எண்களின் ஏற்றம் ( எண்களின் வடிவமே எம்பெருமான்)
ஒன்பது:
ஸ்வாமி பிள்ளைலோகச்சாரியார் " அஷ்டாதச ரகசியம்" என்று 18 ரகசிய கிரந்தங்கள் இயற்றியுள்ளார். இவர் தனது 103 வயதில் மலிக்காபூர் படையெடுப்பு கொடுமையிலிருந்து மூலவர் ரங்கநாதரை கல்திரையிட்டு மறைத்தார். நம்பெருமாள் என்று அழைக்கப்படும் உற்சவர் திருவரங்கநாதனை எழுந்தருளச் செய்துகொண்டு தெற்கு நோக்கிப் பயணித்தார். நான்கு வருடங்கள் திருமாலிருஞ்சோலை மலைப்பகுதியில் வாழ்ந்து , 107வது வயதில் ஆசாரியன் திருவடியை அடைந்தார்.
அவர் இயற்றிய 18 ரகசிய கிரந்தங்களில் ஒன்று "நவவித சம்பந்தம்". ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையிலான ஒன்பது சம்பந்தங்களை விஸ்தாரமாக விளக்குகிறார். இங்கே நாம் ஒன்பது சம்பந்தங்களின் முழு விவரத்தையும் பார்க்கப் போவது இல்லை.
நவவித சம்பந்தம்:
"பிதா ச ரக்ஷகஸ்ஸேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி:
ஸ்வாம்யா தாரோ மமாத்மா ச போக்தா சாத்யமநூதித:"
1. பிதா புத்ர சம்பந்தம் (படைப்பவன், படைக்கப்பட்டவன்)
2. ரக்ஷ்ய ரக்ஷகம் சம்பந்தம் (காப்பாளன், காக்கப்படுவன்)
3. சேஷ சேஷி சம்பந்தம் (ஆண்டான் , அடிமை)
4. பர்த்ரு பார்யா சம்பந்தம் (நாயகன் , நாயகி)
5. ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் ( அறிபவன், அறியப்படுவன் )
6. ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் (சொத்து , சொத்தை உடையவன்)
7. ஸரீர ஸரீரி சம்பந்தம் ( உடம்பு ஆத்மா)
8. தார்ய தாரக சம்பந்தம் ( தாங்குபவன், தாங்கப்படுபவன்
9. போக்த்ரு போக்ய சம்பந்தம் ( அனுபவிப்பவன், அனுபவிக்கப்படுபவன்)
குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 5ம் பத்து ,
" தருதுயரம் தடாயேல் உன்சரணல்லால் சரண்இல்லை"
என்ற பதிகத்தில் ஒன்பது பாடல்களில் நவவித சம்பந்தத்தை விளக்குகிறார் என்பது நமது பூர்வர்களின் கருத்து.
நவவித பக்தி
ஶ்ரீமத் பாகவதத்தில் நவவித பக்தியைப் பற்றி பக்த பிரகலாதன் கூறியதாக அமைந்த ஸ்லோகம்
" ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணுஹு ஸ்மரணம் பாதஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸாக்யம் ஆத்ம நிவேதனம்"
எம்பெருமானை இந்த நவவித பக்திகளின் மூலம் தொழுது , அவனை அடையலாம் என்பது நம்பிக்கை.
1. ஸ்ரவணம் - எம்பெருமான் திருநாமங்கள், கதைகள் ஆகியவற்றைச் செவி வழியாகக் கேட்டல்.
2. கீர்த்தனம் - எம்பெருமான் திருநாமங்கள், கதைகள் ஆகியவற்றை வாயினால் பாடுதல்.
3. ஸ்மரணம்: எம்பெருமானை மனதார நினைத்தல்.
4. பாதஸேவனம்: எம்பெருமான் திருவடிகளுக்குத் தொண்டு புரிதல்
5. அர்ச்சனம்: மலர்களால் அர்ச்சித்தல்
6. வந்தனம்: வழிபடுதல்
7. தாஸ்யம்: எம்பெருமான் ஒருவனுக்கே அடிமை
8. ஸக்யம்: எம்பெருமானைத் தோழமை பூண்டுதல்
9. ஆத்ம நிவேதனம்: தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தல் ( சரணாகதி)
"வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை உலகம்
தாயவனை அல்லது தாம் தொழா பேய் முலை நஞ்சு
ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்-
காணா கண் கேளா செவி"
- முதல் திருவந்தாதி
வாய் , கை , கண், செவி ஆகிய நான்கு புலன்களின் பயனைப் பற்றி பொய்கையாழ்வார் குறிப்பிடுகிறார்.
அவனுடைய பேர் மட்டுமே கேட்கும் செவி, மற்றொன்றைக் கேட்காது. வாய் மற்றொன்றைப் பாடாது , பேசாது. கண் மற்றொன்றைப் பார்க்காது, மனதுக்கு மற்றொன்றைப் பற்றிச் சிந்திப்பதற்கு இடம் அளிக்காது. கை மற்றொன்றைத் தொழுவது , வணங்குவது என்பதையெல்லாம் செய்யாது.
" தூமலர் தூவித்தொழுது, வாயினால் பாடி , மனத்தினால் சிந்திக்க" என்று ஆண்டாள் திருப்பாவையில் குறிப்பிடுகிறார்.
" சிந்தையினாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவப்பிரானையே தந்தை தாய் என்றடைந்தவர் வண்குருகூர் சடகோபன்" என்று நம்மாழ்வார் திருவாய்மொழியில் குறிப்பிடுகிறார்.
" சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும் சிந்தைமகிழ் திருவாறன்விளை உறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே" என்று நம்மாழ்வார் திருவாய்மொழியில் குறிப்பிடுகிறார்.
சிந்தனை செய்வது, வாயால் பாடுவது, கையினால் தொழுவது, வணங்குவது , அர்ச்சனம் செய்வது , கை மற்றும் உடம்பினால் செய்யப்படும் அனைத்து செய்கையும் எம்பெருமான் ஒருவனுக்கே என்பது ஆண்டாள் மற்றும் நம்மாழ்வார் திருவாக்கு.
"ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்"
"நெடுமாற்கு அடிமை செய்வேன் போல்"
" கிடந்த நாள் கிடைந்தாய் எத்தனை காலம்
கிடத்தி உன் திருவுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவேல் செய்து தொல்அடிமை
வழிவரும் தொண்டரோர்க்கு அருளி
தடங்கொள் தாமரைக்கண் விழித்து நீ எழுந்து
உன்தாமரை மங்கையும் நீயும்
இடம்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய்
திருப்புளிங்குடிக் கிடந்தானே"
என்று அடிமைபூண்டு கொண்டு செய்வதை நம்மாழ்வார் திருவாய்மொழியில் குறிப்பிடுகிறார்.
"கூரணிந்த வேல்வலவன் குகனோடும் கங்கைதனில்
சீரணிந்த தோழமை கொண்டதுமோர் அடையாளம்"
என்று தோழமை கொண்டதைக் குறிப்பிடுகிறார் பெரியாழ்வார்.
"ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்"
"உனது அருளே பிரியா அடிமை என்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே தரியேன் இனிஉன் சரணம் தந்து என் சன்மம் களையாயே"
"அகலகில்லேன் இறையும் என்று
அலர்மேல்மங்கை உறைமார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்று
உடையாய் என்னை உள்ளவாறே
நிகரில் அமரர் முனிக்கணங்கள்
விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஒன்றுமில்லா அடியேன் உன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே"
என்று சரணாகதியை வலியுறுத்தி பாடியுள்ளார் திருவாய்மொழியில் நம்மாழ்வார்.
முதல் மூன்று பக்தி நிலைகளில் அதாவது ஸ்ரவணம், கீர்த்தனம் மற்றும் ஸ்மரணம் மூலம் எம்பெருமானை அறிந்து, உணர்ந்து , மனதுக்குள்ளே அசைபோட்டு நம்பிக்கையை வளர்க்கவேண்டும்.
இரண்டாவது நிலையில் பாதஸேவனம், அர்ச்சனம், வந்தனம் மூலம் , முதல் மூன்று பக்தி நிலையில் பெற்ற நம்பிக்கையைச் செயல் வடிவத்தில் கொண்டு வந்து, உடல் முழுவதையும் அவன்கொண்ட நம்பிக்கைக்கு பழக்கச் செய்வது.
மூன்றாவது நிலை உணர்வு ரீதியாக கலப்பது என்பது , உடல், நம்பிக்கை, மற்றும் அனைத்தையும் துறத்தல். சரணாகதி என்ற உயர்ந்த படியாகக் காட்டப்பட்டது
" ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி
உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல் தான்
உடைக் குரம்பை பிரியும்போது உன்தன்
சரணமே சரண் என்று இருந்தேன்"
ஒன்பது வாசல் கொண்ட இந்த உடலை விட்டு ஜீவாத்மா பிரிந்து நற்கதியை அடைவதற்கு , ஒன்பது வித சம்பந்தமும்,ஒன்பது வித பக்தியும் தேவை.
உலகம் இயங்குவது எண்களினால் , அடிப்படை எண்கள் என்பது பூஜ்யம் முதல் ஒன்பது. பூஜ்யம் என்பது தனித்து இயங்கமுடியாது. ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் மட்டுமே அடிப்படை எண்களாகக் கருதப்படுகிறது.
ஒன்று என்பது எம்பெருமான் ஶ்ரீமந் நாராயணன், பலவகையான ஜீவாத்மாக்கள் அவன் திருவடியை அடைவதற்கு ஒன்பது வித சம்பந்தமும், ஒன்பது வித பக்தியும் தேவை. அடிப்படை எண்களான ஒன்று முதல் ஒன்பது வரை எம்பெருமான் வடிவங்களே.எண்கனின் வடிவமே எம்பெருமான் ஶ்ரீமந் நாராயணன். எழுத்துகளின் முதல் அக்ஷரத்தின் வடிவமும் எம்பெருமான். எண் , எழுத்தின் வடிவங்கள் எம்பெருமான்.
"எண்ணங்கள் நிறைவேற
எண்மர் எழுத்தில் உறையும்
அகர எழுத்தில் உறையும்
அகலம் ஆளும் அரங்கனே"
மகர சடகோபன்
தென்திருப்பேரை
அருமை சடகோபன், நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குநன்றி
நீக்கு