கராவினைக் காத்த தாமரை நாயகன் ( சனாதனம்)
பெண்ணுலாம் சடையி னானும்* பிரமனு முன்னைக் காண்பான்,
எண்ணிலா வூழி யூழி* தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,*
விண்ணுளார் வியப்ப வந்து* ஆனைக்கன் றருளை யீந்த-
கண்ணறா,* உன்னை யென்னோ* களைகணாக் கருது மாறே!
சிவபெருமானும், பிரமனும் எம்பெருமானின் தர்சனத்தைப் பெறப் பல யுகங்கள் தவம் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் தலைகுனிந்து நிற்கும் வகையில் கஜேந்திரனுக்கு அருளை ஈர்த்தார் என்று பாடல் கூறுகிறது.
தேவர்களும் முனிவர்களும் தவம் புரிந்து காத்திருக்க , விலங்கினத்துக்கு இரங்கி அருள் புரிந்தவன் எம்பெருமான். சரணம் என்று தஞ்சமடைந்தவர்களை நழுவ விடாதவன் என்பதனால் அவனுக்குத் திருநாமம் "அச்சுதா" என்று வழங்கப்பட்டது.
"அச்சுதா" என்றால் நழுவ விடாதவன் என்று பொருள் .
தண்ணீரில் மலரக்கூடிய மலர் " தாமரை மலர்". தாமரை மலர் அழகானது , பார்ப்பவர்களின் மனதைக் கவரக்கூடியது .அதே போல் எம்பெருமானின் திருமேனி. அவனுடைய ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு தாமரை. தாமரைக் காடு சேர்ந்தாற் போல் அவனது திருமேனி. தாமரை போன்று அழகானவர், கவரக்கூடியவர்.
"கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்* கண்-இணையும் அரவிந்தம் அடியும் அஃதே"
- திருநெடுந்தாண்டகம்
"கரு மாணிக்க மலைமேல் மணித் தடம்
தாமரைக் காடுகள் போல்
திருமார்வு வாய் கண் கை உந்தி கால் உடை
ஆடைகள் செய்ய பிரான்"
- திருவாய்மொழி
எம்பெருமானுடைய திருக்கைகள், திருவாய், திருக்கண்கள் , திருவடிகள் அனைத்தும் தாமரையின் வடிவம் என்பது திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் வாக்குகள்.
தாமரை மலரைத் தண்ணீரிலிருந்து பிரிந்தோம் என்றால் வாடிவிடும். அதே போல் எம்பெருமானை அடியவர்களிடமிருந்து பிரித்தோம் என்றால் அவனது திருமேனி வாடிவிடும். அடியவர்களிடம் கூடியிருப்பது என்பது அவனுடைய குணம் .
அந்த தாமரை மலரை உந்தியில் அதாவது நாபியில் வைத்து பிரமனைப் படைத்தவன் என்பதனால் " பத்மநாபன்".
யானை குளத்தில் இறங்கி பத்ம மலரைப் பறித்து பத்மநாபனுக்குச் சூட்ட முடிவு செய்து குளத்தில் இறங்கியவுடன் , முதலைக் கல்வ ஆயிரம் ஆண்டுகள் போராடிய பிறகு " ஆதிமூலமே" என்று சரணம் அடைந்தபிறகு , எம்பெருமான் ஓடி ஓடி வந்து சக்ராயுதத்தை ஏவி முதலையைக் கொன்றான் என்பது சரித்திரம்.
கஜேந்திரன் என்ற யானை அன்று முதல் "கஜேந்திராழ்வார்" என்று அழைக்கப்பட்டார். அன்று பரமபதத்திலிருந்து சக்ராயுதத்தை பிரயோகம் செய்து முதலையைக் கொன்றிருக்க முடியும். ஆனால் அவன் நேரில் வந்து ஆழி தொட்டதற்கான காரணம்,
1. அடியவனுக்கு நேர்முக தரிசனம் கொடுப்பதற்கு
2. அடியவன் கொடுக்கும் புஷ்பத்தை ஏற்றுக் கொள்வதற்கு.
"மீனமர் பொய்கை நாள் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த
கானமர் வேழம் கையெடுத்தலறக் கரா அதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாடமாமயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே"
- பெரிய திருமொழி
சென்று நின்று ஆழி தொட்டான் என்று நேரில் வந்து ரக்ஷகம் செய்தததைக் காட்டுகிறார் திருமங்கையாழ்வார்.
பத்ம பிரியன் , தாமரை மணாளன் என்பது அவனுடைய பெயர்கள். தாமரையின் வடிவமான தாயாரின் மணவாளன் என்பதனால் இப்பெயர் ஏற்பட்டது. தாமரையாள் என்பது தாயாரின் பெயர். தாமரைக்கு ஏற்ற தாமரை. நீர்வண்ணன் எம்பெருமான். நீரிலிருந்து தாமரையைப் பிரித்தால் வாடிவிடும். நீரும் தாமரையும் சேர்ந்திருந்தால் தான் அழகு மற்றும் அமைதியைக் கொடுக்கும்.
"தன் அடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்குமேல்"
- பெரியாழ்வார் திருமொழி
"ஆதி ஆயன் அரங்கன் அந் தாமரை
பேதை மா மணவாளன்தன் பித்தனே"
- பெருமாள் திருமொழி
"தவள மாடம் நீடு நாங்கைத்
தாமரையாள் கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை
பார்த்தன்பள்ளி பாடு
- பெரிய திருமொழி
தாமரையாள் என்பது தாயாரின் திருநாமங்களில் ஒன்று.
தாமரையின் சம்பந்தம் எப்பொழுதும் எம்பெருமானுக்கு உண்டு என்பது அறியப்படுகிறது. தாமரையின் நாயகன் அவனே என்பது ஆழ்வார்கள் வாக்கு
தாமரை நாயகன் பெரியவர்களாகிய தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் இரங்காமல் யானைக்கு இரங்கி அருள் புரிந்தான் என்பதைப் பார்க்கும் பொழுது அவன் எளியவனுக்கு எளியவன். மனிதனுக்கு மட்டுமல்லாமல் விலங்கினங்கள், பறவைகள் என்று அனைத்து உயிரினங்களிடத்திலும் அன்பு செலுத்துவான்தான் நம் தாமரை நாயகன் என்று புலப்படுகிறது.
சனாதனம் என்பது அழிவில்லாத என்றும் நிரந்தரமாக இருக்கக்கூடிய தன்மை என்று பொருள். அதன் தன்மையை விளக்கக்கூடிய தர்மத்துக்கு "சனாதன தர்மம்" என்று பொருள்.
அச்சுதா என்ற பெயருக்குத் தமிழ் அகராதி கூறும் பொருள்கள் " அழிவற்றவன்" என்றும் "மாறாதவன்" என்றும் காட்டப்படுகிறது. அதுவே நிரந்தரம். ஆதலால் எம்பெருமான் சனாதனம்.
எம்பெருமான் யானைக்கு அருளையீர்ந்து ஆழ்வாராக்கினார். எம்பெருமான் இராமனாக அவதரித்த காலத்தில் சாதி பேதம் இல்லாமல் குகன் என்ற வேடுவனைச் சகோதரனாக்கினான். சுக்கீரவன் என்ற குரங்கினத்தை அரவணைத்து சகோதரன் என்றான். விபீஷணன் என்ற அரக்கனை அரவணைத்து ஏற்றுக்கொண்டு சகோதரனாக்கி , அவனை இலங்கை அரசனாக்கினான். கிஞ்சித கைங்கரியம் செய்த அணிலுக்கு நலத்தை அளித்தவன். ஜடாயு என்ற பக்ஷிக்கு கடைசி காலத்தில் செய்யவேண்டிய ஈமக் காரியங்களைச் செய்தவன்
கண்ணனாக அவதரித்து ஆயர்களையும், ஆய்ச்சியர்களையும், ஆநிரைகளையும் காப்பாற்றியவன். உயிரினங்கள் அனைத்தையும் காப்பாற்றியவன் எம்பெருமான்.
"கல்லைப் பெண்ணாக்கி" என்ற இராமாயண வரிகள் , இராமன் கல்லுக்கும் இரங்குபவன். இதிலிருந்து எம்பெருமான் தாமரை நாயகன் சேதனம் அசேதனத்துக்கும் உதவி செய்யக்கூடியவன்.
இராமானுஜ விசிஷ்டாத்வைதம் தத்துவப்படி சேதனம் அசேதனத்துடன் கூடிய பிரம்மம் என்பதனால் , எந்த ஒரு வித்தியாசம் இல்லாமல் அருளைக் கொடுப்பவன் பத்மநாபன்.
அன்று யானைக்கு அருளை ஈர்த்து "கஜேந்திராழ்வார்" ஆக்கினான். அருளை ஈர்ந்த தருணத்தில் முதலைக்கும் தர்சனத்தைக் கொடுத்து, சக்கரத்தாழ்வார் சம்பந்தம் அன்று கிடைத்தமையால், இன்று காசர்கோட்டில் பத்மத்தைப் பெற்ற பத்மநாபன், தாமரை நாயகன் சந்நிதியில் முதலைக்கு அருளை ஈர்ந்தான். முதலையின் தவப்பயன் இதை வழங்கியது. அருளை ஈர்த்து முதலையாழ்வார் என்று அழைக்கப்பட்ட சரித்திரத்தை நம் கண்முன் நடத்திக் காட்டியவன் " தாமரை நாயகன்". காலசக்கரம் சுழலுகிறது.
தாமரை, தாமரையாள் நாயகன், தடாகம் , கஜேந்திராழ்வான், முதலையாழ்வான் அன்றும் இன்றும் இணைக்கின்றன. அழிவில்லாத, நிரந்தரமான உண்மைப் பொருளை தெரிவிப்பதனால் இதுவும் ஒரு சனாதனம்
கராழ்வான் கழலடிக்குப் பல்லாண்டு பல்லாண்டு
தாமரை நாயகன் தாமரை திருவடிகளுக்குப் பல்லாண்டு பல்லாண்டு
மகர சடகோபன்
தென்திருப்பேரை
Beautiful explanation
பதிலளிநீக்குமிக மிக அற்புதம்
பதிலளிநீக்கு