அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி -6

 



திருக்கச்சி நம்பி


"ஆமுதல்வன் இவன் என்று தன்  தேற்றி

என் நா முதல் வந்து புகுந்து நல்லின்கவி

தூமுதல் பத்தர்க்குத் தான்தன்னைச் சொன்ன என்

வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ ".         

                                              - திருவாய்மொழி 7-9-3               


ஈடு வியாக்கியானம்


"திருப்புற்றுக்குக் கீழே கரியமாணிக்காழ்வார் திருமுன்பின் ஸோபாநத்திலே ஆள     வந்தார் எழுந்தருளியிருக்க, உடையவர் திருப்புற்றுக்குக் கிழக்காக எழுந்தருளியிருக்க உடையவரைக் கண்டு 'ஆமுதல்வன் இவன்' என்று  அருளிச்செய்தாராம்" என்று அருளிச்செய்யப்பட்டுள்ளது. 


ஆம் முதல்வன் என்று மங்களாசாசனம் செய்யப்பட்ட இளையாழ்வார் யாதவப் பிரகாசர் காசி யாத்திரையில் செய்த சதிவலையிலிருந்து தப்பிகாஞ்சி திவ்யதம்பதிகளினால் வேடுவன் வேடுவச்சி ரூபத்தில் காப்பாற்றப்பட்டு காஞ்சி என்ற சத்ய விரத க்ஷேத்திரத்திற்கு வந்தார். அதன்பிறகு இளையாழ்வார் திருக்கச்சி 

நம்பியிடம் பாடம் பயின்றும், அவர் கட்டளையின் பெயரில் சாலைக் கிணற்றிலிருந்து தீர்த்த கைங்கர்யம் செய்து வந்தார். 


திருக்கச்சி நம்பி காஞ்சியிலிருந்து   பூவிருந்தவல்லி செல்லும் பொழுதெல்லாம் 

ஶ்ரீபெரும்புதூரில் வாழ்ந்துவந்த இளையாழ்வாரின் திருதகப்பனார் ஶ்ரீ ஆசூரி கேசவ சோமாயாஜி இல்லத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  நீண்டநாள்கள் கேசவ சோமாயாஜி , காந்திமதி அம்மையார் தம்பதிகளுக்கு மக்கட்பேறு இல்லாமல் இருந்தது. காஞ்சி வரதனிடம்  சகஜமாக உரையாடும் வழக்கம் கொண்ட திருக்கச்சி

நம்பியிடம், மக்கட்பேறு வாய்ப்பதற்கான 

விண்ணப்பத்தை வரதனிடம் வைத்து , அவன் அருளும் பதிலைக் கூறுமாறு  சோமாயாஜி  வேண்டினார்.  


"திருவல்லிக்கேணி ப்ருந்தாரண்ய சேக்ஷத்திரத்தில் கைரவிணி திருக்குளக்கரையில் புத்திரகாமேஷ்டி யாகத்தை செய்து பார்த்தசாரதியின் திருவருளைப் பெறுமாறு " என்று காஞ்சி தேவாதிராஜன் பதிலைக் கேட்டு அருளினார்.  அதன்படி பார்த்தசாரதி எம்பெருமானை வேண்டி யாகம் செய்ய, சோமாயாஜூலு காந்திமதி தம்பதிகளுக்கு ஆதிசேஷன் அவதாரமாக  இளையாழ்வார் சித்திரை திருவாதிரை 

நக்ஷத்திரத்தில் அவதரித்தார். சிறுபிராயம் முதல் திருக்கச்சி நம்பி இளையாழ்வாரை நன்கு அறிவர். 


திருக்கச்சி ஶ்ரீபாதத்திலே ஒரு ஶ்ரீவைஷ்ணவர் ஆஸ்ரயித்து 'அடியேனை அங்கீகரித்தருள வேணும்' என்ன: நம்பி பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய, பெருமாளும் நம்மை அவனுக்குச் சொல்லும் என்ன, நம்பியும் பெருமாள் ப்ரபத்தியை அருளிச்செய்ய,ஶ்ரீவைஷ்ணவரும் க்ருதார்த்தராய் க்ஷணகாலமும் நம்பியை பிரியாது ஸேவிக்க".                                                                                                       - வார்த்தா மாலை 150 


வார்த்தா மாலை 150 பொருள்


திருக்கச்சி நம்பி தன்னை அடைக்கலம் புகுந்த ஒரு அந்தண குலத்தைச் சேர்ந்த வைணவனுக்கு, காஞ்சி தேவாதிராஜன் அருளிய ராம கிருஷ்ண வராஹ சரம ஸ்லோகங்களை அர்த்தத்தோடு உபதேசித்தார். அவன் திருக்கச்சி நம்பி திருவடித் தொழுது , அவரை விட்டு ஒரு நிமிடம் கூட பிரியாமல் இருந்து வந்தான். அவனுடைய தேஹபந்துக்களுக்கு இந்தச் செயல் என்பது பிடிக்கவில்லை. அவர்கள் சாதி நெறியில் குருவை ஆஸ்ரயிக்க வேண்டும் நிர்ப்பந்தம் செய்தனர். "தேஹபந்துக்களோடு விரோதித்துக் கொண்டு அவர்களிடம் போகாமல் நீர் இங்கிருப்பது தவறு" என்று நிர்ப்பந்தமாக அவரைப் போகச் சொல்ல, நம்பியின் பிரிவு பொறுக்க மாட்டாமல் பெருவருத்தமுற்றவராய் , அப்போதே மூச்சடங்கி பரபதமடைந்தார் என்று கருத்து.


"தொண்டர் குலத்தில் சாதிக் கடந்து நல்லுறவு பேணும் கலாச்சாரம் என்பது காலந்தொட்டு இருந்து வந்துள்ளது என்பது நன்றாகத் தெரிய வருகிறது."


இளையாழ்வார் மனதில் சில சந்தேகங்கள் எழுந்தன , அதற்கான பதிலைக் காஞ்சி தேவாதிராஜனிடம் விண்ணப்பித்து அருளும்படி திருக்கச்சி நம்பியைப் பணிந்து வேண்டினார். நம்பியும் அன்றிரவு திருவலாவட்டம் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் பொழுது , நம்மிராமானுஜனுக்கு சில சந்தேகங்கள் உள்ளனவாம், அதற்கான பதிலை தாங்கள் அருளவேண்டும் என்று விண்ணப்பம் செய்ய , அப்பொழுது தேவாதிராஜன் அருளியது "ஆறு வார்த்தைகள்". ஶ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தின் திரண்ட கருத்துகள் அனைத்தையும் இந்த ஆறு வார்த்தைகளில் அமைத்து அருளினார். 


தேவாதி ராஜன் நம் சம்பிரதாயத்தைக் காத்தவன் என்றால் மிகையாகாது, ஆறு வார்த்தைகளில் சம்பிரதாய செழும்பொருளை வழங்கி, சம்பிரதாயத்தை மேன்மேலும் செழுமையாக வளர்க்க இராமானுஜரைக் காத்து இவ்வுலகுக்கு வழங்கிய தியாகராஜன். ஆறு வார்த்தைகளும் இராமானுஜரின் சீர்மையும் இவ்வுலகுக்கு வெளிவரக் காரணமாக இருந்தவர் வைசிய குலத்தில் உதித்த உத்தமர் திருக்கச்சி நம்பி. 


ஆறு வார்த்தைகள்: 


1. அஹமேவ பரம் தத்வம் – நானே எல்லாவற்றுக்கும் மேலான மெய்ப்பொருள்


2. தர்ஸனம் பேத ஏவ – ஜீவாத்மாக்களும்/அசேதனங்களும் என்னிலிருந்து வேறுபட்டவை (அவை என்னுடைய சரீரமாக விளங்குபவை)


3. உபாயம் ப்ரபத்தி – “என் ஒருவனையே தஞ்சமாகப் பற்றுவாய்” என்னிடத்தில் சரணம் அடைவது ஒன்றே என்னை அடைவிக்கும் வழி.


4. அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம் – தங்களின் மரணத்தருவாயில் இருக்கும் சரணாகதர்களுக்கு, என்னைப்பற்றிய சிந்தனை கட்டாயமில்லை. வராஹ சரம ஸ்லோகத்தில் நானே அறிவித்தது போல, உன்னுடைய அந்திம காலத்தில் நானே உன்னைப்பற்றிய சிந்தனையை ஏற்கிறேன். 


5. தேஹாவஸானே முக்தி – சரணாகதர்கள் தற்போதுள்ள தங்களுடைய இந்த சரீரத்தின் முடிவிலேயே முடிவில்லாத பரமாத்மாவிற்கு கைங்கர்யம் செய்வதற்கான பரமபதத்தை அடைவர்


6. பூர்ணாசார்ய பதாச்ரிதா – மஹாபூர்ணரை (பெரிய நம்பிகளை) ஆசாரியனாக ஏற்றுக்கொள்வார்களா 


மேற்கூறிய ஆறு வார்த்தைகளைக் கேட்டு பரம திருப்தியடைந்தார். இளையாழ்வார். உடனே திருவரங்கம் சென்று பெரிய நம்பியை ஆசாரியராக வரிக்கத் திருவுள்ளம் பற்றி , காஞ்சியிலிருந்து புறப்பட்டார். இளையாழ்வாரைப் பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்து திருவரங்கம் அழைத்துவர , திருவரங்கம் சென்ற ஆளவந்தார் பெரிய நம்பிக்குப் பணித்தார். பெரிய நம்பி திருவரங்கத்திலிருந்து காஞ்சிக்குப் புறப்பட்டார். இருவரும் மதுராந்தகத்தில் சந்திக்க , அப்பொழுது அங்கே சரணாகதி அநுஷ்டித்து, பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்தார் பெரிய நம்பி. அன்று அவருக்குக் கிடைக்கப்பெற்ற தாஸநாமம் " இராமானுஜர்" . ஏரி காத்த இராமனாக மதுராந்தகத்தில் , ஶ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயம் ஏரியைக் காக்க "இராமா நுஜனுக்கு" அருள் வழங்கினார்.


திருக்கச்சி நம்பி " தேவராஜ அஷ்டகம்" என்ற‌ ஸ்லோகம் இயற்றியுள்ளார். திருசந்த விருத்தம் என்ற திருமழிசைப்பிரான் பிரபந்தத்திற்குத் தனியன் இயற்றியுள்ளார். 


"தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீ காஞ்சி பூர்ணம் உத்தமம்

ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம்"



திருக்கச்சி நம்பி திருவடிகளே சரணம்



மகர சடகோபன்

தென்திருப்பேரை 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

கம்பனின் அம்பறாத்தூணி

மக்களின் தலைவன்