக சாதிகள் ஒரு தடை இல்லை என்பதனை நிரூபிக்கிறது. 


ஶ்ரீரங்கத்தில் ஈரங்கொல்லி சமுதாயத்தில் ஒருவர் இறந்துவிட்டார் என்றால், எரியூட்டும் நெருப்பு அரங்கன் கோயிலிருந்து அரங்கன் ஆனையில் மேல் கொண்டுவரப்படும் என்பது அந்த சமுதாயத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாகக் கருதப்படுகிறது.‌


இராமானுஜர் திருக்குருகூர் என்ற ஆழ்வார்திருநகரிக்கு தம்மாழ்வரை மங்களாசாசனம் செய்ய எழுந்தருளினார். அப்பொழுது அவரது அனுட்டானத்திற்காகத் தாமிரபரணி சங்கணித்துறைக்கு எழுந்தருள்வார். அச்சமயத்தில் அங்கிருந்த ஈரங்கொல்லி இராமானுஜரைத் தண்டனிட்டு வணங்கி, நமது புதல்வர்களைப் பராங்குச நம்பி, குருகூர் நம்பி, வகுளாபரணன், சடகோபன், காரிமாறன் என்று ஒவ்வொருவராக அழைத்து ஸ்வாமியை நமஸ்கரிங்கோல் என்று சொன்னான். அப்பொழுது ஸ்வாமி தானும் ஸம்ஸார வாழ்க்கையில் ஈடுபட்டு புதல்வர்களைப் பெற்று , அவர்களுக்கு நம்மாழ்வாரின் திருநாமங்களைச் சூட்டி, வாய் நிரம்ப அழைக்கும் வாய்ப்பை இழந்தோம் என்று குறைவாளராகக் கருதினார். ஈரங்கொல்லியைப் பார்த்து ஸ்வாமி விலகவில்லை, அவர்களைத் தாழ்வாக நினைத்தது இல்லை, மாறாக ஆழ்வார்களின் திருநாமங்களை புதல்வர்களுக்குச் சூட்டியதைக் கண்டு பெருமிதமடைந்து, தன்னை தாமே குறைவாளராகக் கருதினார் என்ற சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது‌. 


ஈரங்கொல்லி என்ற வண்ணாத்தான் சமுதாயத்துக்கு ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஒரு தனியிடம் இருப்பதை மேற்கூறிய சம்பவங்கள் தெளிவாக விளக்குகின்றன. இதிலிருந்து சாதிகள் பகவத்கைஙகர்யத்துக்கும் பழகுவதற்கும் தடையாக இருந்தது இல்லை என்பதனை அண்ணல் இராமானுஜர் பல சம்பவங்களின் மூலம் நடத்தி காட்டியவர். 

எதிராசன் என் இதயத்திலுள்ளதால் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கதிரே!!!


எம்பெருமானார் திருவடிகளே சரணம் 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

கம்பனின் அம்பறாத்தூணி

மக்களின் தலைவன்