அக்னி பிரவேசம் - பாகவத அபசாரம் பரிகாரம்
ஜீவாத்மா அதன் கர்மாவிற்கேற்ப பலமுறை உடல் என்ற சிறையில் வந்து தங்கி, அதன் கர்ம பலன்களைக் கழிக்கிறது என்பது சனாதன தர்மத்தின் அடிநாதமாக இருக்கும் கொள்கை. ஜீவாத்மா, தான் எண்ணக்கூடிய அல்லது செய்யக்கூடிய செயல்களை ஒரு வடிவத்தில் கொண்டு வருவதற்கு உடல் என்ற கருவி தேவைப்படுகிறது. ஆத்மாவுக்கு உடல் என்பது மிகவும் முக்கியம். உடல் மூலமாகவே செயல்கள் , எண்ணங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இது நாம் கண்ணால் பார்த்து அறியக்கூடிய வகையில் உள்ளது.
ஆத்மாவுக்கு ஞானத்துவம், கர்த்தத்துவம், ஆனந்தத்துவம் அனைத்தும் உண்டு. ஆனால் உடல் மூலமாகவே அதைச் செய்து அனுபவிக்க முடியும். ஆத்மா தனியாக இயங்கமுடியுமா என்றால் முடியாது. அது இயங்குவதற்கு ஒரு சூஷ்ம (சிறிய) உடலாவது தேவைப்படுகிறது.
தத்துவங்கள் மூன்று என்பது இராமானுஜர் ஏற்படுத்திய விசிஷ்டாத்வைதம் கொள்கை , அடிப்படையில் அசித், சித்,ஈஸ்வர என்ற மூன்று தத்துவங்கள். சைவ சித்தாந்த அடிப்படையிலும் தத்துவங்கள் மூன்று பசு, பதி, பாசம். ஆழ்வார்கள் நாயன்மார்கள் ஏற்படுத்திய சமய தத்துவங்கள் மூன்று என்று கொள்ளலாம். இதில் எந்த வேற்றுமையும் இல்லை. பிரம்மத்தில் வேறுபாடு உண்டு. வைணவர்கள் ஶ்ரீமந் நாராயணனையும், சைவர்கள் சிவனையும் பிரம்மமாக ஏற்றுக்கொள்கின்றனர்.
விசிஷ்டாத்வைதம் என்பது சேதன அசேதனத்துடன் கூடிய பிரம்மம், அது ஒன்றே சத்தியம், அதற்கு நிகர் மற்றொன்று கிடையாது என்பதனால் இதை விஷேச அத்வைதம் என்றும் கூறலாம். பிரளய காலத்தில் அனைத்து சேதனமும் அசேதனமும் பிரம்மம் இடத்தில் சேர்ந்து குவிந்து கொள்கின்றன. பிரம்மத்தின் சரீரமாக அதாவது உடலாக, அனைத்து சேதனங்களும் அசேதனங்களும் இருக்கின்றன. சிருஷ்டி காலத்தில் பிரம்மம் அதன் உடலிருந்து உயிருள்ள , உயிரற்ற பொருட்களைப் படைக்கின்றன. இவ்வாறு உலக இயக்கங்கள் நடைபெறுகின்றன.
"தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே"
"உலகுதன்னை நீ படைத்தி உள் ஒடுக்கி வைத்தி மீண்டு
உலகுதன்னுளே பிறத்தி ஓரிடத்தை அல்லையால்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே? "
- திருசந்தவிருத்தம் , திருமழிசையாழ்வார்
பிரம்மம் ஆத்மாவாகவிருந்து உடலாகிய சேதனம் அசேதனத்தின் துணைகொண்டு ஒரு செயலை , எண்ணங்களை நடைமுறைப்படுத்துகிறது. ப்ரக்ருகதி முழுவதும் பிரம்மம் பரந்து விரிந்து கிடக்கின்றன. பிரம்மம் ஆத்மாவாக இருந்து இந்த உலகத்தை இயக்குகிறது. இதில் நாம் கருவியாகச் செயல்படுகிறோம். எல்லாம் அவன் செயல் , அவன் இல்லாமல் அணுவும் அசையாது என்பது , இந்த தத்துவத்தைப் பிரதிபலிக்கும் வாசகங்கள்.
ஜீவாத்மா காரியங்களைச் செய்வதற்கும் அனுபவிப்பதற்கும் உடல் முக்கிய கருவியாக இருப்பது போல், பரமாத்மா காரியங்களைச் செய்வதற்கும் அனுபவிப்பதற்கும் உடலாகிய சேதனம் அசேதனம் முக்கியமாக இருக்கிறது. அடியார்கள் மற்றும் பல ஜீவராசிகளின் சங்கமத்தில் எம்பெருமான் முகம் மலர்ந்து காணப்படும் என்பதனை ஆழ்வார்கள் பல பாசுரங்களின் மூலம் உணர்த்துகிறார்கள்.
கூடியிருந்து குளிர வேண்டும் என்பது ஆண்டாள் திருப்பாவையில் உணர்த்துகிறாள். பத்து பாசுரங்களில் அடியார்களாகிய தோழியர்களை எழுப்பி, குழுமமாகப் பகவானை அனுபவிக்கச் செல்கிறாள் என்பதனை திருப்பாவையில் ஆண்டாள் தெளிவாக விளக்குகிறாள்.பகவானை அனுபவிப்பதில் சங்கமாக இருந்து அனுபவிக்க வேண்டும் என்பது இதன் அடிப்படையில் பிறந்தது. அனைவரும் சேரும்போது அவன் முகம் மலர்ந்தும் , பிரியும்போது வாடியும் காணப்படும் என்பது ஆழ்வார்கள் வாக்கு.
"மையல் ஏற்றி மயக்க உன் முகம்
மாய மந்திரம் தான் கொலோ?"
- பெரியாழ்வார்
அடியார்களுடன் கூடி மகிழ்வது என்பது எம்பெருமானுடைய இயல்பு.
தன் அடியானுக்கு ஒரு குறை என்றால் சீற்றம் கொள்வதும் அவன் இயல்பு.
"கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை
வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை
பற்ற மற்று அது நின் சரண் நினைப்ப
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்
கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து உன
அடியனேனும் வந்து அடி-இணை அடைந்தேன்-
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே"
- திருமங்கையாழ்வார்
சரணம் என்று அலறிய யானையைக் காப்பாற்ற, நேரே வந்து நின்று ஆழி தொட்டு முதலையைக் கொன்றான்.
"எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே?
- நம்மாழ்வார்
பக்தன் பிரகலாதனைக் காப்பாற்ற நரசிங்க உருவில் தோன்றி இரணியகசிபுவைக் கொன்றான்.
ஜீவாத்மா, பரமாத்மா, அடியார்கள் ( பக்தர்கள்), ஆசாரியன் (குரு) என்ற அடிப்படையில் பார்த்தால், இராமாயணத்தில் சீதாதேவி தன்னை ஜீவாத்மா ஸ்தானத்தில் வைத்து உரையாடுவதும் , இராமன் பரமாத்மா ரூபமாகவும் , அடியார்களாக லக்ஷ்மணன் சேஷத்துவ தன்மையையும் , பரதன் பாரதந்திரியத்தையும் , சத்ருகனன் அடியாருக்கு அடியாராக நின்று கைங்கர்யம் செய்வதாகவும் , அனுமன் ஆசாரியன் ஸ்தானத்திலிருந்து பரமாத்வான இராம கைங்கர்யமே பிரதானம் என்று இருப்பதையும் கொண்டு இராமாயணத்தை நோக்கினால் சில உண்மைகள் புலப்படும்.
மேலும் இராமனை இராமாயணத்தில் சிறந்த அரசனாக அறநெறியில் ஆட்சி புரிந்த அரசனாகப் பாரத தேசம் முழுவதும் பார்க்கப்படுகிறது. இராமனுடைய அரசாட்சி என்பது செங்கோல் ஆட்சியாக நிலவியது என்பதனால் காந்திஜி போன்றவர்கள் சுதந்திரத்திற்குப் பிறகு பாரதத்தில் ராமராஜ்யத்தையே நிறுவ வேண்டும் என்று அறைகூவினார்கள் என்பது நமது சுதந்திரப் போராட்ட வரலாறு. இதன் அடிப்படையில் பார்த்தாலும் அறநெறியை நிலைநாட்டப் பாரபட்சமின்றி நடுநிலையான ஆட்சியை நிறுவ இராமனின் செயல்கள் உத்தமமான நிலையிலிருந்தன என்றும் புலப்படும்.
இதற்கு மேற்கூறிய ஜீவாத்மா பரமாத்மா ஞானம் ஓரளவுக்குத் தேவை என்பதனால் அடியேனுக்குத் தெரிந்த சிற்றறிவுக் கொண்டு விளக்கியுள்ளேன்.
சுந்தர காண்டத்தில் சீதாதேவி ஜீவாத்மா நிலையில் நின்று , ஊழ்வினையின் காரணமாக இந்த சிறைத்தண்டனையை அனுபவிப்பதாகவும் , இராமன் என்ற பரமாத்மா ஒருவனையே நம்பியிருப்பதாகவும் அனுமனிடத்தில் கூறுகிறாள்.
மாரீசன் என்ற பொன்மானைப் பிடிப்பதற்காக இராமன் வனத்தினுள் செல்ல, சீதாதேவியைப் பாதுகாக்கும் பொறுப்பை லக்ஷ்மணனிடம் கட்டளையாக இட்டுச் செல்கிறார். ஒரு பெரிய சப்தம் ஒன்று கேட்கும் நிலையில் , சீதாதேவி லக்ஷ்மணனை வனத்தினுள் சென்று பார்த்து வரும்படி சொல்ல, லக்ஷ்மணன் இராமன் இட்ட கட்டளையை மீற முடியாத நிலையில் நின்று மறுக்கிறார்.
ப்ரக்ருதி மற்றும் ஜீவராசிகளைக் காக்கும் பொறுப்பு ஜீவராசிகள் அனைத்திற்கும் பொதுவான கடமை. அதிலும் மானிட சாதிக்கு அந்த பொறுப்பு அதிகம் என்பதனை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த கடமைகளைப் பரமாத்மா சேதனத்தின் மூலம் உலகத்தில் செயல்படுத்துகிறான்.
லக்ஷ்மணன் மறுக்க அந்த சமயத்தில் சீதாதேவி கடுஞ்சொற்களை லக்ஷ்மணன் மீது உபயோகித்து , சந்தேகித்து வசவு செய்கிறாள். இதனைக் கம்பராமாயணம் பாடல்கள் உணர்த்துகிறது. இந்த தவறான செயலை ஊழ்வினையின் காரணமாகத் தான் செய்ததாகவும் சுந்தர காண்டத்தில் அனுமனிடம் நினைவு படுத்துகிறாள் சீதாதேவி.
"குற்றம் வீந்த குணத்தின் எம் கோமகன்
மற்றை வாள் அரக்கன் புரி மாயையால்
இற்று வீழ்ந்தனன் என்னவும் என் அயல்
நிற்றியோ? இளையோய்! ஒரு நீ?“ என்றாள்"
என் அயல் நிற்றியோ? இளையோய் ஒரு நீ என்று கடுஞ்சொற்களைக் கூறுகிறாள்"
"என்னை நாயகன் இளவலை
எண்ணிலா வினையேன்
சொன்ன வார்த்தை கேட்டு அறிவிலள்,
எனத் துறந்தானோ?
முன்னை ஊழ்வினை முடிந்ததோ? ‘
என்று என்று முறையால்
பன்னி, வாய் புலர்ந்து, உணர்வு தேய்ந்து,
ஆருயிர் பதைப்பாள்"
சுந்தர காண்டம் காட்சி படலத்தில் சீதை புலம்புவதை மேல் பாடல் விளக்குகிறது.
"ஏத்தும் வென்றி இளையவற்கு ஈது ஒரு
வார்த்தை கூறுதி : மன் அருளால் எனைக்
காத்திருந்த தனக்கே கடன் இடை
கோத்த வெம் சிறை வீடு என்று கூறுவாய்"
சீதை லக்ஷ்மணனுக்குக் கூறும் வார்த்தையாக சுந்தர காண்ட சூடாமணி படலத்தில் அமைந்த பாடலிலும் புலம்புவதைக் காணலாம்.
பரமாத்மா ஜீவனைப் படைத்து , ஞானத்தையும் வழங்கி, சாஸ்திர புத்தகங்களையும் வழங்கி நேர்மையான முறையில் வாழ முழு சுதந்திரத்தையும் ஜீவனிடம் விட்டு விடுகிறான். ஆனால் ஜீவன் தனது மனம் போக்கில் காரியங்களைச் செய்து கர்ம பலன்களைச் சேர்ப்பதும் கழிப்பதும் ஜீவனின் முழு சுதந்திரத்திற்கு உட்பட்டது. கர்ம பலன்களை அனுபவிக்கும் முழு சுதந்திரமும் அந்த ஜீவனுக்கே சாரும். இந்த விதியின் அடிப்படையில் உலகம் இயக்கப்படுகிறது.
பகவான் மேல் செய்யும் அபசாரத்திற்கு பகவத் அபசாரம் என்றும் , அடியார்கள் மேல் செய்யும் அபசாரத்திற்கு பாகவத அபசாரம் என்றும் வகைப்படுத்திப் பிரித்துள்ளனர். பகவ அபசாரத்தைப் பகவான் பொறுத்து அருளுகிறான் ஆனால் பாகவத அபசாரத்தைத் தண்டிக்கிறான் என்பதனை சாஸ்திரங்கள் காட்டுகின்றன. பாகவத அபசாரம் கூடவே கூடாது என்பது நீதி.
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு"
என்பது வள்ளுவனார் வாக்கும் அதனையே நினைவுபடுத்துகிறது.
"தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் என்பர்"
என்பது பெரியாழ்வார் வாக்கு. தன்னடியார் செய்யும் காரியங்கள் மீது பகவானுக்கு இருக்கும் நம்பிக்கையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது பெரியாழ்வார் பாடல்.
பர்னசாலையில் நிகழ்ந்த செயலுக்குப் பிறகு இராமன் என்ற பரமாத்மா சீதாதேவியை முதன்முதலில் சந்திக்கிறார். பாகவத அபசாரத்திற்கான தண்டனையை வழங்க முடிவு செய்கிறான். ஆனால் என்ன தண்டனை என்று முடிவு செய்யவில்லை. முடிவை சீதாதேவி தானே எடுக்கிறாள் , அதுவும் லக்ஷ்மணன் மூலமாக என்று காட்டுகிறது கம்பராமாயணம். லக்ஷ்மணனை அழைத்து தீயை இடும்படி சொல்கிறாள் சீதாதேவி. பாகவத அபசாரம் செய்யக்கூடாது என்பதனை உணர்த்துவதற்கான நீதியாக இதைப் பார்க்கவேண்டும். சீதா தேவி சந்தேகித்த அதே வினையில் அவளுக்கும் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதனையும் இந்த சம்பவங்கள் உணர்த்துகிறது.
"இளையவன் தனை அழைத்து, 'இடுதி, தீ' என வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள்; உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும் களைகணைத் தொழ, அவன் கண்ணின் கூறினான்"
இளையவனை அழைத்து"இடுதி தீ" என்று சீதா கூறுவதாகக் கம்பன் யுத்த காண்டம் மீட்சி படலத்தில் காட்டுகிறான்.
பாகவத அபசார நிவர்த்தியாக அக்னி பிரவேசம் நிகழ்த்தப்பட்டது என்பதாக மட்டுமே நாம் பார்த்தால் இதன் உண்மைப் புலப்படும். ஊழ்வினையின் கர்ம பலன்களிலிருந்து எந்த ஒரு ஜீவனும் தப்பிக்க முடியாது என்ற நீதியைத் தாயாரும் பெருமாளும் ஒரு விளையாட்டாக நடத்தி, இந்த உண்மையைப் புலப்படுத்துகின்றனர்.
யுத்தக் காண்டத்துடன் கம்பன் இராமனின் அறநெறியை உணர்த்தி மங்கலம் பாடுகிறார். அநேகமாக ஶ்ரீ வைணவ உபந்நியாஸ்தகர்களும் வால்மீகி ராமாயணம் உபந்நியாசம் செய்யும் போது இராமர் பட்டாபிஷேக வைபவத்துடன் சுபமாக நிறைவு செய்கின்றார்கள்.
அதற்குப் பிறகு உத்தர காண்டம் என்ற பகுதியில் சீதையின் வனவாசம், லவகுசன் சரித்திரம், அவர்கள் மூலமாக இராமாயணம் உலகுக்குக் காட்டப்பட்டது என்றும் கூறுகிறார்கள். அதிகமாக அடியேன் உபந்நியஸ்தர்கள் மூலமும், கம்பராமாயணம் மூலமும் கேள்விப்படாத காண்டம்.
ஆனால் 1932 ம் ஆண்டு நாடகாசிரியர் அருப்புக்கோட்டை, புளியம்பட்டி ஶ்ரீ A.K. ராமசாமி நாயக்கரால் இயற்றப்பட்ட உத்தரகாண்டம் நாடக புத்தகத்தைப் படித்தேன். குசலவன் சரித்திரம் என்று நாடகம் இயற்றியுள்ளார். அதன்படியும் கேள்விப்பட்ட சில விஷயங்களைக் கொண்டும் அடியேனுக்குத் தெரிந்த சிற்றறிவைக் கொண்டு சீதையின் வனவாச விளக்கத்தைத் தந்துள்ளேன்
அதற்குப் பிறகு இராமன் சீதையும் பிரியமாக வாழ்ந்து வரும் காலங்களில், சீதா கர்ப்பவதியாகிறாள். கர்ப்ப காலங்களில் கணவன் மனைவியின் விருப்பத்தைக் கேட்டு அதனை நிறைவேற்ற வேண்டும் என்ற உயர்ந்த நீதியை, இங்கே இராமன் மனிதனாக அரசனாக நின்று நடத்திக் காட்டுகிறான். சீதா வனவாசம் மீண்டும் செல்லவேண்டும், அதுவே அழகாக இருப்பதாகவும் இராமனிடம் கூறுகிறாள். இராமன் வனவாசம் என்பது கடினம் என்றும் , அது இப்பொழுது உகந்தது அல்ல என்றும் எடுத்துரைக்க , கர்ப்பவதியான சீதாதேவி வனம் செல்வதை விரும்புவதாகக் கூறினாள். இதை நிறைவேற்றும் பொருட்டு வனவாசம் சென்றாள் என்றும் எடுத்துக் கொள்ளலாம். அதனை நிறைவேற்ற அரசன் அனைத்து நாடகத்தையும் தானே நடத்தி மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுகிறான்.
ஒற்றன் மூலம் மீண்டும் சீதாதேவியின் கற்பை மக்கள் சந்தேகிப்பதையும், இராமன் ஆட்சியில் ஏன் அரச குடும்பத்தில் பிழை இருப்பதாகவும், அரசாட்சியே பிழையாகச் செல்வதாகவும் கேள்விப் படுகிறார் அரசரான இராமன்.
தன் குடும்பத்திற்கு ஒரு நீதி , மக்களுக்கு ஒரு நீதி என்று இல்லாமல், சமநீதியையை நிலைநாட்டவும் அரசனாக நின்று நிறைவேற்றினான் என்றும் பொருள் கொள்ளலாம். ஐம்புலன்களையும் அடக்கி அறநெறி காத்த அண்ணல் இராமன்.
வால்மீகி பகவானும், சீதாதேவி இருவரும் பூமியின் குழந்தைகள். ஆதலால் சகோதர சகோதரிகள். பெண் கற்பமான காலத்தில் பிறந்த வீட்டில் இருந்து பிள்ளைப்பேறு செய்வது என்ற பாரத வழக்கத்தை உணர்த்தும் சம்பவமாகவும் இந்த வனவாசத்தைப் பார்க்கலாம்.
சமநீதி , அறநெறி அரசாட்சி என்றால் ராம ராஜ்ஜியம் என்று கூறும்படி பாரத தேசம் முழுவதும் நம்பிக்கையாக இருக்கும் ஒரு காப்பியத்தில் இப்படி ஒரு தவற்றை, இந்த காப்பியத்தைப் படைத்தவர்களும் செய்வார்களா? என்று யோசித்து பார்க்க வேண்டும். பிழை காப்பியத்தைப் படைத்தவனிடமும் இராமனிடமும் இல்லை. பிழை நம்மிடம் உள்ளது என்று நினைத்து உண்மையைத் தேடுவோமாக .
புறத்து, நாம் ஒரு பொருள் இனிப்
புகல்கின்றது எவனோ,
அறத்தின் மூர்த்தி வந்து
அவதரித்தான் என்பது அல்லால்?
பிறத்து, யாவையும் காத்து, அவை
பின் உறத் துடைக்கும்
திறத்து மூவரும் திருந்திடத்
திருத்தும், அத் திறலோன்.
அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்று கம்பர் இராமனை முத்தொழிலையும் செய்யக்கூடிய வல்ல பரம்பொருள் என்று அழைக்கிறார்.
"சங்கு கைத்தாங்கிய தரும மூர்த்தி" என்று தருமத்தின் வடிவமாக விஷ்ணுவை கம்பர் அழைக்கிறார். தருமம் , அறம் போன்றவைகள் செயலின் மூலமே அறியப்படும். தருமத்தை நிலைநாட்டவே தரும மூர்த்தி பற்பல அவதாரங்களை எடுத்து , உலகில் தருமத்தை நிலைநாட்டினார்.
" உம்பரோடு இம்பர் காறும்,
உலகம் ஓர் ஏழும் ஏழும்,
‘எம் பெருமான் ‘என்று ஏத்தி
இறைஞ்சி நின்று ஏவல் செய்ய,
தம்பியரோடும் தானும்
தருமமும் தரணி காத்தான்
அம்பரத்து அனந்தர் நீங்கி,
அயோத்தியில் வந்த வள்ளல்"
மகர சடகோபன்
தென்திருப்பேரை
கருத்துகள்
கருத்துரையிடுக