அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி - 7

 



ஆசார்ய ஹ்ருதயம் 


"புஷ்ப த்யாக போக மண்டபங்களில் பணிப் பூவும் ஆல வட்டமும் வீணையும் கையுமான அந்தரங்கரை முடிமன்னவனும் வைதிகோத்தமரும் ,மகா முனியும் அனுவர்தித்த க்ரமும்" 

                              ஆசார்ய ஹ்ருதயம் சூரணை 85 


        

மேலை குறிப்பிட்டுள்ள சூரணையில் மூன்று நபர்களின் பக்தியின் சிறப்பையும், அவர்களை மூன்று எம்பெருமான்கள் ஆட்கொண்ட விதத்தையும் அழகாக உரைக்கும் ஒரு சூத்திரம். 


சம்பிரதாயத்தில் மூன்று திவ்ய தேசங்கள் கோயில், திருமலை , பெருமாள் கோயில் என்று பிரதானமாகக் கருதப்படுகிறது. கோயில் என்பது அரங்கன் உறையும் திருவரங்கத்தைக் குறிக்கிறது. திருமலை என்பது வேங்கடவன் உறையும் திருமலையைக் குறிக்கிறது. பெருமாள் கோயில் என்பது தேவாதி ராஜன் உறையும் காஞ்சிபுரத்தைக் குறிக்கிறது. 


அரங்கன் எழுந்தருளியிருப்பது போகமண்டபம் என்றும் , வேங்கடவன் எழுந்தருளியிருப்பது புஷ்ப மண்டபம் என்றும் , தேவாதி ராஜன் எழுந்தருளியிருப்பது த்யாக மண்டபம் என்றும் சம்பிரதாயத்தில் அழைக்கப்படுகிறது. இதனை மண்டப த்ரையம் ( மூன்று மண்டபம்) என்றும் அழைப்பார்கள். 


மேலே கூறிய ஆசார்ய ஹ்ருதயம் சூரணை மேலே குறிப்பிட்டுள்ள மூன்று மண்டபத்தில் நடந்த நிகழ்வுகளைக் குறிக்கிறது. 


பாணர் குலத்தில் அவதரித்து வீணையும் கையுமாக இருந்த திருப்பாணாழ்வார் காவேரி கரையில் நின்று கொண்டு தினம் அரங்கனைச் சேவித்த வண்ணம் பன்னிசைத்துப் பாடுபவர். ஒரு நாள் அரங்கனை அவ்வாறாக ஆழ்ந்து அனுபவத்தில் கொண்டிருக்கும் நேரத்தில் அரங்கனுக்குத் தீர்த்தம் கைங்கர்யம் செய்யும் லோகசாரங்க முனி என்ற பிராமணர் காவேரி கரைக்கு வந்ததைப் பாணர் அறியவில்லை. அரங்கனுக்குத் தீர்த்தம் எடுப்பதற்காகக் காவேரி கரைக்கு வந்த லோகசாரங்க முனி, பாணர் மீது கல்லெறிந்து விலகுமாறு அபசாரப்பட்டார். தீர்த்தம் எடுத்துக்கொண்டு அரங்கன் உறையும் கோயிலுக்குச் சென்றால் அரங்கன் கோயில் கதவு திறக்கப்பட முடியவில்லை. எவ்வளவு முயன்றும் முடியவில்லை, அரங்கன்  லோகசாரங்க முனிக்குத் திருப்பாணாழ்வாரிடம் அபாச்சாரப்பட்டது தவறு என்றும் , அவரிடம் சென்று அதற்கான மன்னிப்பைக் கேட்டு அவரைக் கூடவே அழைத்து வரும்படி கட்டளையிட்டார். அதன் படி லோகசாரங்க முனி காவேரி கரைக்குச் சென்று பாணரிடம் நடந்தவற்றிற்கு மன்னிப்பு கோரி , அரங்கன் கோவிலுக்கு வரும் படி அரங்கன் கட்டளை என்று அழைத்தார். திருவரங்க மண்ணில் பாதம் பதிப்பதில்லை என்பது பாணர் குல மரபுப்படி பாணர் எடுத்த முடிவை முனியிடம் கூறினார். பாணரின் வைராக்கியத்திற்கு மதிப்புக் கொடுத்து, லோகசாரங்க முனி தன் தோளில் சுமந்து அரங்கன் முற்றத்திற்கு அழைத்துச் சென்றார். பாணர் அரங்கனைத் திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்துப் பாடலாகப் பாடி அரங்கனோடு கலந்து ஆழ்வார் ஆயினார் என்பது திருப்பாணாழ்வார் சரித்திரம். 


இதுதான் போக மண்டபத்தில் வீணையும் கையுமான அந்தரங்கரை மகாமுனி அனுவர்த்தித்த க்ரமம்.


மண்பானை செய்யும் குயவர் குலத்தில் பிறந்த குயவன் ஒருவர் திருமலையில் வாழ்ந்து வந்தார். அவர் தினம் பானைச் செய்த பிறகு , எஞ்சியிருக்கும் களிமண்ணில் புஷ்பங்கள் செய்து வேங்கடவனை ஆராதித்து வந்தார். ஒருநாள் தொண்டைமான் சக்கரவர்த்தி வேங்கடவனை ஆராதிக்கப் பொன்னால் செய்த புஷ்பங்கள் எடுத்து வந்தார். வேங்கடவன் மீது பொன் புஷ்பங்கள் கொண்டு ஆராதிக்க , அந்த புஷ்பங்கள் மண் புஷ்பங்களாக மாறி ஆராதித்ததைக் கண்டு சக்கரவர்த்தி வியப்படைந்தான். வேங்கடவன் தனது பக்தனான குயவனை அழைத்து வரும்படி சக்கரவர்த்தியிடம் கட்டளையிட்டான். அதன்படி சக்கரவர்த்தி குயவனின் குடிலுக்குச் சென்று வேங்கடவனின் சந்நிதிக்கு அழைத்து வந்தார். 


பணிப்பூ என்றால் காரியம் செய்வதற்கு உதவியாக இருக்கும் பூ " பணிப்பூ". சக்கரவர்த்திக்கு உயர்ந்த வஸ்துவான தங்கத்தினால் செய்யப்பட்ட பூ ஆராதிக்க உதவவில்லை. ஆனால் குயவன் தாழ்ந்த வஸ்துவான மண்ணால் செய்த பூ ஆராதிக்க உதவியது. இங்கே அரசனின் குலம் அதிகாரம் பணம் கல்வி புகழ் என்ற அனைத்து குறும்புகளையும் அறுத்து குடிலில் குயவனைக் காட்டினான் வேங்கடவன்.‌அந்த குயவன் அரசனின் அனைத்து குறும்புகளையும் அறுப்பதற்குக் காரணம் என்பதனால், சம்பிரதாயத்தில் அவருக்கு குறும்பறுத்த நம்பி என்ற திருநாமம். 


இதுதான் புஷ்ப மண்டபத்தில் பணிப்பூவும் கையுமான அந்தரங்கரை முடிமன்னவன் அனுவர்த்தித்த க்ரமம்.‌


தேவப்பெருமாளிடம் அந்தரங்கமாகப் பேசும் திறன் படைத்த திருக்கச்சி நம்பிகளின் ப்ராபவத்தை மகாமுனியான இராமானுஜர் அறிந்து அவரது அனுவர்த்தித்து ஆறு வார்த்தைகளை தேவப்பெருமாளிடம் அருள் பெற்றார் என்பதனை அறிந்தோம். 


இதைத்தான் த்யாக மண்டபத்தில் ஆலவட்டமும் கையுமான அந்தரங்கரை வைதிகோத்தமர் அனுவர்த்தித்த க்ரமம்.‌


குலம் கல்வி செல்வம் புகழ் என்ற‌அனைத்தையும் அறுத்து, பக்தியில் தலைசிறந்த ஏழை எளிய மனிதர்களைக் காண்பித்து அவர்களே உயர்ந்தவர்கள் என்பதனையும் உணர்த்தி, அப்படிப்பட்டவர்களைப் பக்தி மார்க்கத்தில் வரித்து பணிவிடைச்செய்து தமது அகங்காரத்தை அகற்ற வேண்டும் என்பதனை அரங்கன் வேங்கடவன் தேவாதி ராஜன் மூவரும் இவ்வுலகுக்குக் காட்டிக் கொடுத்த உண்மையை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆசார்ய ஹ்ருதயம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். 


அன்றைய சூழலில் கோயில் , பக்தி , பக்திக் காண ஞானம், சரணாகதி தத்துவங்கள் என்பது ஒரு சில குறிப்பிட்ட சமுதாயங்களுக்கு மட்டுமே இருந்து வந்துள்ளது என்பது தெரிய வருகிறது. நாலாம் வர்ணத்தினர் என்று அழைக்கப்படும் சமுதாய மக்களுக்கு மேற்கூறிய அனைத்தும் மறுக்கப்பட்டது என்பதுதான் உண்மை என்று சில நிகழ்வுகள் காட்டுகின்றன. 


அந்தச் சூழலில் மதுரகவி, நாதமுனி , யாமுந முனி ( ஆளவந்தார்) , இராமானுஜ முனி போன்ற பெரியவர்கள் வைதிகோத்தம குலத்தில் பிறந்து , பக்தி ஞானத்தில் சிறந்த பக்தர்களிடம் அன்பு காட்டி , சரணாகதி தத்துவங்களை அறிந்த நாலாம் வர்ணத்தில் பிறந்த பக்தனை ஆசார்யனாக மற்றும் சிஷ்யனாக வரிக்கவும் செய்து, பிறந்த சாதி என்பது நாரணனை அடையத் தடை இல்லை என்பதனை புரிய வைத்து புரட்சி செய்தனர். 


ஆசையுடையவருக்கு எல்லாம் ஞானத்தை பொதுவுடைமையாக்கிப் போதித்து , உய்வதற்குச் சரணாகதி தத்துவங்கள் மூலம் நாரணன் திருவடிகளைக் காட்டினார்கள்.‌ அன்றைய சூழலில் இது ஒரு மகத்தான புரட்சி. 


பிறவி சுழலிருந்து ஆத்மாவை விடுவிப்பதில் நோக்கம் கொண்டு, அதற்கான ஞானம் அனைவருக்கும் பொது என்று புரட்சி செய்தவர் இராமானுஜர். ஆத்மாவை உய்விக்க வந்தவர்கள், உடலை அல்ல என்பதுதான் இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும். 



மகர சடகோபன்

தென்திருப்பேரை 


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

எல்லைச்சாமி

கம்பனின் அம்பறாத்தூணி