அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி -4
சாதிகள் சமுதாயத்தில் பல காரணங்களுக்காக இருந்தாலும் , பரம்பொருளை வழிபாடு செய்து அடைவதில் வேறுபாடுகள் இல்லை என்பதுதான் உண்மை. ஶ்ரீ வைணவத்தில் முதல் மானிட குரு " வேதம் தமிழ் செய்த மாறன்" என்று அழைக்கப்படும் நம்மாழ்வார். அவரை ஆதி மானிட குருவாக அறிமுகப் படுத்தியவர் நான்மறை நவின்று பாடும் அந்தண குலத்தில் உதித்த மதுரகவியாழ்வார்.
அண்ணல் இராமானுஜர் செய்த புரட்சியில் ஒன்று சமுதாய புரட்சி. சமுதாய புரட்சி என்பதனையும் ஒரு ஒழுங்கு முறையில்தான் ஏற்படுத்தினார், பக்தி நெறியை ஏற்றுக் கொண்டு நலந்திகழ் நாரணனை முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டவர்கள் இடையில் சாதி வேறுபாடுகள் இல்லை என்பதனை நிறைய இடங்களில் வழிகாட்டி வாழ்ந்து காட்டிய பெரியவர் இராமானுஜர்.
ஆளவந்தாரின் மற்றொரு முக்கியமான சிஷ்யர் பூவிருந்தவல்லியில் வைசிய குலத்தில் மாசி மாதம் மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் உதித்த திருக்கச்சி நம்பி. இவருடைய இயற்பெயர் கஜேந்திரன். இவர் அனைத்து சாஸ்திரங்களையும் முறையாகக் கற்றுக்கொண்டு ஆளவந்தாரின் சிஷ்யராகக் காஞ்சியில் வாழ்ந்து வந்தார்.
.
திருக்கச்சி நம்பியின் சரித்திரத்தைப் பார்ப்பதற்கு முன் இராமானுஜரின் அவதார ரகசியத்தை அறிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமானது. அப்பொழுதுதான் இராமானுஜரின் சரித்திர மகிமைகளைப் புரிந்து கொள்வதற்கு எளிமையாக இருக்கும்.
மதுரகவியாழ்வார் தனது குருவான நம்மாழ்வாரின் காலத்திற்குப் பிறகு அவரை தினம் வழிபடுவதற்காக திவ்யமங்கள திருமேனி (விக்ரகம்) ஒன்று தரும்படி வேண்டிக்கொள்ள , தாமிரபரணி நீரைக் காய்ச்சினால் விக்ரகம் கிடைக்கும் என்று நம்மாழ்வார் பதிலளித்தார். அதன்படி தாமிரபரணி நீரைக் காய்ச்ச முதலில் திரிதண்டம் அஞ்சலி முத்திரையுடன் ( சேவித்தபடி) ஒரு திவ்ய மங்கள திருமேனி கிடைக்கப்பெற்றது. அந்த திருமேனியைக் கண்டு மதுரகவியாழ்வார் ஆச்சரியப்பட்டு , இந்தத் திருமேனி தங்களைப் போன்று ( நம்மாழ்வாரைப் போன்று) இல்லையே என்று வினவினார். தாங்கள் திரிதண்டம் அஞ்சலி முத்திரையில் இதுவரை சேவை சாதித்தது இல்லை , அதற்கு மாறாக வந்துள்ளதைக் கண்டு வியந்து கேள்விகளைக் கேட்க , இவரே எதிர்கால ஆசாரியராக அவதரித்து இந்த உலகத்தை உய்விக்கவல்ல உத்தமராக திகழப்போகிறார் என்று கூறினார்.
மேலும் இந்த எதிர்கால ஆசாரியன் ( பவிஷ்ய ஆசாரியன்) பற்றி , திருவாய்மொழி " பொலிக பொலிக" என்று பதிகத்தில் இவரது அவதார சிறப்பை குறிப்பிட்டுப் பாடியுள்ளோம் என்று நம்மாழ்வார் மதுரகவிக்குக் குறிப்பிட்டார்.
"பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்,
நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங் கியாதொன்று மில்லை,
கலியும் கெடும்கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
மலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம்"
- திருவாய்மொழி 5-2-1
"நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை கலியும் கெடும் கண்டு கொள்மின்" என்பது இராமானுஜர் அவதாரத்திற்குப் பிறகு நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணற்கு ஆயினரே என்பதனால்.
"மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து * எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா * உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே *
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு * நாரணற்காயினரே"
- இராமானுஜ நூற்றந்தாதி (41)
பிறவிச்சுழலை அறுக்கும் நாரணன் திருவடிகளைக் காட்டிக்கொடுத்த பெருமை இராமானுஜனையே சாரும்.
என்றைக்கும் இருக்கும் இந்த விசிஷ்டாத்வைதம் தத்துவத்தை "ஈன்ற முதல்தாய் சடகோபன் வளர்த்த இதத்தாய் இராமானுஜன்" என்று போற்றப்படுகிறது. அப்பேர்பட்ட உயர்ந்த ஆசாரியனை இந்த உலகுக்குக் காட்டிக் கொடுத்தவர் ஆதிமானிட குருவாக அவதரித்த நம்மாழ்வார்.
அதன்பிறகு தாமிரபரணி நீரைக் காய்ச்ச மாசி விசாகம் அன்று ஆசாரியன் ரூபத்தில் ஞானமுத்திரையுடன் ஞான தேசிகனான நம்மாழ்வார் திவ்ய மங்கள திருமேனி கிடைக்கப்பெற்றது.
நம்மாழ்வார் காலத்திற்குப் பிறகு, மதுரகவியாழ்வார்
"பாவின் இன்னிசை பாடித்திரிவனே " என்றும்,
"எண்திசையும் அறிய இயம்புகேன் ஒண்தமிழ் சடகோபன் அருளையே" என்றும்
"அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன்" என்றும் ,
திருவாய்மொழி மற்றும் நம்மாழ்வார் புகழைப் பரப்பிக்கொண்டும், ஞான முத்திரை ஆசாரியனை ஆராதித்தும் வந்தார். தாமிரபரணி நீரிலிருந்து மதுரகவியாழ்வார் செய்த நம்மாழ்வார் மற்றும் பவிஷ்ய ஆசாரியன் திருமேனிகளை ( விக்ரகம்) இன்றளவும் ஆழ்வார்திருநகரியில் சேவிக்கலாம். ( மேலே நம்மாழ்வார் இராமானுஜர் சேர்த்தி படம் - ஆழ்வார்திருநகரி)
மதுரகவியாழ்வார் காலத்திற்குப் பிறகு திருவாய்மொழி பாடல்கள் கிடைக்காமல் போயிற்று. காட்டுமன்னார் கோவில் இராஜ கோபாலனைத் தரிசிக்க சில வைணவர்கள் வந்து, திருக்குடந்தை ஆராவமுதன் மேல் பாடப்பட்ட திருவாய்மொழி பாசுரங்களைச் சேவித்தனர்.
"உழலை யென்பின் பேய்ச்சி முலையூடு அவளை யுயிருண்டான்,
கழல்கள் அவையே சரணாக் கொண்ட குருகூர்ச் சடகோபன்,
குழலில் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே"
இதைக் கேட்டு கோவிலிலிருந்த நாதமுனிகள் ஓராயிரத்துள் இப்பத்தும்" என்றால் ஆயிரம் பாடல்கள் இருக்கிறதா என்று வினவ , எங்களுக்குத் தெரிந்தது இந்த பத்தும் மட்டுமே என்று பதிலளித்தனர். ஆழ்வார்திருநகரியில் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறினார்கள். ஆழ்வார்திருநகரி சென்று மதுரகவியாழ்வார் வம்சத்தினரிடம் கேட்க, ஆயிரம் பாடல்கள் இல்லை என்றும் , மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரைப் பற்றி இயற்றிய கண்ணிநுண்சிறுத்தாம்பு பத்து பாசுரங்கள் உள்ளதாகவும், அதை புளியமரத்தின் அடியில் தவமிருந்து 12000 தடவை சொல்லினால் கிடைக்கும் என்று கூறினார்கள்.
பிறகு நாதமுனிகள் ஆழ்வார்திருநகரி திருப்புளி அடியில் " கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்ற பிரபந்தத்தை 12000 முறைச் சொல்ல , நம்மாழ்வார் நேரில் தோன்றி திருவாய்மொழி ஆயிரமும், மற்ற ஆழ்வார்கள் இயற்றிய மூவாயிரம் பாடல்களையும், பவிஷ்ய ஆசாரியன் திருமேனியையும் நாதமுனிக்கு வழங்கினார். ஆயிரம் கேட்க நாலாயிரத்தையும் கொடுத்து, எதிர்காலத்தில் ஶ்ரீ வைணவத்தை வழிகாட்டும் ஆசாரியனையும் காட்டிக்கொடுத்த பெருமை, கருணை வள்ளல் குருகூர் சடகோபனையேச் சாரும்.
இந்த பவிஷ்ய ஆசாரியன் திவ்ய மங்கள திருமேனி நாதமுனி மூலமாக ஆளவந்தாரிடம், குருபரம்பரையில் வழி வழியாக வந்தது. அந்த திவ்ய திருமேனியை இராமானுஜரும் வழிபட்டு வந்தார் .இராமானுஜரின் அவதார ரகசியத்தை அறிந்தவர்கள் ஆளவந்தார் மற்றும் அவருடைய அனைத்து சிஷ்யர்களும்,திருக்கச்சி நம்பிகள்உட்பட.
நம்மாழ்வாரின் அவதார ரகசியம் ஶ்ரீமத் பாகவத புராணத்தில்
ஸ்ரீ பாகவதம் 11வது அத்தியாயத்தில்,
கிருதாதி ஷீ நராராஜன் கலாவிச் சந்தி
மஹராஜ் திராவிடே ஷீ சபூவிச
தாம்ரபர்ணீ நதியத்ர “க்ருதமாலா பயஸ்வநீ”
குறிப்பிட்டுள்ளதைப் போல் , நம்மாழ்வார் திருவாய்மொழியில் இராமானுஜர் அவதாரத்தை குறிப்பிட்டுள்ளார். இராமானுஜர் ஆதிசேஷன் அவதாரமாக அவதரித்து 120 வருட காலம் பூரணமாக வாழ்ந்து அடியார்களுக்கு வழிகாட்டிய கருணை வள்ளல்.
ஆதிமானிட குருவான நம்மாழ்வாரைக் காட்டிக்கொடுத்தவர் அந்தணகுலத்தில் தோன்றிய மதுரகவியாழ்வார், இராமானுஜனையே இந்த உலகத்துக்குக் காட்டிக்கொடுத்தவர் வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார்.
சாதிகளைத் தாண்டி மனிதக்குலத்தை உய்விக்க வந்த மாந்தர்கள் காட்டிய வழியே ஶ்ரீ வைணவம்.
மகர சடகோபன்
தென்திருப்பேரை
நல்ல தகவல்கள், படித்து விபரங்கள் அறிந்து கொண்டேன். நன்றி
பதிலளிநீக்குகுஹன்
நன்றி . தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி
நீக்கு