இரு துருவங்கள் ஒரு புள்ளியில் -1




ஸ்ரீமந் நாராயணன் அடியவர்களைக் காப்பாற்றுவதற்காகவும், தர்மத்தை மீண்டும் நிலை நாட்டுவதற்காகவும், அவ்வப்பொழுது பல அவதாரங்களைச் செய்துள்ளான். எண்ணற்ற அவதாரங்கள் எடுத்திருந்தாளும், குறிப்பாக தசாவதாரம் என்று பத்து அவதாரங்கள் மிகவும் பிரபலமாகப் பேசப்படுகின்றன நம் பாரத தேசத்தில். 


பத்து அவதாரங்களை வரிசைக்கிரமமாகப் பாடியுள்ளனர் ஆழ்வார்கள்.  


“ தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய், அரியாய் குறளாய் 

மூவுருவின் இராமனாய், கண்ணனாய் கற்கியாய் முடிப்பான் கோயில்”  

என்பது பெரியாழ்வார் வாக்கு. 


 “மீனோடு ஆமை கேழல் அரி குறளாய், முன்னும் இராமனாய் தானாய் பின்னும் இராமனாய் , தாமோதரனாய் கற்கியும் ஆவான் “ என்பது திருமங்கையாழ்வார் வாக்கு. 


 அதிலும் குறிப்பாக இரண்டு அவதாரங்கள் மிகவும் விசேஷம் ஒன்று ஸ்ரீராமவதாரம், மற்றொன்று ஸ்ரீகிருஷ்ணவதாரம் . இவர்களையே பாட்டுடை தலைவனாகக் கொண்டு, பாரதத்தில் மிகப்பெரிய இரண்டு இதிகாசங்கள் ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ மஹாபாரதம் எழுதப்பட்டுள்ளன. 


இருவரும் தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், அடியவர்களின் துன்பங்களைத் துடைப்பதற்காக அவதாரம் செய்தது மட்டுமல்லாமல் , சில குணங்களையும், நல்வழிகளையும் வாழ்ந்து காட்டி, நம் போன்றவர்களும் இன்றளவும் பின்பற்றுவதற்காகக் காவியமாக விட்டுச் சென்றுள்ளனர்.  


இராமன், கிருஷ்ண அவதாரங்கள், ஸ்ரீமந் நாராயணன் என்ற ஒரு புள்ளியிலிருந்து தோன்றிய இரு அவதாரங்கள் என்பதனை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.  


இந்த இரண்டு மகாகாவியங்களும் உணர்த்துவது என்னவென்றால், ஜீவாத்மாக்கள் நல்ல வழியில் நடந்து, பரமாத்மாவைப் பற்றி அறிந்துகொண்டவனிடம் சரணம் அடைந்து, பிறவி சுழலை அறுத்து, எம்பெருமானுக்கு நித்தியமாக கைங்கரியம் செய்யவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை, நம் போன்ற ஜீவாத்மாக்களுக்கு உணர்த்தவே அவதாரம், அவனுடைய காவியங்கள்.  

              

 ஸ்ரீ இராமாயணம் என்ற காவியம் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சரணாகதி காவியம் என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீ மகாபாரதம் ஐந்தாவது வேதம் என்றே போற்றப்படுகிறது. ஸ்ரீ மகாபாரதம் நமக்கு இரண்டு மிகப் பெரிய பொக்கிஷங்களைக் கொடுத்துள்ளது, ஒன்று பகவத்கீதை மற்றொன்று விஷ்ணு சகஸ்ரநாமம். 

                    

இராமன் நீதி நூல்கள் கூறியபடி வாழ்ந்து காட்டி, தர்மத்தை நிலைநாட்டியவன் . இராமன் ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என்று வாழ்ந்தவன். ஆனால் கண்ணன் தர்மத்தை நிலைநாட்டுவதற்கான செய்த செயல்கள் தர்மம் என்று போற்றப்படுகிறது. ராமன் வாழ்ந்த வாழ்க்கையின் படி வாழ்வது என்பதும், கண்ணன் கூறிய உபதேசங்களின் படி வாழ்வது என்பதும் ஒரு ஜீவாத்மா உய்ய வழி என்று காட்டப்பட்டுள்ளது.  

                        

இராமனின் இளமைப் பருவ வாழ்க்கை பிரசித்தமாக இல்லை ஆனால் கண்ணனின் இளமைப் பருவம் பல லீலைகளைப் பேசும், மிகவும் ரசிக்கத்தக்க ஒரு வாழ்க்கையாக இருந்துள்ளது. 

                    

இராமன் சூர்ய குல வம்சத்தில் காலையில் நவமி திதியன்று அரண்மனையிலும், கண்ணன் சந்திரகுல வம்சத்தில் இரவில் அஷ்டமி திதியன்று சிறைச்சாலையிலும் அவதாரம். இதிலிருந்து நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்றால் வாழ்க்கை என்பது இரண்டும் சேர்ந்தே இருக்கும். இரவு பகல், சூரியன் சந்திரன், இன்பம் துன்பம், செழிப்பு ஏழ்மை , மேன்மை எளிமை என்று இரண்டும் சேர்ந்து இருப்பதே வாழ்க்கை என்பதனை ராமகிருஷ்ண அவதாரங்கள் காட்டுகின்றன.. 

                      

இரண்டு துருவங்களும் கலந்து வாழ்க்கை என்ற புள்ளியில் பயணிப்பதை நாம் இந்த அவதாரங்களிலிருந்து கற்றுக் கொள்கிறோம். 

                   

இருவருடைய அவதாரமும், இருள் சூழ்ந்த இவ்வுலகத்தில் விளக்கேற்றி, இருளை நீக்கி ஒளிமயமான வாழ்வை அனைவருக்கும் வழங்கி, தருமத்தை நிலைநாட்டுவதற்கு என்று அறியப்படுகிறது. ஆழ்வார்கள் இவர்களுடைய அவதாரத்தை,



“வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி, விண் முழுதும் உய்யக் கொண்ட வீரன் தன்னை “ என்று இராமனையும் ,


“ஆயர் குலத்தினில் தோன்றிய அணிவிளக்கை “ என்று கிருஷ்ணனையும்,

    

விளக்காய் தோன்றினார்கள் என்று பாடியிருப்பதையும் இந்த தருணத்தில் நாம் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம் . இங்கு இரு அவதாரங்கள் ஒரு புள்ளியில் விளக்காய் உள்ளனர். 

                                                               

பெரியவனுக்குப் பெரியவன், எளியவனுக்கு எளியவன் என்று இராமன் கிருஷ்ணன் அவதாரங்கள் நன்கு நானிலத்தில் நாட்டப்பட்டுள்ளது என்பதனை ஆழ்வார்களின் வாக்குக் கொண்டு அறியப் பெறுவோம்.   

                          

இராமனைப் பற்றிக் கூறும் பொழுது,

"சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான்" என்று பெருமையும் மேன்மையும் வெளிப்படுத்தும் வண்ணம் “ தேவாதி தேவன் “ என்பது ஆழ்வார் வாக்கு.  

                  

கண்ணனைப் பற்றிக் கூறும் பொழுது,

“மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள்

உற்ற போதன்றி நீங்கள் ஒருவன் என்று உணரமாட்டீர் 

அற்றமேல் ஒன்று அறியீர் அவன் அல்லால் தெய்வமில்லை 

கற்றினம் மேய்த்த எந்தை கழல் இணை பணிமின் ஈரே”

என்று பெருமையும் எளிமையும் வெளிப்படுத்தும் வண்ணம் “ கற்றினம் மேய்த்த எந்தை” என்பது ஆழ்வார் வாக்கு.  

                        

ஒருவருடைய அவதாரத்தில் மேன்மையும், மற்றொரு அவதாரத்தில் எளிமையும், நாட்டார் அறிய நன்கு வெளிப்படுத்தப் பட்டது. 

 

பெரியவன் எளியவன் என்ற இரு எதிர் குணங்களை ( இரு துருவங்களாக) ஆழ்வார்கள் வாக்குக்கொண்டு அறியப்பெறுகிறோம். 

                          

இராமன் தனது இளமைப் பருவத்தில் தாடகையை வதம் செய்தான் என்பதனை ஆழ்வார்கள்,                                

“வந்தெரிந்த தாடகைதன் உரத்தை கீறி, வருகுருதி பொழிதர வண்கணை ஒன்றேவி” 

“திண் திறலாள் தாடகைதன் உரம் உருவச் சிலைவளைத்தாய்”  

என்று இராமன் சிறு வயது முதல் வில் வீரனாகவே அறியப்படுகிறான்.  


கண்ணன் மழலை பருவத்தில் பூதனையை வதம் செய்தான் என்பதனை ஆழ்வார்கள்,

“தள்ளி தளர் நடையிட்டு இளம்பிள்ளையாய் 

உள்ளத்தினுள்ளே அவளையுற நோக்கி

கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலையுயிர் 

துள்ள சுவைத்தானல் இன்று முற்றும் , துவக்கற உண்டானால் இன்று முற்றும் “ 


“தாய் முலைப் பாலில் அமுது இருக்க, தவழ்ந்து தளிர் நடையிட்டு சென்று

பேய் முலை வாய் வைத்து நஞ்சையுண்டு, பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய் “ 


“குன்றினால் குடை கவித்ததும், கோலக் குரவை கோத்ததும் குடமாட்டும் 

 கன்றினால் விளாவெறிந்ததும் காலால் காளியன் தலை மிதித்ததும் 

வென்றிசேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும் ………..

என்று கண்ணன் சிறுவயது முதல் விளையாட்டாகவே தன்னுடைய வீரத்தை வெளிப்படுத்தியுள்ளான் என்று ஆழ்வார்களின் வாக்கு மூலம் அறியப்படுகிறோம். 

                           

இருவரும் சிறு வயது முதல், வீரனாக என்ற ஒரு புள்ளியிலிருந்தார்கள் என்று ஆழ்வார்கள் வாக்கு கொண்டு தெளிவாகத் தெரிகிறது.


இராமன் தன்தந்தை தயரதன் சொல் கேட்டு, தொன்னகரம் துறந்து தொல் கானம் அடைந்து, நெடுங்கானம் நெடுநடையாக நடந்து, யுத்தத்தில் தான் முன்னின்று போர் செய்து இராவணனை அழித்து தருமத்தை நிலைநாட்டினான்.  

                             

ஆனால் கண்ணன் பஞ்சவர் தூதனாய் பலதடவை நடந்து, சீரொன்று தூதாய்த் துரியோதனன் பக்கல், ஊரொன்று வேண்டிப் பெறாத உரோடத்தால், பாரொன்றி பாரதம் கைசெய்து பார்த்தற்கு, தேரொன்றை ஊர்ந்தார் என்கிறபடி பார்த்தன் தேர் முன்னின்று பாரதப்போர் செய்து கௌரவர் நூற்றுவரை வீழச்செய்து தருமத்தை நிலைநாட்டினான்.    

                        

இருவரும் நடந்து என்ற ஒரு புள்ளியில் இணைந்து, போர் முன்னின்று என்ற மற்றொரு புள்ளியில் நின்று தருமத்தை நிலைநாட்டினார்கள் என்பதே முக்கியமாகப் புள்ளியாகக் கருதப்படுகிறது இரு அவதார ரகசியங்கள்.             

            

"அம்பொன்நெடுமணிமாட அயோத்தியெய்தி அரசெய்தி அகத்தியன் வாய்தான் முன் கொன்றான் தன் , பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச்செல்வி, உலகு உய்ய திருவயிறு வாய்த்த மக்கள், செம்பவளத்திரள் வாய்த் தன்சரிதைக் கேட்டான் “ 

என்று ஆழ்வார் வாக்குக் கொண்டு இராமன் தன்சரிதை , தான் பெற்ற லவகுசர் மூலம் கேட்டான் என்று அறியப்பெறுகிறோம். 

             

பாரதப்போரில் பீஷ்ம பிதாமகர் அம்பு படுக்கையிலிருந்து “ விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்ல, கண்ணன் அதைச் செவிசாய்த்துக் கேட்டான் என்பதையும் அறிவோம்.  

                              

இந்த இரண்டு அவதாரத்திலும் எம்பெருமான் அவன் சரித்திரங்களை, நாமங்களையும் மற்றவர்கள் சொல்லித் தானே கேட்டதாகவும் என்ற பொதுவான சம்பவம் ( ஒரு புள்ளி) அமைந்துள்ளது சிறப்பிலும் சிறப்பு. 


எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் இரண்டு பெரிய அவதாரங்கள் இரண்டு காலகட்டத்தில், இரவு பகல், சூரியன் சந்திரன், மேன்மை எளிமை, இன்பம் துன்பம் போன்ற, இரண்டு வெவ்வேறு குணங்களைப் பிரதிபலிக்கும் வண்ணத்தில் தோன்றினாலும், ஒரே கொள்கையான அடியவர்களைக் காப்பாற்றவும், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும் என்ற ஒரு புள்ளியில் இணைவதை இந்த ராமகிருஷ்ண அவதாரத்திலிருந்து அறிந்து கொள்கிறோம். 

                  

ஆழ்வார்கள் அனுபவங்களின் மூலம் இருதுருவங்கள் ஒரு புள்ளியில் என்பதனையும் தொடர்ந்து அடுத்த பாகத்திலும் பார்ப்போம். 


ஆழ்வார்கள் வாழி! அருளிச்செயல் வாழி!!


மகர சடகோபன் 

தென்திருப்பேரை 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

எல்லைச்சாமி

கம்பனின் அம்பறாத்தூணி