அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி - 3
பெரிய நம்பி வாழித்திருநாமம்
அம்புவியில் பதின்மர்கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ந்தோன் வாழியே
உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே
ஓங்கு தனுக் கேட்டைதனில் உதித்த பிரான் வாழியே
வம்பவிழ்தார் வரதருரை வாழி செய்தான் வாழியே
மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே
எம்பெருமானார் முனிவர்க்கு இதமுரைத்தான் வாழியே
எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே
ஆசாரிய பரம்பரையில் இராமானுஜருக்கு முன், திருவரங்கத்தை நிர்வாகம் செய்து வந்தவர் ஆளவந்தார் என்ற ஆசாரியன். ஆளவந்தார் இராமானுஜரைத் திருத்திப் பணிகொள்ள பஞ்ச ஆசாரியர்களை நியமித்தார் என்று பார்த்தோம். இராமானுஜருக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்த நேரடி ஆசாரியன் பெரிய நம்பி ஸ்வாமிகள். அவர்களுடன் சஹமாணவராக இருந்து சாஸ்திரங்களை கற்றவர் மாறனேர் நம்பி. இவர் மிகவும் தாழ்த்தப்பட்ட இனத்தார் என்று சொல்லப்படும் குலத்தில் அவதரித்து, உயர்ந்த மனிதராகச் சாஸ்திரங்களை கற்று நடைமுறையில் அவ்வாறே வாழ்ந்து வந்தவர்.
இவர் பாண்டிய நாட்டில் புராந்தகம் என்ற ஊரில், ஆனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் ஆளவந்தாரை குருவாக ஏற்றுக் கொண்டு திருவரங்க வீதியில் வாழ்ந்து வந்தவர். ஆளவந்தாரின் உபந்நியாசங்களைத் தினமும் கேட்டு , ஞானத்தைப் பெருக்கி ஞானப் பெருக்கராக வாழ்ந்து வந்தார். தனது ஆசாரியன் ஆளவந்தாரிடம் அளவு மிகுந்த பக்தி கொண்டவர்.
திருவரங்கத்தில் தினம் திருவரங்கனைச் சேவித்துக் கொண்டு , அவன் மீதும் அளவுகடந்த பக்தி கொண்டவராக வாழ்ந்து வந்தார். மாறன் என்ற நம்மாழ்வாருக்கு நிகரான பக்தி கொண்டமையால் மாறன் நேர் நம்பி என்ற திருநாமம் இவருக்கு வழங்கப் பட்டது. இவ்வாறாக ஆசாரியன் அரங்கன் பக்தியில் நாளொரு வண்ணம் செலவு செய்து , சிறந்த வைணவ அடியாராகத் திகழ்ந்து வந்தார். ஆளவந்தாரின் விசேஷ கிருபைக்குப் பாத்திரமாக விளங்கியவர்.
ஆளவந்தார் உபந்நியாசம் கேட்கத் திருவரங்கத்திற்குத் திரளாக அடியார்கள் வரத்தொடங்கினர். இடம் பற்றாக்குறையைச் சமாளிக்க புதிய இடம் ஒன்று கட்டப்பட்டது. அதன் திறப்பு விழாவுக்கான தேதி குறித்து ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. மாறனேர்நம்பி விழாவுக்கு முன் , அந்த இடத்திற்குச் சென்று அனைத்து உட்புறங்களையும் பார்வையிட்டு , ஆளவந்தார் அமரும் இடத்தையும் தர்சனம் செய்து, சேவித்துவந்தார். தான் அதற்குப் பிறகு எல்லா இடங்களுக்கும் செல்லமுடியுமோ என்ற ஐயத்தில் இவ்வாறாகச் செய்தார் என்று குறிப்புகள் கிடைக்கின்றன.
ஆளவந்தார் விழாவுக்கு முன் புதிய மடத்துக்கு வந்து பார்வையிட்டு நாளை விழா நடக்க வேண்டியவற்றைக் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், மாறனேர் நம்பி மடத்திற்கு வந்து எல்லா இடங்களையும் பார்வையிட்டு , ஆசாரியன் பீடத்தையும் சேவித்துச் சென்ற விபரங்களைக் கேள்விப்படுகிறார் ஆளவந்தார். மாறனேர் நம்பியின் திருவடி துகள் பட்ட இடத்திற்குப் புனிதம் கிடைத்தாகிவிட்டது . இதற்குமேல் புனிதப்படுத்துவதற்கான நிகழ்வு தேவையில்லை என்று சொல்லி அனைத்து ஏற்பாடுகளையும் ரத்து செய்து , அப்பொழுதே மடத்தில் உபந்நியாசம் நிகழ்த்தினார்.
மாறனேர் நம்பி திருவடி பட்ட இடம் புனிதத் தன்மை பெற்ற இடம் என்று கருதி , வைதிக புனித விழா (சம்ரோக்ஷணம்) தேவையில்லை என்று ஒரு வைணவ ஆசாரியன் கருதும் அளவுக்கு இருந்தது என்றால் , தீண்டாமை எங்கே? வைணவ சம்பிரதாயத்தில்.
ஆளவந்தார் ராஜபிளவை நோயைத் திருமேனியில் சாற்றிக்கொண்டு திருவரங்கத்தில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். ராஜபிளவை நோயால் ஆசாரியன் கஷ்டப்படுவதைப் பார்த்து , மாறனேர் நம்பி தண்டனிட்டு பிரசாதமாக ராஜபிளவை நோயைத் தருமாறு வேண்டினார். ஆளவந்தார் இது ஒரு கொடூரமான வியாதி , அதைத் தாங்கிக் கொள்ளமுடியாது என்று கூறி மறுத்து விட்டார். ராஜபிளவை பிரசாதம் வாங்காமல் திரும்பிச் செல்லுவது இல்லை என்று வைராக்கிய சிந்தனையில் ராஜபிளவை நோயைப் பிரசாதமாகப் பெற்று நம்பி தன் குடிலுக்குத் திரும்பினார். இவருடைய ஆசாரிய பக்திக்கு ஈடு உண்டோ?
ஆளவந்தார் திருநாடு அலங்கரித்த பிறகு (மரணித்தபிறகு) , ராஜபிளவை நோயால் கஷ்டப்படும் மாறனேர் நம்பியைக் கவனிக்கும் பொறுப்பைத் தனது முதன்மை சீடரான பெரிய நம்பியிடம் ஒப்படைத்தார் ஆளவந்தார். அன்றுமுதல் பெரிய நம்பி தினம்தோறும் அனைத்து பணிவிடைகளையும் தினம்தோறும் செய்துவந்தார். பெரிய நம்பி இவருக்குத் தினம் ஸ்நானம் செய்வித்தும், உணவு கொண்டு சென்று உண்பித்தும் உதவி வந்தார்.
மாறனேர் நம்பி இறுதிக் காலத்தில் அவருக்கு திருவுடம்புக்கு செய்ய வேண்டிய அனைத்து ஈமச்சடங்குகளையும் பெரிய நம்பி செய்தார். அன்று அதற்குத் திருவரங்கத்தில் பெரும் எதிர்ப்பு இருந்தது, பெரிய நம்பியை விலக்கி வைத்தனர்.
இராமானுஜரிடம் சென்று " உமது ஆசாரியன் செய்த செயலை பார்த்தீரோ? " என்று கேள்விகளைத் தொடுத்தனர். இராமானுஜருக்கு ஆசாரியன் செய்த காரியமே சரி என்று தெரிந்தும், ஆசாரியன் திருவாக்கினால் மாறனேர் நம்பியின் பெருமைகளை உலகத்தவர்கட்கு உணர்த்த சில கேள்விகளைக் கேட்டார்.
அதற்குப் பெரிய நம்பியின் சமாதானம், பாரதத்தில் விதுரனுக்குத் தர்மன் அந்திமச்சடங்குகளைச் செய்ததது தவறா? இராமாயணத்தில் ஜடாயுக்கு ராமன் ஈமச்சடங்குகளைச் செய்தது தவறா? என்று பதிலுக்குக் கேள்விகளைக் கேட்டு, தர்மன் இராமனை விட அடியேன் உயர்ந்தவனும் அல்ல, விரதன் ஜடாயுவை விட மாறனேர் நம்பி தாழ்ந்தவரும் அல்ல? என்று சமாதானம் அருளினார்.
மேலும் அந்தி தொழ ( சந்தியாவந்தனம்) ஆளிடுவாருண்டோ? பாகவதர் பெருமை தெரிவிக்கும் "பயிலும் சுடரொளி மூர்த்தி" " நெடுமாற்கடிமை" திருவாய்மொழி பாசுரங்கள் நாம் கற்று ஒழுகுகைக்கன்றி வெறும் கடலோசையாகவோ? இதெல்லாம் அடியேன் சொல்லி தேவரீர் உணரவேண்டுமோ? என்று பெரிய நம்பி கூறினார். இது கேட்டு இராமானுஜருக்குப் பெரிய நம்பியிடம் இன்னும் பக்தி பெருக்கெடுத்தது.
"குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து, எத்தனை
நலம் தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகளே"
- திருவாய்மொழி
"அமரவோ ரங்க மாறும் வேதமோர் நான்கு மோதி,
தமர்களில் தலைவ ராய சாதியந் தணர்க ளேலும்,
நுமர்களைப் பழிப்ப ராகில் நொடிப்பதோ ரளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும்* அரங்கமா நகரு ளானே!"
- திருமாலை
இராமானுஜரின் ஆசாரியரான அந்தண குலத்தில் உதித்த பெரிய நம்பி , தாழ்ந்த குலம் என்று சொல்லப்படும் நான்காம் வர்ணத்தில் பிறந்த மாறனேர் நம்பிக்கு அனைத்து பணிவிடைகளையும் செய்து , இறுதிக் காலத்தில் இறுதிச் சடங்கையும் முறையாக நடத்தினார்.
" சேறு செய் தொண்டர் சேவடிச் செழுஞ்சேறு என் சென்னிக்கு அணிவனே"
- பெருமாள் திருமொழி
என்று வாழ்ந்தவர்கள் வைணவப் பெரியவர்கள்.
ஆழ்வாரின் திருவாக்குப்படி வாழ்வது வைணவ இலட்சணம்.
ஆழ்வார் ஆசாரியன் திருவடிகளே சரணம்
மகர சடகோபன்
தென்திருப்பேரை
அருமையான பதிவு
பதிலளிநீக்கு