தமிழ் காப்பியங்கள் போற்றும் சிறை இருந்தவள் ஏற்றம்

 




இராமாயணத்தில் சீதையை இராமன் தீக்குளிக்கச் செய்து துன்புறுத்தினான். மேலும் கற்பகாலத்தில் அவளை மீண்டும் வனவாசம் அனுப்பித் துன்புறுத்தினான் என்ற குற்றச்சாற்றை இராமன் மேல் சுமத்தி , இராமன் ஒரு தீயவன் என்று தமிழகத்தில் சுற்றிவிடப்படுகிறது. பெண்ணை அடிமையாக நடத்தினான் என்ற குற்றச் சாற்றையும், இராமாயணம் தீயநூல் என்ற புரளியையும் அள்ளி வீசுகிறது. இதற்கு மாறாகப் பெண் பெருமை பேசிய மணிமேகலை சிலப்பதிகாரம் குண்டலகேசி நூல்கள் சிறந்தவை என்ற வாதம் போலித் தமிழர்களால் வைக்கப்படுகிறது.


மேலே குறிப்பிட்ட ஐம்பெருங்காப்பிய நூல்கள் சிறந்தவை , அவை போற்றப்படக் கூடிய நூல்கள் என்பதில் ஒரு சிறுதுளி சந்தேகமும் இருக்கமுடியாது. அங்கே பெண்ணின் பெருமை பேசப்படுகிறது என்பதும் உண்மைதான். 


இராமாயணம் சிறை இருந்தவள் ஏற்றம் என்று சீதையின் ஏற்றத்தை கூற வந்த நூல் என்றே தமிழகம் கொண்டாடுகிறது. பிள்ளைலோகாசாரியார் தனது ஶ்ரீவசனபூஷணம் என்ற நூலில் விளக்கமாக அருளிச் செய்துள்ளார். இராமாயணம் சீதாதேவி என்ற பெண்ணின் ஏற்றத்தை ,சேதன ரூபத்தில் சொல்லவந்த நூல். 


"இதிஹாச ஸ்ரேஷ்டமான ஶ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது , மகாபாரதத்தால் தூதுபோனவன் ஏற்றம் சொல்லுகிறது" 

                                                                                  ஶ்ரீவசனபூஷணம் , சூரணை-5

இதற்கு சேதன அசேதன ஞானம் வேண்டும் . அதனை அடுத்த பாகத்தில் அடியேனுக்கு தெரிந்த சிற்றறிவைக் கொண்டு விளக்க முயற்சிகாகிறேன்.


"சிறையில் விளப்புற்ற கிழிமொழியாள்" என்று நம்மாழ்வார் திருவாய்மொழியில்.   4-8-5 ல் குறிப்பிடுகிறார்

வால்மீகி பகவானும் "சீதாயாஸ் சரிதம் மஹத்" என்று குறிப்பிடுகிறார். 


ஏற்றம் கூறவந்த நூல் அவளை இழிவு நிலைக்கு தள்ளி நூல் பெருமை பேசுமா? என்று யோசிக்க வேண்டும். அது எந்தக் கோணத்திலிருந்து அணுகினார் என்று நம்முடைய ஞானத்துக்கு புலப்படாமல் இருக்கலாம். வால்மீகி ஆசார்ய பெருமக்களின் துணைக்கொண்டு அணுகினால் உண்மை புலப்படும்.


இராமாயணம் இன்றளவும் நிலைத்து நிற்கிறது என்றால் அதன் பெருமையினால் மட்டுமே , அங்குச் சொல்லப்பட்ட நீதி தர்ம சிந்தனைகளால் மட்டுமே. இராமாயண பெருமைகளையும் , இராமனின் பெருமைகளையும் தமிழில் சிறந்த நூலான சிலப்பதிகாரம் , மணிமேகலை பேசுகிறது என்றால் , இராமாயணமே சிறந்தது என்று மறைமுகமாகவோ , நேராகவோ காட்டப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. 


"மூ-உலகும் ஈர் அடியான் முறை நிரம்பாவகை முடியத்

தாவிய சேவடி சேப்ப, தம்பியொடும் கான் போந்து,

சேர அரணும் போர் மடிய, தொல் இலங்கை கட்டு அழித்த

சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே?

திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே?"

                                     -மதுரை காண்டம் , ஆய்ச்சியர் குரவை


"தாதை ஏவலின் மாதுடன் போகி,

காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்

வேத முதல்வன் பயந்தோன் என்பது

நீ அறிந்திலையோ? நெடுமொழி அன்றோ?

வல் ஆடு ஆயத்து, மண், அரசு, இழந்து;

மெல்லியல்-தன்னுடன் வெங் கான் அடைந்தோன்"                           

                                               - மதுரை காண்டம் , ஊர்காண் காதை



மணிமேகலை போற்றும் இராமாயணம்


"நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி

அடல்அரு முந்நீர் அடைத்த ஞான்று

குரங்குகொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம்

அணங்குஉடை அளக்கர் வயிறு புக்காங்கு

இட்டது ஆற்றாக் கட்டழல் கடும்பசிப்

பட்டேன் என்தன் பழவினைப் பயத்தால்"

                                                   - உலக அறவி புக்க காதை



"மீட்சி என்பது இராமன்வென் றான்என

மாட்சிஇல் இராவணன் தோற்றமை மதித்தல்"

                                      - சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை



இவ்வாறாகத் தமிழ் இலக்கியங்கள் இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களைப் போற்றுகிறது. சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில் திருமாலின் பல அவதாரங்கள் காட்டப்பட்டுள்ளது.


சிலப்பதிகாரம் காடுகாண் காதையில்


"நீல மேகம் நெடும் பொன் குன்றத்துப்

பால் விரிந்து அகலாது படிந்ததுபோல,

ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல்

பாயல்-பள்ளி, பலர் தொழுது ஏத்த,

விரி திரைக் காவிரி வியன் பெரும் துருத்தி,

திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும்"


என்று திருவரங்க நாதனைப் போற்றுகிறது. திருவரங்க நாதன் இராமனின் குலதெய்வம் என்பது நாம் அறிந்த ஒன்று. இராமன் வீபிடனுக்கு பரிசாகக் கொடுக்க, தமிழகத்தில் உபய காவேரியில் தென்திசை நோக்கி வீபிடனுக்கு கடாக்ஷம் அருளும் வண்ணம் கிடக்கிறான் என்பதும் இராமாயண தொடர்புடைய சம்பவம்.


இவ்வாறாக பழம்பெரும் தமிழ் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இராமாயணம் , இராமனைப் போற்றுவதன் மூலம், இராமனின் சிறப்பு என்பதனை உணர முடிகிறது.


மேலும் போலித் தமிழர்கள் இராமனின் மேல் வைக்கும் குற்றத்தை ஜீவாத்மா பரமாத்மா அடியார்கள் ஞானம் கொண்டு அறிந்து , அதன் உண்மைத் தன்மை என்பதனை அடுத்த கட்டுரையில் .............


மகர சடகோபன்

தென்திருப்பேரை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

எல்லைச்சாமி

கம்பனின் அம்பறாத்தூணி