அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி -5


 


திருக்சச்சி நம்பி மாசி மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் வைசிய குலத்தில் சென்னை அருகாமையில் இருக்கும் பூவிருந்தவல்லி என்ற ஊரில் அவதரித்தார். அவரது இயற்பெயர் கஜேந்திரன்.  ஆளவந்தாரின் சிஷ்யராக வாழ்ந்து வந்தார். திருவாலவட்டம் ( விசிறி வீசும்) கைங்கர்யம் செய்வதில் பேரின்பம் கொண்டவர். 


அவர் அவதரித்த ஊருக்கு அருகாமையில் இருக்கும் பெருமாள் கோயில் என்று சம்பிரதாயத்தில் அழைக்கப்படும் காஞ்சியில் அக்னிக் குண்டத்தில் தோன்றிய தேவாதி ராஜனுக்குத் தினம் திருவாலவட்டம் ( விசிறி வீசும்) கைங்கரியம் செய்து வந்தார்.


இராமானுஜர் யாதவப்பிரகாசர் என்ற ஆசாரியரிடம் வேத, வேதாந்த பாடங்களைப் பயின்று வந்தார்.  காஞ்சி கரியமாணிக்க பெருமாள் சந்நிதியில் யாதவப்பிரகாசர் அன்று அவரது சீடர்களுக்கு வேதம் கற்பித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது ஆளவந்தார் காஞ்சிக்கு எழுந்தருளியிருந்தார். ஆளவந்தார் திருக்கச்சி நம்பியிடம் இளையபெருமாள் (இராமானுஜரின் இயற்பெயர்) இந்த கோஷ்டியில் எங்குள்ளார் என்று வினவ , திருக்கச்சி நம்பி கோஷ்டியில் வெண்மை நிறத்தில் இருக்கும் இளையாழ்வாரைச் சுட்டிக் காட்டினார். ஆளவந்தார் அங்கிருந்தே " ஆமுதல்வன்" என்று இளையாழ்வாரை ஆசிர்வதித்து , இவரே எதிர்கால ஆசாரியன் , விசிஷ்டாத்வைதம் சம்பிரதாயத்தை வளர்க்க வந்தவர் என்று திருக்கச்சி நம்பிக்கு இளையாழ்வாரின் அவதார ரகசியத்தை அருளினார். 


யாதவப்பிரகாசர்  கோஷ்டியில் பயின்று வந்து கொண்டிருந்த காலகட்டத்தில், அவர் கூறிய வேத அர்த்தங்களில் ராமானுஜருக்கு சில கருத்து முரண்கள் தோன்றின. வேத சாஸ்திரத்திற்கு யாதவப்பிரகாசர் கூறிய அத்வைத ரீதியான அர்த்த விசேஷங்களில் ராமானுஜருக்கு மாற்றொரு கருத்து தோன்றிக் கொண்டேயிருந்தது, அதன் விளைவாக ராமானுஜர் மேல் மிகவும் வெறுப்புற்று அவரை காசி யாத்திரைக்கு அழைத்துச் சென்று அவர் உயிரைப் பறிக்கும் வண்ணம் திட்டத்தைத் தீட்டினார் யாதவப்பிரகாசர். இந்த திட்டத்திலிருந்து காஞ்சி தேவாதி ராஜன் , பெருந்தேவி தாயார்  கிருபையால் உயிர் தப்பி காஞ்சி வந்தடைந்து, திருக்கச்சி நம்பியை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டார். திருக்கச்சி நம்பி ஆளவந்தாரின் சிஷ்யர் என்பது மற்றொரு சிறப்பு.  ஆளவந்தார் திருக்கச்சி நம்பியைச் சிஷ்யராக ஏற்றுக்கொண்டதன் மூலம் பிறப்பின் அடிப்படையான சாதிகள், பிரம்ம ஞானத்தை அடைவதற்கும் , அதன் மூலம் நாரணன் திருவடிகளைப் பற்றி அவனை அடைவதற்கும் தடையில்லை என்பதனை தெளிவுபடுத்துகிறது.


திருக்கச்சி நம்பி கட்டளையின் படி தினம் தேவாதி ராஜன் திருமஞ்சனத்துக்காகச்  சாலைக் கிணற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வரும் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் திவ்ய பிரபந்த பாடங்களைப் பயின்று வந்தார். இராமானுஜர் ஏற்றுக் கொண்ட முதல் குரு என்பது வைசிய குலத்தில் பிறந்த திருக்கச்சி நம்பி என்றால் மிகையாகாது. இராமானுஜரின் சமுதாய புரட்சி என்பது அவரது சிறுவயதிலேயே தோன்றி விட்டது.‌ 


அவதார ரகசியம் உணர்த்தும் உண்மை என்பது அரங்கன் அடியார்களின் மத்தியில் சாதிகளுக்கு இடம் இல்லை என்பதனை இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன. மேலும் பிரம்ம ஞானத்தைக் கொடுப்பதிலும் பெறுவதிலும் சாதிகள் ஒரு தடை இல்லை என்பதனையும் இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன. 


இராமானுஜர் குருவின் அன்ன உச்சிட்டத்தைப் புசிக்க எண்ணி , திருக்கச்சி நம்பியை தன் இல்லத்திற்குச் சாப்பிடுவதற்காக அழைத்தார். அன்று திருக்கச்சி நம்பி வருவதற்குக் காலதாமதம் ஏற்பட , இராமானுஜர் கோயிலில் சென்று பார்ப்பதற்காக ஒரு வீதியாகச் செல்ல , மற்றொரு வீதி வழியாக திருக்கச்சி நம்பி இராமானுஜர் இல்லம் சென்றார். இராமானுஜரின் மனைவி திருக்கச்சி நம்பிக்கு உணவு பரிமாறி , சாப்பிட்ட பிறகு இலையை எடுத்து, இடத்தை சுத்தம் செய்து விட்டார். இராமானுஜர் வந்து பார்க்க இந்த சம்பவம் அவருக்கு வருத்தத்தை அளித்தது. குருவின் உச்சிட்டம் கிடைக்காத வருத்தம் மிகவும் அவரை வாட்டியது . 


"வானுளார் அறியலாகா வானவா என்பாராகில்


தேனுளாம் துளப மாலைச் சென்னியா என்பாராகில்


ஊனமாயினகள் செய்யும் ஊனகாரகர்கள் ஏனும்


போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே" 


                                                        - திருமாலை (41) 


தொண்டரப்பொடியாழ்வார் திருமாலை என்ற திவ்ய பிரபந்தத்தில் " ஊனமாயினகள் செய்யும் ஊனகாரகர்கள் ஏனும் போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம்" என்று பாடியுள்ளார். 


ஆழ்வார்களின் பாசுரங்கள் என்பது கடலோசை போன்று அல்ல , அதன் அர்த்தங்களை உள்வாங்கி நடைமுறைப்படுத்தினால் மட்டுமே அந்த திவ்ய பிரபந்த ஒலிகளுக்கும் ஓசைக்கும் அர்த்தங்கள் உண்டு என்பதனை உணர்ந்த உத்தமர் இராமானுஜர். அதன்படி ஒழுகியவர் ஶ்ரீ இராமானுஜர். ஆழ்வார்கள் திருவாக்குப்படி பாகவத சேடம் கிடைக்கப் பெறவில்லை என்று வருத்தம் அவரை மிகவும் வாட்டியது. 


ஆளவந்தாரால் "ஆமுதல்வன்" என்று காட்டிக் கொடுக்கப்பட்ட இளையாழ்வார் என்ற இராமானுஜர், நம்மாழ்வாரால் நாதமுனிக்கு யோகத்தில் திருமேனி வடிவில் காட்டிக் கொடுக்கப்பட்ட "எதிர்கால ஆசாரியன்". ஶ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பன்மடங்கு தழைக்க, வேதாந்த கருத்துக்களுக்கு விசிஷ்டாத்வைத ரீதியாகப் பாஷ்யம் எழுதி, ஆழ்வார்களின் ஈரச்சொற்களின் துணைகொண்டு பாஷ்ய கருத்துகளுக்குச் செழுமைக் கூட்டி, ஆழ்வார்கள் காட்டிய சரணாகதி நெறியே மோக்ஷ ப்ராப்த்திக்கான வழியாக நிலைநாட்டி, ப்ரபந்ந ஜன கூடஸ்தர் என்ற நம்மாழ்வார் வழியில் ப்ரபந்ந குலத்தை உருவாக்கி, ப்ரபந்ந குலத்தில் சாதி உயர்வு தாழ்வு இல்லை , ஏழை பணக்காரன் இல்லை, கற்றவன் கல்லாதவன் இல்லை , அதிகாரத்தால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை , நாராயணன் அடியவர்கள் என்ற ஒரு தகுதியில் அனைவரும் சமம் என்ற சமத்துவம் கண்ட மாபெரும் வள்ளல் என்பதனால் இவரே "ஆம் முதல்வன்". 


அதற்கு மேல் தமிழ் வேதமான திவ்ய பிரபந்தத்தை , வடமொழி வேதத்திற்குச் சமமாகக் கோயிலில் ஓதுவதற்கு ஒரு வழிமுறையை ஏற்படுத்திக் கொடுத்தவர். இது ஒரு சாதாரண காரியம் அன்று. தமிழ்நாட்டையும் தாண்டி தமிழ் வேதம் மாற்றுமொழி பேசும் மண்ணிலும் , இறைவனுடன் தொடர்பு கொள்ள உதவும் ஒரு மொழியாகத் தமிழைக் கொண்டு சேர்த்தவர் அண்ணல் இராமானுஜர். இதற்குத் தமிழகமே இவரைப் போற்றிப் புகழ்ந்து , தமிழகத்தின் தந்தை , தமிழ் காத்த காவலர் என்றெல்லாம் புகழ்ந்திருக்க வேண்டும். இது அறியாது தமிழ் உலகம் தவித்துக் கொண்டிருக்கிறது. தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் வேதத்தை முன்னிறுத்த வந்த "ஆமுதல்வன்" இராமானுஜர் என்ற புரட்சியாளர்.‌


ப்ரபத்தி நெறியை ஏற்று , ஆழ்வார்கள் வழியில் நாரணன்தாள் அடைந்தவர்கள் அனைவரும் ஒரு குலம் " ப்ரபந்ந குலம்" என்றும் , "தொண்டர் குலம்" என்று அறிவித்து , அனைவருக்கும் கோயில் கதவுகளைத் திறந்துவிட்டு அவர்களுக்கு நாரணன் திருவடிகளைக் காட்டியவர் , ஆமுதல்வன் என்ற இராமானுஜர்.    


ஆளவந்தாருக்கு பவிஷ்யதாச்சர்ய விக்ரஹம் மூலம் அவதார ரகசியம் தெரிந்து இருந்தாலும், ஆமுதல்வன் என்று ஆளவந்தாரால் அழைக்கப்பட்ட இளையாழ்வார் என்ற இராமானுஜரைக் காட்டிக்கொடுத்த திருக்கச்சி நம்பிகளின் திருவடிகளைப் போற்றி வணங்குவோம். 


தேவாதி ராஜனிடம் திருக்கச்சி தம்பிகள் பெற்ற ஆறு வார்த்தைகள் என்பது மிகவும் பிரசித்தம். சம்பிரதாயத்தில் உயிரான வார்த்தைகள் . அதன் மூலமே இராமானுஜருக்கு ஒரு தெளிவு ஏற்பட்டு விசிஷ்டாத்வைதம் சம்பிரதாயத்தை மேலும் தழைத்தோங்க வளர்ந்தார் என்பதுதான் உண்மை. 


ஆமுதல்வன், ஆறு வார்த்தைகள் என்ற சம்பிரதாயம் வளர வழிவகுத்த வள்ளல் திருக்கச்சி நம்பியை மனதில் தினம் நிறுத்துவது என்பது ஒவ்வொரு வைணவனின் கடமை. சாதிகளைக் கடந்த ஶ்ரீ வைணவம் , ப்ரபந்ந குலம் என்பது விசிஷ்டாத்வைத சம்பிரதாயம். 


மருவாரும் திருமல்லி வாழவந்தோன் வாழியே

மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே

அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே

ஆறுமொழி பூதூரர்க்களித்தபிரான் வாழியே

திருவாலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே

தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே

தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே

திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே


மகர சடகோபன்

தென்திருப்பேரை






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

கம்பனின் அம்பறாத்தூணி

மக்களின் தலைவன்