அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி ( விளாஞ்சோலைப்பிள்ளை)

 



                                                     ஶ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை 

                                                           (ஐப்பசி உத்திராட்டாதி)


கண்ணன் எம்பெருமான் கீதையில் வர்ணாசிரம தருமத்தைப் போதிக்கிறார். அதைக் கடைப்பிடிக்கும் படி கீதையில் சொல்லியுள்ளார். ஆதலால் கீதையையும் , அது சார்ந்து நிற்கும் சனாதன தர்மத்தையும் சங்கறுக்க வேண்டும் என்றும், அதை வேரோடு அறுத்துச் சாய்க்க வேண்டும் என்றும் குறிப்பாகத் தமிழகத்தில் நிறையச் சப்தங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் கீதையையும் , சனாதன தர்ம நெறிமுறைகளையும் தீவிரமாக கடைப்பிடித்து வந்த சமயப்பெரியவர்கள் வரலாற்றை உற்று நோக்கினால் உண்மைப் புலப்படும்.


ஆழ்வார் ஆசாரியார் பிறப்புகளில் சாதிப் பார்ப்பது என்பது மிகவும் அபசாரம். அவர்களை அதைக்கொண்டு நோக்குவது என்பதும் மிகவும் தவறு. அதைச் செய்யக்கூடாது. ஆனால் இன்றைய சூழலில் மக்களுக்கு உண்மையைப் புரியவைப்பதற்கு அவர்களின் பிறப்பைப் பற்றிக் கூறவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு , இந்த கட்டுரையை எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆதலால் ஆழ்வார் ஆசாரியார் திருவடித் தாமரைகளில் தண்டனிட்டு அடியேன் தவறு என்று தெரிந்தும், தெரிவிக்கும் இத்தகவலைப் பொறுத்து மன்னித்தருளப் பிரார்த்திக்கிறேன்.


நேற்று ஐப்பசி உத்திரட்டாதி, ஶ்ரீ வைணவ குருபரம்பரையில் முக்கியமான ஆசாரியார் ஶ்ரீவிளாஞ்சோலைப்பிள்ளை திருநக்ஷத்திரம். இவர் திருவனந்தபுரம் அருகில் கரைமனை ஆற்றங்கரையில் அமைந்த அரனூர் என்ற கிராமத்தில் ஈழவ சமுதாயத்தில் அவதரித்தார். பிறந்த காலம் என்பது 14 ம் நூற்றாண்டு. அன்றைய சூழலில் இவருக்கு அனந்தபத்மநாப ஸ்வாமி கோயிலுக்குச் செல்லுவதில் சில தடைகள் இருந்தன என்பது உண்மை.


இதே சமுதாயத்தைச் சார்ந்த ஶ்ரீ நாராயணகுரு என்பவர் 19ம் நூற்றாண்டில் பிறந்து, பல சமுதாய சீர்திருத்தங்களைச் செய்தார் என்பது இப்பொழுது பிரசித்தி பெற்ற வரலாறாக நாம் அறிந்துள்ளோம். ஆனால் விளாஞ்சோலைப் பிள்ளை மற்றும் வைணவ ஆசாரியார்களின் வரலாறு அதிகமாகச் சமுதாய சீர்திருத்தம் என்று பேசப்படும் தளத்தில் பிரபலமாகப் பேசப்படாமலும், கற்றுணர்ந்த பல தமிழ் வல்லுநர்களின் அறிவொளிக்குப் புலப்படாமல் இருப்பதற்கான காரணம் தெரியவில்லை. காரணம் பலவாக இருக்கலாம், விஷயங்கள் மலிந்து கிடக்கும் இக்காலங்களில் அறியாமல் இருப்பது என்பது நம் அறியாமையே. ஆதலால் இனி அறிந்து கொள்ள முயல்வோம்.


அரனூர் கிராமத்தில் விளாம் மரச்சோலையில் வாழ்ந்து வந்த காரணத்தினால் அவருக்கு "விளாஞ்சோலை" என்ற பெயர். திருப்பாணாழ்வார் அரங்கனை அகக்கண்களால் தரிசித்து காவேரி ஆற்றங்கரையிலிருந்து திருவரங்கத்தை கைதொழுது , பன்னிசைத்துப் பாடி வந்ததைப் போலவே , விளாம் மரம் ஏறி அனந்தபத்மநாப ஸ்வாமி கோபுரத்தைக் கண்டு அகக்கண்களினால் தர்சனம் செய்து வந்தார்.‌


விளாஞ்சோலைப்பிள்ளை ஶ்ரீ பிள்ளைலோகாச்சாரியர் என்ற ஆசாரியரின் பெருமைகளை அறிந்து, அவரை திருவரங்கம் சென்று தொழுது ,விஷயங்களை அறிந்துகொள்ள தண்டனிட்டு நமஸ்கரித்தார்.


பிள்ளைலோகாச்சாரியர் ஶ்ரீ வடக்குதிருவீதிப்பிளைளை என்ற ஆசாரியனின் மூத்த திருக்குமாரர். இவர் ஶ்ரீ வைணவ சம்பிரதாயத்தை வளர்ப்பதற்காகத் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தவர். இவரைப் போலவே இவரது திருத்தம்பி ஶ்ரீ அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் என்பவரும் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தவர்.


ஶ்ரீ பிள்ளைலோகாச்சாரியர் என்பவர் மலிக்காபூர் படையெடுப்பின் போது திருவரங்கம் பெரிய கோவில் மூலவர் திருவரங்கனுக்கும் , மூலவர் தாயார் திருவரங்க நாச்சியாருக்கும் கல்திரையிட்டு, உற்சவர் திருவரங்க நாச்சியாரை வில்வமரத்துக்கீழ் பெரிய குழியில் மறைத்து எழுந்தருளச் செய்துவிட்டு, உற்சவர் ரெங்கனையும் உபய நாச்சிமார்களையும் எழுந்தருளச் செய்துகொண்டு, தனது தள்ளாத 103 வயதில் தெற்கு நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். நான்கு ஆண்டுகள் திருமாலிருஞ்சோலை மலைகளில் மறைந்து திருவரங்கனையும் தாயாரையும் ரக்ஷித்து வாழ்ந்து வந்தவர், தனது 107வது வயதில் பரமபதித்தார்.


அத்தகைய உயர்ந்த ஆசாரியார் ஶ்ரீ பிள்ளை உலகாரியன் 18 ரகசிய கிரந்த நூல்களை இயற்றியுள்ளார். அதில் மூன்று மிகவும் பிரபலமான நூல்கள். முமுக்ஷுப்படி, தத்வத்ரயம், ஶ்ரீவசனபூஷணம். நமது முந்தைய எண்களின் ஏற்றம் என்ற கட்டுரையில் இவருடைய மற்றொரு நூலான " நவவிதசம்பந்தம்" பற்றி அறிந்திருந்தோம்.18 ரகசிய க்ரந்தங்களில் மிகவும் கடினமான நூல் ஶ்ரீ வசனபூஷணம்.


இவருடைய திருத்தம்பி ஶ்ரீ அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் "ஆசார்ய ஹ்ருதயம்" என்ற மிகப் பிரபலம் வாய்ந்த நூலை எழுதியுள்ளார். இவருடைய திருப்பாவை வ்யாக்னம் மிகவும் பிரபலம். 


உயர்ந்த உடும்பை அந்தண குலத்தில் உதித்த அண்ணல் பிள்ளை உலகாரியன் என்ற பிள்ளைலோகாச்சாரியர் , விளாஞ்சோலைப் பிள்ளையைச் சிஷ்யனாக ஏற்று , அத்தனை ரகசிய க்ரந்தங்களையும் கற்றுக்கொடுத்தார். சிஷ்யனாக நின்று தெளிவுடன் கற்றார் ஶ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை. கடினமான ரகசிய க்ரந்த " ஶ்ரீீவசனபூஷண" நூலில் அதிகமாகத் தேர்ச்சி பெற்று விளங்கினார் நமது பிள்ளை.


ஆளவந்தார் கரியமாணிக்க பெருமாள் சந்நிதியில் , யாதவப்பிரகாசர் வேதபாடசாலையில் இளையாழ்வார் என்ற பிற்கால ராமானுஜரை, கடாக்ஷித்து இவரே பிற்காலத்தில் வைணவத்தை வையமெல்லாம் வளரச்செய்யப்போகிறவர் என்று ஆசிர்வதித்தார். ஆனால் நேரில் இருவரும் பார்த்ததில்லை , சந்திக்கவும் இல்லை. தூரத்தில் நின்று ஆளவந்தார் இளையாழ்வாரை மங்களாசாசனம் செய்தார். அதேபோல் பிள்ளைலோகாச்சாரியர் திருமலையாழ்வார் என்ற பிற்கால திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாமியை, மதுரையில் திருமலையாழ்வார் பல்லக்கில் வரும்போது தூரத்திலிருந்து கடாக்ஷித்து இவரே பிற்கால வைணவத்தை வளர்க்கப் போகின்றவர், மணவாளமாமுனிக்கு ஆசாரியனாக இருந்து ஶ்ரீ வைணவ சம்பிரதாயத்தை வளர்க்கப்போகிறவர் என்று மங்களாசாசனம் செய்தார்.


ஆளவந்தார் பஞ்ச ஆசாரியர்கள் பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருமலையாண்டான், திருவரங்கப்பெருமாள் அரையர் மூலம் இளையாழ்வாரைத் திருத்திப்பணி கொண்டு ஶ்ரீ ராமானுஜர் என்ற திருநாமத்துடன் வைணவத்தைப் பரப்பினார். ராமானுஜர் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர் ஶ்ரீ திருக்கச்சி நம்பிகள். திருக்கச்சி தம்பிகள் ஆளவந்தாரின் அந்தரங்க சிஷ்யர். ஆளவந்தாரும் திருக்கச்சி நம்பிகளும் சேர்ந்துதான் இளையாழ்வாரை கரியமாணிக்க கோயிலில் ஆசீர்வதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


வைசிய குலத்தில் உதித்த உத்தமர் திருச்சி நம்பிகள், அந்தண குலத்தில் உதித்த அண்ணல் ராமானுஜருக்கு மானசீக குரு.


அதேபோல் பிள்ளைலோகாச்சாரியர் ஆசாரியர்கள் கூரகுலோத்தம தாஸர், திருப்புட்குழி ஜீயர், திருக்கண்ணங்குடி நம்பி, விளாஞ்சோலைப்பிள்ளை, நாலூராச்சான் பிள்ளை மூலம் திருமலையாழ்வாரைத் திருத்திப்பணி கொண்டு திருவாய்மொழி பிள்ளை என்ற திருநாமத்துடன் வைணவத்தை வளர்த்தார். திருவாய்மொழிப்பிள்ளையின் சிஷ்யர் பொய்யில்லாத மன்னு மணவாள மாமுனிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இராமானுஜரின் மறு அவதாரமான மணவாள மாமுனிகள் சம்பிரதாயத்தை இராமானுஜர் போன்று வளர்த்தவர்.


விளாஞ்சோலைப்பிள்ளை பிள்ளைலோகாச்சாரியர் காலத்திற்குப் பிறகு, திருவனந்தபுரத்தில் ஆசாரியன் விக்ரகத்தை எழுந்தருளச்செய்து , தவத்தில் வாழ்ந்து வந்தார். அவரது உடம்பு சிலந்தி நூல் வலைகளினால் பின்னப்பட்டு நிலைமையில், ஆசாரியனை விக்ரக ரூபத்தில் தர்சித்திக்கொண்டு, ஆசாரியனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக உயிர் தரித்துக் கொண்டிருந்தார்.


திருவாய்மொழிப்பிள்ளை திருவனந்தபுரம் சென்று விளாஞ்சோலைப் பிள்ளையைத் தண்டனிட்டு வணங்கி ஶ்ரீ வசனபூஷண ரகசிய க்ரந்த அர்த்த விசேஷங்களைக் கற்றார்.


"வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம்கூரத்தாழ்வான்" என்று இராமானுஜ நூற்றந்தாதிப் போற்றுகிறது , முக்குறும்பை அறுத்தவர் கூரத்தாழ்வான். குடிச்செருக்கு, கல்விச் செருக்கு, செல்வச் செருக்கு என்ற முக்குறும்பை அறுத்தவர்.


திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாமி பாண்டிய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர், வையம் கண்ட வைகாசி விசாகத்தில் வைதீக குடும்பத்தில் பிறந்தவர் முக்குறும்பையும் அறுத்து, விளாஞ்சோலைப்பிள்ளையை ஆசாரியனாக ஏற்றது என்பது சாதிபேதமற்ற ஶ்ரீ வைணவ சம்பிரதாயத்தைக் காட்டுகிறது.


விளாஞ்சோலைப் பிள்ளை இயற்றிய "ஸப்தகாதை" , ஒவ்வொரு ஶ்ரீ வைணவனும் நித்யனுசந்தானத்தில் கொள்ள வேண்டும் என்பது கட்டளையாக உள்ளது. இத்தகைய வழிமுறைகளை வழங்கிய உயர்ந்த தருமம் "ஶ்ரீ வைஷ்ணவம்".


மதுரகவிக்கு நம்மாழ்வார்

ஆளவந்தாருக்கு மாறனேர் நம்பி

இராமானுஜருக்கு உறங்காவில்லி தாஸர்

நம்பிள்ளைக்கு ஏறு திருவுடையான் தாஸர்

பிள்ளைலோகாச்சாரியருக்கு நலந்திகழ் நாரண தாஸர்


"நலந்திகழ் நாரண தாஸர் திருவடிகளை நண்ணி நலம் பெறுவோம்"


அடுத்த பாகத்தில் ஶ்ரீ விளாம் சோலை பிள்ளையின் ஸப்த காதையைப் பற்றி பார்ப்போம்.


                                                                                                                       ...........(தொடரும்)

மகர சடகோபன்

தென்திருப்பேரை

கருத்துகள்

  1. மிக அற்புதமான தகவல்கள்..படிப்பதற்கு மிகப்பெரும் பாக்யம் செய்துள்ள உணர்வையும், ஸ்ரீ வைணவர்கள் காத்த சமூக நீதியும் புலனாகிறது.. ! அற்புதம் தங்கள் பணி தொடர வேண்டும்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

கம்பனின் அம்பறாத்தூணி

மக்களின் தலைவன்