ஆலின் மேல் ஆல்


 "மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெட

காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே "
                             -  திருவாய்மொழி 9-10-1

"ஆலின் மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே" 

ஆலின் மேல் - ஆலமர இலையின் மேல் 

ஆல் அமர்ந்தான் - எம்பெருமான் அமர்ந்தான் 

"துளியும் நீர்கொள் ஆலங் கட்டியும்
மழையும் ஆலி யெனவகுத் தனரே”

என்பது பிங்கல நிகண்டு.


ஆல் என்பது ஆலமரம் மற்றும் நீர் என்பது பொருள். 
ஆலங்கட்டி மழை என்ற வார்த்தையும், ஆலவாய் என்பது நீர் சூழ்ந்த மதுரை நகரத்தின் பெயரும்,  ஆல் என்பது நீர் என்பதை எடுத்துக்காட்டுகிறது. 



நீர் என்பது பரந்து விரிந்து செல்லக் கூடிய குணம். ஆலமரம் பரந்து விரிந்து வளரக்கூடிய மரத்தின் குணம். 



எம்பெருமான் நீர்மை குணம் கொண்டவன். ஆதலால் அவனுக்குத் திருநாமம் "நீர் வண்ணன்" என்று ஆழ்வார்கள் அழைக்கின்றனர். ஆதலால் அவனை ஆல் என்று அழைத்து அமர்ந்தான் என்று ஆழ்வார் அழைக்கிறார்.

ஆல் என்பது பரந்து விரிந்து வளர்ந்து பல கிளைகளை உருவாக்குகிறது. ஆனால் அதன் விதை என்பது மிகவும் சிறியது. 

பல உயிரினங்களுக்கு இருப்பிடமாகவும், நிழல் தரக்கூடிய கற்பக விருட்சமாகவும் இருக்கிறது. பல கிளைகளை உருவாக்கி பலத்துடன் இருக்கக்கூடிய மரம். இதுவே ஆலமரத்தின் நீர்மை குணம்.  நாரங்களுக்கு அயணமாக இருக்கக்கூடிய நாராயணன் என்பது ஓர் ஆல் . 

பிரம்மம் என்ற‌ எம்பெருமான் அணுவிலும் சிறியவன். அவன் அந்தரியாமியாய் ஜீவனுக்குள் இருக்கிறான். ஜீவன் மிகச் சிறியது . சிறியதுள் இருக்கும் சிறியவன், ஆலமர விதை போல். 

அவனே பரந்து விரிந்து பல கிளைகளை உருவாக்கி பலத்துடன் மிகப் பெரியவனாகவும், அனைத்து உயிரினங்களுக்கும் இருப்பிடமாகவும் , நிழல் தரும் ரக்ஷகனாகவும் தாங்கி நிற்கிறான். 

நீர்மை குணம் நிறைந்த , பரந்து விரிந்து பல கிளைகளுடன் ஸ்தாபித்து பலம் பொருந்திய, மிகப்பெரியவனான எம்பெருமான் ஒரு சிறிய இலை துளிரில் சயனித்தான் என்பதனை " ஆலின் மேல் ஆல் அமர்ந்தான்' என்று ஆழ்வார் ஆழமான விஸ்தாரமான பொருளை "ஆல்" என்ற சொல்லின் மேல் வைத்து தமிழுக்கு அழகு சேர்த்தவர் "நம் சடகோபன் என்ற‌ நம்மாழ்வார்". 
 
மகர சடகோபன்
தென்திருப்பேரை

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

கம்பனின் அம்பறாத்தூணி

மக்களின் தலைவன்