அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி - 8

 


                    உடையவர் - ஆழ்வார் திருநகரி


பெருமாள் பக்தர்கள் அனைவரும் சமம், அவர்களிடையே எந்த வகையிலும் வித்தியாசம் கிடையாது என்பதனையும் , அவர்கள் எல்லோரும் "ப்ரபந்ந குலம்" என்றும் , ப்ரபந்ந குலத்திற்கு ஆதி மானிட குருவாக அவதரித்து அனைவரையும் ஜன்ம உத்தாரகம் செய்தவர் " ப்ரபந்ந ஜன கூடஸ்தர்" என்று அழைக்கப்படும் நம்மாழ்வார் என்றும், மாறன் அடி பணிந்து உயர்ந்த நம்மிராமாநுஜன் அனைவரையும் உய்விக்க வந்த உத்தமர் என்றும், கீழே இதுவரையில் பார்த்து வந்தோம்.‌ உய்விக்க ஒரே வழி உடையவர் திருவடி என்பதனால், அவரே ஶ்ரீ வைஷ்ணவ ஆசாரியர்களில் மையமாகவும் , தலைசிறந்தவராகவும் விளங்குகிறார் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. 


ஆசார்யஹ்ருதயம் என்ற கிரந்தத்தை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்ற ஆசாரியர் அருளிச் செய்தார். இவர் ஸ்வாமி பிள்ளைலோகாச்சார்யார் என்பவரின் திருத்தம்பி. ஶ்ரீ வடக்கு திருவீதிப்பிள்ளை என்பவரின் இரண்டாவது குமாரர்.‌ 


"ஆத்யஸ்ய ந குலபதே வகுளாபிராமம்" என்கிறபடி நம்மாழ்வார் என்ற ஆசாரியரின் திருவுள்ளக் கருத்துகளைக் கூறுவதனால் இதற்கு "ஆசார்யஹ்ருதயம் " என்று பெயரிட்டு அழைத்தனர்.‌ அதி அற்புதமான நூல்.‌


அந்த ஆசார்யஹ்ருதயம் சூரணை 85ல்,


"யாக அனுயாக உத்தர வீதிகளில் 

காய அன்ன ஸ்தல சுத்தி பண்ணின

வ்ருத்தாசாரமும்"


இந்த சூரணை யாகம் , அனுயாகம், உத்தர வீதிகளில் என்று மூன்று இடங்களில் நடந்த மூன்று பாகவதோத்தமர் பெரியவர்களின் பெருமைகளைப் பரக்கப் பேசுகிறது. அவர்கள் மூவரும் பிறப்பினால் பிராமணர்கள் அல்ல. ஆனால் நம்மாழ்வார், இராமானுஜரால் ஏற்படுத்தப்பட்ட ப்ரபந்ந குலத்தில் முக்கியம் வாய்ந்த ஶ்ரீ வைஷ்ணவர்கள். 


பெருமாளுக்கு திருவாராதனம் செய்வதை "யாகம்" என்றும் , திருவாராதனம் செய்யும் போது பெருமாளுக்குத் தளிகை கண்டருள்வது என்பது வழக்கம், பெருமாள் கண்டருளிய தளிகையை பக்தர்களாகிய நாம் தினம் ஸ்வீகரிக்கவேணும் என்பது மிகவும் உயர்ந்த விஷயமாகக் கருதப்படுகிறது. கண்டருளிய பிரசாதத்தை உட்கொள்வது "அனுயாகம்" என்று இங்கே குறிப்பிடப்படுகிறது. ( பிரசாதம் கடவுளுக்குச் சமர்ப்பிப்பது என்பது தளிகை கண்டருள்வது என்று ஶ்ரீ வைணவத்தில் அழைக்கப்படுகிறது).


யாகத்தில் காய சுத்தி பண்ணின வ்ருத்தாசாரம் : 


ஶ்ரீ ராமானுஜர் தினம் வடகாவேரிக்கு எழுந்தருளி தீர்த்தமாடுவது என்பது வழக்கம். வடகாவேரிக்கு செல்லும் போது முதலியாண்டான், கூரத்தாழ்வான் திருத்தோள்களில் கைவிட்டுச் செல்வதும் , தீர்த்தமாடி அனுட்டானத்திற்குச் செல்லும் போது தனுர் தாஸர் என்று அழைக்கப்படும் உறங்காவில்லி தாஸர் திருத்தோளில் கையிட்டு வருவதும் வழக்கம். 


வடகாவேரியில் தீர்த்தமாடி நேராக மடம் சென்று பெருமாள் திருவாதரணம் செய்வது என்பது ஶ்ரீ ராமானுஜர் என்ற உடையவரின் வழக்கம். உறங்காவில்லி தாஸர் காய பரிசம் அல்லது திருமேனியைத் தீண்டுவதன் ( உடம்பை தொடுவது) மூலம் உடையவருக்குக் காய சுத்தி அதாவது திருமேனி சுத்தி ஏற்படுகிறது என்று இந்த சூரணை காட்டுகிறது. 


உறங்காவில்லி வில்லி தாஸர் சரித்திரத்தை பின்னால் பார்க்கலாம். வேத சாஸ்திரங்களில் தலைசிறந்தவர் ஶ்ரீ ராமானுஜர், அவரே இந்த அணுகுமுறையை நடைமுறையில் காட்டி ப்ரபந்ந குலத்தில் ஜன்ம விரோதம் இல்லை என்றும் , பிறந்த சாதி என்பது தடையாக இருக்க முடியாது என்றும் காட்டிய சம்பவம். 


அனுயாகத்தில் அன்ன சுத்தி பண்ணின வ்ருத்தாசாரம்


நம்பிள்ளை என்பவர் பெரிய ஆசாரியராக     ஶ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்திலிருந்தவர்.  நம்பிள்ளை கார்த்திகை மாதத்தில் கார்த்திகை        நக்ஷத்திரத்தில் அவதாரம் செய்தவர். இவருடைய பிரதான சிஷ்யர்கள் ஶ்ரீவடக்கு திருவீதிப்பிள்ளை,  ஶ்ரீ பெரியவாச்சான் பிள்ளை போன்றவர்கள். இவரது திருவாய்மொழி வ்யாக்னம் " ஈடு வ்யாக்னம்". இதைப் பட்டோலைப் படுத்தியவர் ஶ்ரீ வடக்கு திருவீதிப்பிள்ளை, இந்த வ்யாக்னம் "ஈடு முப்பத்தாறாயிரப்படி" என்று சம்பிரதாயத்தில் அழைக்கப்படுகிறது.


திருக்குருகைப் பிள்ளான் வ்யாக்னம் - ஆறாயிரப்படி.

நஞ்சீயர் வ்யாக்னம் - ஒன்பதனாயிரப்படி

நம்பிள்ளை வ்யாக்னம் - ஈடு முப்பத்தாறாயிரப்படி

பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்னம் - இருபத்துநாலாயிரப்படி 

அழகிய மணவாள ஜீயர் வ்யாக்னம் - பன்னீராயிரப்படி .


ஆகிய ஐந்து திருவாய்மொழி உரைகளில் நம்பிள்ளை உரை என்பது மிகப்பெரிய உரை.  இந்த உரைகள் அனைத்தும் மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளது. தமிழ் சிவந்த மாணிக்கம் ( மணி) , சமஸ்கிருதம்  செம்பவளம்      (பிரவாளம்)  சேர்ந்து கோர்த்த கோவை. படி என்பது எழுத்துகளின் அளவுகளைக் கொண்டது.‌ மெய்யெழுத்துக்கள் நீங்கலாக உயிர் மற்றும் உயிர்மெய் எழுத்துக்கள் எண்ணிக்கை 32 என்பது ஒரு படி. 


நம்பிள்ளைக்குச் சிஷ்யராகப் பிள்ளை ஏறு திருவுடைய தாஸர் என்பவர் இருந்தார். அவர் ஒடுக்கப்பட்ட  ஒருகுலத்தில் அவதரித்தவர். இவரைப்பற்றி இதற்கு மேல் குறிப்பு ஒன்றும் கிடைக்கப்பெறவில்லை.‌


நம்பிள்ளை தினம் பெருமாள் திருவாராதனம்          செய்தபிறகு, பெருமாளுக்குப் பிரசாதம் அமுது கண்டருளச் செய்வது என்பது வழக்கம். அந்த பிரசாதம் அமுதை பிள்ளை ஏறு திருவுடைய    தாஸர் என்பவரின் திருக்கைகளால் தொடச்சொல்லி வாங்கி நம்பிள்ளை ஸ்வீகரித்தருள்வார். இதுவே அன்ன சுத்தி ஏற்படுத்தப்பட்ட வ்ருத்தாசாரம் என்று காட்டப்பட்டது. 


நம்பிள்ளையின் அவதார ரகசியம் என்பது ஒரு சுவையான சம்பவம். திருமங்கையாழ்வார் கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தில்      அவதரித்தவர். அவர் திருகண்ணமங்கை  பெருமாளை மங்களாசாசனம் செய்கிறார்.                திருகண்ணமங்கை என்பது பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரத்தில் ஒன்று. பெருமாள் கவியின் பொருளைக் கேட்க, இப்படியெல்லாம் கேட்டால் கவியின் பொருளைக் கொடுக்கமுடியாது. சிஷ்யனாக நின்று கேட்டால் கவியின் பொருள் கொடுக்கமுடியும் என்று திருமங்கையாழ்வார் கூறியதாகச் சரித்திரம். 


"மெய்ம்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்றுஏந்திய கண்ண!* நின் தனக்கும் குறிப்புஆகில் கற்கலாம்* கவியின் பொருள் தானே" பெரிய திருமொழி 7-10-10


நம்பிள்ளை திருமங்கையாழ்வார் அவதரித்த கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தில் ஆழ்வாராக அவதாரம் செய்து , பெரியவாச்சான் பிள்ளை ஆவணி ரோகிணி நக்ஷத்திரத்தில் கண்ணனாக அவதரித்து சிஷ்யனாக நின்று கவியின் பொருள் கேட்டு, திருவாய்மொழி வ்யாக்னம் இருபத்து நாலாயிரப்படி என்ற பரந்த வ்யாக்னம் ஏற்படுத்தினார். சம்பிரதாயத்தில் வ்யாக்ன சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட பெரியவர். 


நம்பிள்ளை கோஷ்டி என்பது மிகப்பெரிய கோஷ்டியாக இருந்தது என்று குறிப்புகள் கிடைக்கின்றன. அந்த ப்ரபந்ந கோஷ்டியில் அனைவரும் சமம் என்பதனை இந்த அன்ன சுத்தி என்பது காட்டுகிறது.ஆளவந்தாருக்கு மாறனேர் நம்பி போல் , நம்பிள்ளைக்கு பிள்ளை ஏறு திருவுடைய தாஸர்.


உத்தர வீதியில் ஸ்தல சுத்தி பண்ணின வ்ருத்தாசாரம்: 


நம்பிள்ளை கோஷ்டியில் பிள்ளை நடுவீதிப் பட்டர் என்பவர் சிஷ்யராக இருந்தார். இவர் கூரத்தாழ்வான் வம்சத்தைச் சார்ந்தவர். முக்குறும்பையும் அறுத்தவர் கூரத்தாழ்வான். சம்பிரதாயத்திற்காக தன் கண்களை இழந்தவர். அப்பேர்ப்பட்ட கூரத்தாழ்வான் வம்சத்தில் பிறந்தவர்.‌ இவர் திருவரங்க உத்திர வீதியில் வாழ்ந்து வந்தார்.‌


நம்பிள்ளை கோஷ்டியில் பிள்ளை வானமாமலை தாஸர் என்பவர் சிஷ்யராக இருந்தவர். இவர் பிறப்பால் மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்று குறிப்புகள் கிடைக்கின்றன.‌ 


பிள்ளை நடுவீதிப்பட்டர் உத்திர வீதியிலுள்ள தம் இல்லத்திற்கு கிரஹப்பிரவேசம் செய்வதற்குப் பதில் பிள்ளை வானமாமலை தாஸர் திருவடி படும்படி கிரஹம் முழுவதும் வலம் வரச்செய்து , கிரஹ சுத்தி செய்தார். ஆளவந்தார் தன் புதிய மடத்திற்கு மாறனேர் நம்பி திருவடி பதித்து சுத்தி செய்ததுபோல் இந்த சம்பவம். இதுவே உத்தர வீதியில் ஸ்தல சுத்தி பண்ணின வ்ருத்தாசாரம்.  


தொண்டர் குலம் என்ற ப்ரபந்ந குலத்தில், தொண்டு செய்வதே இயல்பாகக் கொண்ட பூணூல் அணியாத குலத்திற்கு ஏற்றம் அதிகம் என்பதனைக் காட்டும் அற்புதமான சூரணை. சொல்லில் மட்டும் இல்லாமல் செயலில் செய்து காட்டியவர்கள் ஶ்ரீ வைஷ்ணவப் பெரியவர்கள்.‌


மகர சடகோபன் 

தென்திருப்பேரை 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

எல்லைச்சாமி

கம்பனின் அம்பறாத்தூணி