எண்களின் ஏற்றம் -4 ( எண்களின் வடிவம் எம்பெருமான்)

 



ஐந்து: 

பஞ்ச பூதங்களின் வடிவமாகவும், அவை உணர்த்தும் ஐந்து குணங்களாகவும் எம்பெருமான் எழுந்தருளியுள்ளார் என்று திருமழிசைப்பிரானின் வாக்குக் கொண்டு பார்த்தோம்.


பஞ்சாயுதங்களை ஏந்தியவன் என்ற பெயரை உடையவன் எம்பெருமான். ஆழ்வார்கள் பாடல்கள் ஏராளம்,

"சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய
அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ"
                        - பெரியாழ்வார் திருமொழி 1-8-2

என்றும்,

"கங்கை நீர் பயந்த பாத-பங்கயத்து எம் அண்ணலே
அங்கை ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்"
                                                                                                                                  - திருசந்தவிருத்தம் (24)

என்றும்,

"வெய்ய ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்க்கைய செய்ய போதில் மாது சேரும் மார்ப நாதனே"

என்றும்,

"நின்றிடும் திசைக்கும் நையும் என்று
      அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
வென்றி வில்லும் தண்டும் வாளும்
      சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா
      நெஞ்சுள்ளும் நீங்காவே"

என்றும்,

"சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு
செங்கனிவாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு"

என்றும்,

"தமர்கள் கூட்ட வல்வினையை
      நாசம் செய்யும் சது மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள்
      வில் தண்டு ஆதி பல் படையன்"

என்றும்,

"காய் சின வேந்தே கதிர் முடியானே
      கலி வயல் திருப்புளிங்குடியாய்
காய் சின ஆழி சங்கு வாள் வில் தண்டு
      ஏந்தி எம் இடர் கடிவானே"

என்றும்,

"ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை"  என்றும் 

ஐந்து ஆயுதங்களைத் திருக்கைகளில் ஏந்தி நிற்கும் அழகைப் பாடியுள்ளார்

ஆறு:

"அறு சுவைப் பயனும் ஆயினை"   என்பது,

திருவெழுக்கூற்றிருக்கையில் திருமங்கையாழ்வார் வாக்கு.

ஆறு வகை உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, இனிப்பு ரஸங்களின் ப்ரோயஜனமும் நீயே.


"அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று அவற்றுளே தங்குகின்ற தன்மையாய்"
                                                                                                                                      -திருசந்தவிருத்தம் (15)

என்பது திருமழிசையாழ்வார் வாக்கு.

ரிக்யஸூர், சாம, அதர்வண என்ற நான்கு வேதமாகவும், சிக்ஷை, வ்யாகரணம்,சந்தஸ்,நிருத்தம்,சோதிடம் , கல்பம் என்ற  ஆறு அங்கமாகும் நின்று , அவற்றுள் உறைகின்ற எம்பெருமான்.


ஏழு:

"ஏழுலகு எயிற்றினில் கொண்டனை" என்று திருவெழுக்கூற்றிருக்கையில் திருமங்கையாழ்வார் வாக்கு.


ஏழு தீவுகளான பூமண்டலத்தை வராஹனாக அவதரித்த காலத்தில் தன்னுடைய கோரைப் பற்களுக்கிடையில் வைத்து விளையாடியவன்.

ஏழு தீவுகளையுடைய பூமண்டலம் அதாவது நாவலந்தீவு,இறலித்தீவு, குசையின் தீவு, கிரவுஞ்ச தீவு, சான்மலித் தீவு, தெற்கின் தீவு , புட்கரத்தீவு என ஏழாம்.


"வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே"

"ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே"

என்பது பெரியாழ்வார் திருவாக்கு.

ஏழு உலகங்களையும் பிரளய காலத்தில் திரு வயிற்றில் அடக்கியவன்.

"ஊன் ஏறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்
ஆனேறு ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால்"
                                                            
                                      - பெருமாள் திருமொழி(1)

"ஏழ் விடை அடங்கச் செற்றனை"

                                                      - திருவெழுக்கூற்றிருக்கை
              
நப்பின்னை பிராட்டிக்காக ஏழு எருதுகளை வென்றவன் கண்ணன் எம்பெருமான்.


"கடைந்த பாற்கடற் கிடந்து காலநேமியைக் கடிந்து
உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்து இராமனாய்
மிடைந்த ஏழ் மரங்களும் அடங்க எய்து வேங்கடம்
அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ"   
    
                                      -  திருசந்தவிருத்தம் (81)  

"மலையால் குடை கவித்து மா வாய் பிளந்து
சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலை யானைப்
போர்க் கோடு ஒசித்தனவும் பூங் குருந்தம் சாய்த்தனவும் கார்க் கோடு பற்றியான் கை"

                                       - முதல் திருவந்தாதி (27)

இராமபிரான் ஒரு அம்பினால் ஏழு மராமரங்களைத் துளைத்தவன்

எம்பெருமான் இராமனாகவும் கண்ணனாகவும் அவதரித்த காலத்தில் ஏழு எண்ணிக்கையுடன் சில நிகழ்வுகளை நடத்திக் காட்டியுள்ளார்கள்.‌

"இசை ஏழ் ஆறு அங்கம் ஐந்து
      வளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும்
சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும் செல்வத்
      திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே"
                
                                     - பெரிய திருமொழி 2-10-2

ஏழு ஸ்வரங்கள், ஆறு அங்கம் , ஐந்து வேள்விகள், நான்கு மறைகள், மூன்று தீ, இரு பொழுது எல்லாம் சிந்தனை செய்வது அவன் ஒருவனே என்பது திருமங்கையாழ்வார் திருவாக்கு.

எம்பெருமான் நான்மறையில் ஸப்தரூபத்தில் எழுந்தருளியிருப்பதைப் போல், ஸப்த ஸ்வரங்களிலும் எழுந்தருளியுள்ளான்.


எட்டெழுத்து மந்திரம்:

"ஓம் நமோ நாராயணாய"

ஆழ்வார்கள் எட்டு எழுத்து மந்திரத்தைப் பற்றி நிறையப் பாடல்கள் பாடியுள்ளார்கள்.

"அவன் பேர் எட்டு எழுத்துமே வாரம் ஆக ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே"
                                          - திருசந்தவிருத்தம் (77)

"பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும்
      சொலி நின்று பின்னரும்
பேசுவார்-தமை உய்ய வாங்கி
      பிறப்பு அறுக்கும் பிரான் இடம்"
                                        - பெரிய திருமொழி 1-8-9

"மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும்
கற்று நான்-கண்ணபுரத்து உறை அம்மானே"
                                      - பெரிய திருமொழி 8-10-3

எட்டெழுத்து மந்திரமான " நமோ நாராயணமே" சகலத்துக்கும் நன்மை பயக்கும் என்பது திருமங்கையாழ்வார் திருவாக்கு.

"எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணையடி என்தலை மேலனவே"
                       - பெரியாழ்வார் திருமொழி 2-9-11

எட்டுத் திசைகளிலும் இருளை நீக்கி ஒளிமயமான விளக்காக நிற்பவன் எம்பெருமான்

"குண்டலம் தாழ குழல் தாழ நாண் தாழ
எண் திசையோரும் இறைஞ்சித் தொழுது ஏத்த"
                      - பெரியாழ்வார் திருமொழி 2-10-2

"பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப
எண் திசையோரும் வணங்க இணை மருது ஊடு நடந்திட்டு"
                                       - பெரிய திருமொழி 3-3-3 

எட்டு திசைகளிலுள்ள தேவர்களும் முனிவர்களும் தொழுதேத்தி நின்றவன். 


எண் ணங்கள் நல்லதோர்
எண் ணங்களாக அமைய
எண் திசையும் புகழ் பரவ
எண் ணெழுத்து மந்திரம் 
ஒன்றே ஒன்றே என்று நம்பு 


கடைசியாக ஒன்பது விதமான சம்பந்தத்துடன் எம்பெருமான் உள்ளான் என்பதனையும் , ஒன்பது விதமான ( நவபக்தி) பக்தியினால் அவனை வணங்கி நலம் பெறுவோம்.             
                                                               
                                                                                                                          .........................   ( தொடரும்) 

                                               


மகர சடகோபன்
தென்திருப்பேரை 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

கம்பனின் அம்பறாத்தூணி

மக்களின் தலைவன்