அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி
இராமானுஜர் கண்ட புரட்சி என்ற தலைப்பைக் கண்டவுடன் ,இராமானுஜர் காலத்திற்கு முன் சாதி பேதம் வைணவத்திலிருந்ததா என்று வினவினார் நண்பர் ஒருவர். அப்படி இல்லையென்றால் ஏன் இராமானுஜர் கண்ட புரட்சி என்று தலைப்பைக் கொடுத்தீர்கள் என்று வினவினார்.
இராமானுஜர் காலத்திற்கு முன் விசிஷ்டாத்வைதம் இருந்ததா? இல்லையா?. இருந்தது. அப்படி ஆனால் இராமானுஜர் இந்த தத்துவத்தை ஸ்தாபித்தார் என்று ஏன் கூறுகிறோம். கண்ணன் எம்பெருமானுக்கு இரண்டு தாய்களைப் போலவே , விசிஷ்டாத்வைதம் தத்துவத்திற்கு இரண்டு தாய்கள்.
"ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர" என்று கண்ணன் எம்பெருமானைப் பெற்ற தாய் தேவகி , வளர்த்த தாய் யசோதை. வளர்த்த யசோதை தாயின் மகனாகவே கண்ணன் உலகோருக்கு அறியப்பட்டார்.
அதேபோல் விசிஷ்டாத்வைதம் தத்துவத்தை ஈன்ற முதல் தாய் சடகோபன் இருக்க , வளர்த்த இதத் தாய் இராமானுஜரே ஸ்தாபித்தார் என்று ஏற்றம் கண்டார். இராமானுஜர் ஆழ்வார்கள் பாசுரங்களைக் கொண்டு, அத்வைதம் என்ற தத்துவத்திலிருந்து மாறுதலாக விசிஷ்ட அத்வைதம் என்ற தத்துவத்தை நிலை நாட்டினார். ஆழ்வார் பாசுரங்களே இதற்கான காரணம்.
ஆளவந்தார் இயற்றிய சித்தித்ரயம், கீதா ஸங்கரஹம் என்ற நூல்களும் இராமானுஜருக்கு இந்த தத்துவத்தை நிறுவ உதவியாக இருந்தது என்பதும் உண்மை.
அதற்கு முன் தத்துவம் இருந்தாலும் , இராமானுஜர் ஸ்தாபித்தார் என்று அவர் மேல் ஏற்றிச் சொல்லப்பட்டது. அவரே "காரேய் கருணை இராமானுஜர்".
ஆதலால் சாதி பேதமற்ற சமுதாய புரட்சி இராமானுஜர் காலத்திற்கு முன் இருந்ததா? என்றால் , இருந்தது என்றும் , அதையும் காரேய் கருணை இராமானுஜர் மேல் ஏற்றிச் சொல்லப்பட்டது தான் உண்மை. ஆதலால் நம் தலைப்பு "இராமானுஜர் கண்ட புரட்சி" என்று பெயர் சூட்டப்பட்டது.
இராமானுஜருக்கு முன் நடந்த சமுதாய புரட்சியைக் காண்போம்
மானிட குருவாக இப்புவியில் அவதரித்த முதல் குரு சடகோபன் என்ற நம்மாழ்வார். இவர் காரிமாறன் ,உடைய நங்கை என்ற தம்பதியினருக்கு மகனாகத் திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரியில் சொல்லப்படும் நான்காவது வருணத்தில் அவதரித்தவர். இவரை குருவாக ஏற்றுக்கொண்டவர் உயர்ந்த அந்தணகுலம் என்று சொல்லப்படும் பிராமண குலத்தில், வயதில் மூத்தவராகவும் அவதரித்தார் மதுரகவியாழ்வார்.
குலத்தினாலும் அகவினாலும் உயர்ந்த மதுரகவி , நம்மாழ்வாரை குருவாக ஏற்று,அவரையே தாய்தந்தையாகவும் , இறைவனாகவும் பாவித்து தினம் , அவர் பாடிய பாகங்களுக்கு இசையமைத்துப் பாடி தொழுது வந்தார்.
ஶ்ரீ வைஷ்ணவ குலத்தின் முதல் ஆசாரியன் நம்மாழ்வார் என்று சொல்லியது, உயர்ந்த குலத்தில் பிறந்த ஆசாரிய பெருமக்களே என்பது குறிப்பிடத்தக்கது. அங்கேயே சாதி பேதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது.
ஆழ்வார்களில் மதுரகவியைத் தவிர இரண்டு ஆழ்வார்கள் உயர்ந்த குலம் என்று சொல்லப்படும் பிராமண குலத்தில் பிறந்தவர்கள். அப்படிப்பட்ட பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வாரை ஆசாரியனாக மதுரகவி ஏற்கவில்லை. மாறாக நம்மாழ்வாரை குருவாக ஏற்றதன் மூலம் முதல் சமுதாய புரட்சி செய்த " பெரியார்"
இரண்டாவது தொண்டரப்பொடியாழ்வார் " பாசுரங்களில் புரட்சி கண்டவர். திருமாலையில் கடைசி ஐந்து பாசுரங்களில் சமுதாய புரட்சி செய்தவர் உத்தம அந்தண குலத்தில் அவதரித்த ஆழ்வார்.
"பழுதிலா வொழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க
வழிபட்டு அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே"
"அமரவோ ரங்க மாறும் வேதமோர் நான்கு மோதி
தமர்களில் தலைவ ராய சாதியந் தணர்க ளேலும்
நுமர்களைப் பழிப்ப ராகில் நொடிப்பதோ ரளவில்ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகரு ளானே"
மேற்கூறிய இரண்டு பாசுர வரிகளில் தான் பிறந்த குலத்தைக் கடுமையாகச் சாடுகிறார் ஆழ்வார்.
திருப்பாணாழ்வார் திருவரங்கம் சென்று சேவிக்க முடியாத நிலை அன்று இருக்க , திருக்காவேரியின் மறு கரையில் நின்று அரங்கனை பன்னிசைத்துப் பாடி மகிழ்ந்து வந்தார். லோகசாரங்க முனிவர் பெருமாளுக்குத் தீர்த்தம் எடுக்கத் திருக்காவேரிக்கு வர, திருப்பாணாழ்வாரைக் கண்டு கல்லெறிந்து விலகச்சொல்கிறார். கல்லானது தலையில் காயத்தை ஏற்படுத்தி ரத்தம் வழிந்தது. லோகசாரங்க முனிவர் காவேரி தீர்த்தம் எடுத்துக் கொண்டு கோயிலுக்குச் செல்ல திருக்காப்பு நீக்குவதற்குக் கடினமாக இருந்தது. அச்சமயம் அரங்கன் தோன்றி , திருப்பாணாழ்வாரை முனிவர் தோளில் சுமந்து வரும்படி கட்டளையிட்டார். லோகசாரங்க முனி காவேரி கரைக்குச் சென்று திருப்பாணாழ்வாரைத் தோளில் ஏற்றி திருவரங்கம் கோவிலுக்குள் வர , திருக்காப்பு நீக்கப்பட்டது. ஆழ்வார் அரங்கனை 10 பாசுரங்களில் திருவடி முதல் திருமுடி ஈறாகச் சேவித்து அரங்கன் திருவடிகளில் சோதியாகக் கலந்தார்.
லோகசாரங்க முனி என்ற வைதீக அந்தணர் , தாழ்ந்த குலம் என்று கருதப்படும் குலத்தில் பிறந்த திருப்பாணாழ்வாரைத் தோளில் சுமந்து திருவரங்கம் அக்ரஹார வீதியில் வலம் வந்தார் என்பதை உற்று நோக்கினால், சாதி பேதமற்ற சமுதாய புரட்சி உண்மையைத் திருப்பாணாழ்வார் மற்றும் லோகசாரங்க முனி வைபவம் உணர்த்துகிறது. திருப்பாணாழ்வார் இயற்றிய அமலனாதிபிரான் பிரபந்த உரைக்கு "முநி வாஹன போகம் " என்று பெயரிடப்பட்டது.
ஆழ்வார்கள் காலங்களில் அங்கங்கே சாதி பேதம் இருந்தாலும் , மேலே கூறப்பட்ட சம்பவங்கள் உணர்த்துவது "சமுதாய புரட்சி செய்தவர்கள்" பிராமணர்கள் என்பதை நிரூபிக்கிறது. சாதி பேதம் பார்க்காமல் ஞானம் எங்கிருந்தாலும் போற்றி பாராட்டி வந்தவர்கள். சாதியைப் பார்க்காமல் ஞானத்தை மட்டுமே பார்த்தவர்களே நமது பெரியவர்கள். அப்படிப்பட்ட ஆழ்வார்களும் ஆசாரியர்களும் இன்றளவும் சாதி பேத வித்தியாசம் இல்லாமல் கொண்டாடப்படுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
(படத்தில் நம்மாழ்வாரை சுற்றி இருக்கும் நாதமுனி, மதுரகவி , இராமானுஜர் மூவரும் பிறப்பால் பிராமணர்கள். படம் உணர்த்துவது ஞானத்தை தேடி போற்றி வணங்கியவர்கள்)
(இந்த கட்டுரை எழுவதன் மூலம், ஆழ்வார்களில் சாதி பார்க்கும் என்ற மிகப்பெரிய அபசாரம் செய்கிறேன். அதற்கு அவர்கள் திருவடிகளில் தண்டனிட்டு நமஸ்கரித்து மன்னித்தருள வேண்டுகிறேன்)
.......( தொடரும்)
மகர சடகோபன்
தென்திருப்பேரை
நன்றி சடகோபன் உங்கள் பதிவின் மூலம் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்கின்றேன்.
பதிலளிநீக்குThanks
நீக்கு