இயற்கையில் இணைவது இந்து தர்மம்
யானையை வைத்து படமாக்குவது தேவர் காலம் தொடங்கிப் பார்த்து வருகிறோம். யானை என்றாலே தோன்றுவது பெருமிதம். கஜகதி என்று யானை போன்று நடந்து , தன் பெருமித அழகைக் காட்டி நடந்து வருவது என்று திருவரங்க நாதனுக்கே உரிய ஒரு நடை அழகு. அது ஒரு மரபாக இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.
யானை என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சென்று அழகை ரசிப்பதும் , அதனால் மகிழ்ச்சி கொள்வதும் என்பது இயற்கை. திருமங்கையாழ்வார் பெருமாளை யானையாகப் பாவித்து ஒரு பாடலை பாடியுள்ளார்.
"பொன்னானாய் பொழில் ஏழும் காவல் பூண்ட
புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என்னானாய் என்னானாய் என்னால் அல்லால்
என்னறிவேன் ஏழையேன் உலகமேத்தும்
தென்னானாய் வடவானாய் குடபாலனாய்
குணபால மதயானாய் இமையோர்க்கு என்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி
திரு மூழிக் களத்தனாய் முதலானாயே"
உலகம் துதிக்கும் வண்ணம் ,
தென்னானாய் - தெற்கு பகுதியில் திருமாலிருஞ்சோலை எழுந்தருளி அருள்பாலிக்கும் அழகன் என்ற யானை
வடவானாய் - வடக்கு பகுதியில் திருவேங்கடம் எழுந்தருளி அருள்பாலிக்கும் மலை உறையும் வேங்கடவன் என்ற யானை
குடபாலனாய் - மேற்கு திசையில் திருவரங்கம் எழுந்தருளி அருள்பாலிக்கும் உறையும் ரங்கநாதன் என்ற யானை
குணபாலனாய் - கிழக்கு திசையில் திருக்கண்ணபுரம் எழுந்தருளி அருள்பாலிக்கும் சௌரிராஜன் என்ற யானை .
என்னானாய் - என்னுடைய யானை
இமையோர்க்கு என்றும் முன்னானாய் - மூவரில் முதல்வன் என்ற யானை
என்று எம்பெருமானை யானையாகப் பாவித்துப் பாடியுள்ளார். யானை என்பது காட்டு மிருகமாக இருந்தாலும் , பழகினால் அது நமக்கு அடங்கி வாழும். ஆனால் சுதந்திரமாக இருக்க விரும்பும் ஒரு மிருகம். அதன் சுதந்திரம் காரணமாகவே குளித்துவிட்டு மண்ணை தன் தலையில் போடும். அதன்மேல் ஏறுவதற்கு அதன் காலை பிடித்து ஏறவேண்டும். யானை சுதந்திரமாக இருப்பதனால் சில சமயங்களில் கட்டுக்குள் அடங்காமல் தொல்லைகள் கொடுக்கக்கூடிய மிருகமாகவும் மாறுகிறது.
எம்பெருமான் சிசுபாலன், இராவணன் , துரியோதனன் போன்றவர்களுக்கு மதயானை போன்றவன். பக்தர்கள் பிரகலாதன் போன்றவருக்கு அடங்கிய யானை போன்றவன். அவனை அடைவதற்கு அவன் திருவடியே தஞ்சம் என்பது யானை மேல் ஏறுவதற்கு யானைக்கால் போன்று. யானையின் மணி ஓசை என்பது பிரபந்தம், வேத ஒலிகள் போன்று. மணி ஓசை கேட்டால் யானையாகிய எம்பெருமான் வருவான் பின்னே . அங்குசம் என்பது யானையை அடக்க உதவும் ஒரு கோல். அது போன்று பராங்குசன் என்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு அடங்கியவன் எம்பெருமான்.
யானையுடன் பேசவேண்டும் என்றால் அதற்கு என்று ஒரு மொழியில் பேசவேண்டும். அதனைத் தன்வசம் பழக்குவதற்கு. யானையுடன் பேசுவது என்பதும் கடவுளிடம் பேசுவதும் என்பது தனித்திறமை வாய்ந்தது. இந்தத் திறமை சமீபத்திய குறும்படம் ஒன்றில் வெளியாகியுள்ளது.
சனாதன தர்மம் என்பது இயற்கையுடன் ஒன்றி வாழும் ஒரு முறையைக் கற்பிக்கும் ஒரு மரபு. இந்த மரபு என்பது காலகாலமாக இந்த மண்ணில் புதைந்து பழக்கத்தின் வாயிலாக வெளிவருகிறது. இந்த மரபையும் மண்ணையும் போற்றுவது தான் சனாதன தர்மம், போற்றுவது நின்று விடும் காலங்களில் மரபும் , அதோடு சேர்ந்து மண்ணும் அழியும். மண்ணில் வாழும் புழு பூச்சிகள் அழியும். இயற்கை மரணிக்கும் என்பது உண்மை.
இதனைச் சமீபத்தில் வெளிவந்த " The Elephant whisperer" என்று குறும்படம் ( 40 நிமிடங்கள்) அழகாக எடுத்துரைக்கிறது. அது ஒரு ஆஸ்கார் விருது பெற்ற ஒரு குறும்படம். அதனை மூன்று முறை பார்த்து வியப்படைந்தேன். அந்த படத்தில் கேமிரா அதி அற்புதமான முறையில் கையாளப்பட்டுள்ளது. அது ஒரு பெருமை சேர்க்கும் விதமாக இருக்கலாம். அதையும் தாண்டி என்னைக் கவர்ந்த விதங்கள் பல.
அநாதையாகக் காட்டிலிருந்த இரண்டு யானைகள் ரகு மற்றும் அம்முவை வளர்க்கும் இரண்டு பழங்குடி மக்களின் உண்மை கதை. பொம்மன் என்ற ஆண் , பெள்ளி என்ற பெண் இரு பழங்குடி மக்கள், யானையை நேசிக்கும் என்ற எண்ணத்தில் ஒன்றி திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்களும் , அவர்கள் சார்ந்த காட்டு நாயக்கன் என்ற இனத்தவர்கள் வாழும் வாழ்க்கையை ஒரு பாடமாக எடுத்துள்ளனர். அதில் பொதிந்து இருக்கும் மண்ணின் மனம் மற்றும் மரபு சார்ந்த விஷயங்கள் பல வெளிப்படும் விதத்தில் எடுத்து இருப்பது என்பது நமது பார்வை.
முதலில் சனாதன தர்மம் என்பது மேற்குடி மக்கள் என்ற எண்ணத்தை மாற்றி, அது மலைவாழ் பழங்குடி மக்களுக்கும் சொந்தம் என்பது பல இடங்களில் காண்பிக்கப்பட்டுள்ளது. சனாதன தர்ம கடவுள் படங்களை வழிபடுவது , விநாயகர் கோயில் சென்று யானைகளுடன் வழிபடுவது என்பது இதனைக் காட்டுகிறது.
கல்லைத் தெய்வமாக வணங்கி விலங்குகளை நேசிப்பது என்பது பாரத தேசத்தின் எல்லா இடங்களிலும் காணப்படும் மரபு. யானையை நேசிக்கும் இரு மனங்கள் இணைந்து , கல்லைக் கடவுளாக நினைத்து வணங்கி தாலிகட்டுவது என்ற பழங்குடி மக்களின் மரபு என்பது மண்ணின் மனம். சனாதன தர்மத்தின் நீட்சி.
மலை மேல், காடுகளில் நடந்து கடந்து செல்லும் போது, அங்குள்ள மக்கள் செருப்பு அணிவதில்லை என்பது அவர்களுடைய பழக்கம். அதற்கான காரணம் மலையைத் தெய்வமாக மதிக்கிறார்கள் என்பதனால் ஏற்பட்ட பழக்கவழக்கம். இது பழங்குடியினர் பழக்கம் . இராமானுஜர் திருப்பதி மலைமேல் பாதம் பதிக்காமல், முடங்கால் இட்டுச் சென்றார். வைணவர்கள் இன்றும் மலைமேல் செருப்பு அணிந்து செல்வதில்லை. நைமிசாரண்யம் என்ற திவ்ய தேசம் வனமாகவே வணங்கப்பட்டு வருகிறது. பண்டிதர்கள் முதல் பழங்குடியினர் வரை பழக்கம் ஒன்று , பழக்கத்திற்கான காரணமும் ஒன்று . இதுவே மண்ணின் மரபு.
யானை வளர்ப்பும் கடவுளை வணங்குவதும் ஒன்று என்று கடவுளை வணங்கி விட்டுச் சொல்லும் வார்த்தை என்பது , சனாதன தர்மத்தின் மரபு. மக்களின் சேவை மகேசன் சேவை என்ற மண்ணின் பழமொழியின் மரபு. செய்யும் தொழிலைத் தெய்வமாகக் கருதும் சனாதனதர்மத்தின் ஆணிவேர். கர்த்தத்துவம் என்பது இயற்கை. கர்மாவின் மூலம் ஞானத்தைப் பெற்று , பரமாத்மா தர்சனம் அடைவது என்பது கண்ணனின் கீதை மொழி. அதனைச் சுலபமாகப் பின்பற்றுபவர்கள் மண்ணின் மனத்துடன் பின்பற்றுவர்கள் நமது பழங்குடி மக்கள் என்பதனைக் காட்டுகிறது.
ஒரு காட்சியில் காட்டிலிருந்து வாழ்வதற்குத் தேவையானவற்றை மிகக்குறைவில் எடுத்து வாழ்கிறோம் என்பது , ஆசையை ஒழித்து சமூகம் சார்ந்த சிந்தனையை உருவாக்கும் தன்மை என்பது விளக்கப்படுகிறது. இயற்கையைப் பாதுகாக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் கற்பிக்கப்படுகிறது.
ஒரு காட்சியில் குழந்தைகளுக்கு இந்த பாரம்பரிய கலையான யானை வளர்க்கும் தொழிலை கற்றுக் கொடுத்து , அவர்களுடன் சேர்ந்து பெரியவர்களும் வாழ்வது என்பது இந்தக் கலையும் தொழிலும் இயற்கையும் வளரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் வெளிப்படுகிறது. இது ஒருவகையான குருகுல கல்வி போன்றுதான், வாழ்க்கையுடன் கல்வி என்ற மண்ணின் மரபு.
ஒரு காட்சியில் இரண்டு யானைகளும் விளையாடும் காட்சி. நாங்கள் யானைக்கு அதிகமாகக் கற்றுக்கொடுக்க முடியாது. யானை யானையிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ளும் என்று பெள்ளி பெண்மணி கூறுவதாக வரும் காட்சி. மனிதனும் சக மனிதர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கிறான். அனைத்து உயிரினங்களும் இயற்கையிடம் இருந்து கற்றுக்கொள்கின்றன என்ற உயர்ந்த தத்துவம் கற்பிக்கப்படுகிறது. அனைத்து உயிரினங்களின் இருப்பிடம் நாராயணன். அவன் மூலம் அனைத்தும் கற்பிக்கப்படுகிறது.
இயற்கையை வணங்க வேண்டும். பாதுகாக்கவேண்டும் என்பது நமது மண்ணின் மனம். மரங்களையும் மலைகளையும் பறவைகளையும் விலங்குகளையும் தெய்வமாக வணங்குவது என்பது நமது தர்மம். பழங்குடி முதல் பண்டிதர்கள் வரை பாரதத்தில் கடைப்பிடிக்கப்படும் இந்தப் பழக்கவழக்கங்கள். பழங்குடி மக்கள் என்பவர்கள் வேறல்ல அவர்களும் இந்த மரபின் அங்கங்கள் என்பதனை இந்தப் பழக்கவழக்கங்கள் நிரூபணம் செய்கின்றன.
மண்ணில் பிறந்து மாற்று மதம் பின்பற்றினாலும் படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன் வேல்ஸ் என்பவர் முத்தாய்ப்பாக " அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்" என்ற ஔவையார் வாக்கை மனதில் கொண்டு, அவரது தாய் தந்தைக்கு இந்த குறும் படத்தை சமர்ப்பித்து மண்ணின் மனம் மாறாமல், மரபு திரிபு செய்யாமல் உண்மையான மண்ணின் மனத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி.
இயற்கையோடு இணைந்தது இந்து தர்மம், வாழ்க்கை என்றால் மிகையாகாது.
மகர சடகோபன்
தென்திருப்பேரை
கருத்துகள்
கருத்துரையிடுக