எண்களின் ஏற்றம் - 3 ( எண்களின் வடிவம் எம்பெருமான்)






அடிப்படை எண்கள் ஒன்று முதல் ஒன்பது, அதன் வடிவமாக இறைவன் ஶ்ரீமந் நாராயணன் எழுந்தருளியுள்ளான் என்பது அடிப்படை நம்பிக்கை. ஆழ்வார்களின் அருளிச்செயல் ஆதாரமாக இருந்து அருமையாக விளக்குகிறது.


திருசந்த விருத்தம் திவ்ய பிரபந்தத்தில்,

"ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண் இல் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயனமாய் நலங் கடற் கிடந்து மேல்
ஆக மூர்த்தி ஆய வண்ணம் என் கொல்? ஆதிதேவனே"

என்றும்,

திருவாய்மொழி திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ்வார்,

ஏக மூர்த்தி இரு மூர்த்தி
      மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதம் ஆய்
      இரண்டு சுடர் ஆய் அருவு ஆகி
நாகம் ஏறி நடுக் கடலுள்
      துயின்ற நாராயணனே உன்
ஆகம் முற்றும் அகத்து அடக்கி
      ஆவி அல்லல் மாய்த்ததே

என்றும்,

திருநெடுந்தாண்டகம் திவ்ய பிரபந்தத்தில் திருமங்கையாழ்வார்,

"மை வண்ண நறுங் குஞ்சிக் குழல் பின் தாழ
      மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட
எய் வண்ண வெம் சிலையே துணையா இங்கே
      இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்"

என்றும்,

"எண் இல் மூர்த்தியாய்"  எண்ணிறந்த பற்பல மூர்த்திகளாக எம்பெருமான் எழுந்தருளியுள்ளார் என்று சாதிக்கிறார் .

ஏகமூர்த்தியாய்திருசந்தவிருத்தத்திலும், திருவாய்மொழியிலும் காட்டப்பட்ட ஏக மூர்த்தி அதாவது ஒரு மூர்த்தி என்பது, பரமபதத்தில் எழுந்தருளியிருக்கும் பரபதநிலயனான  பரவாஸு தேவ மூர்த்தியைக் குறிக்கிறது என்று காட்டப்பட்டது.

அவன் ஒருவனே பரப்பிரம்மம் என்று இதன் மூலம் உணர்த்தப்பட்டது. அவனே பல மூர்த்தியாய் காட்சியளிக்கிறான் என்று நம்மாழ்வாரும் , திருமழிசையாழ்வாரும் காட்டியுள்ளனர்.

இரு மூர்த்தி:  திருவாய்மொழியில் காட்டப்பட்ட இரு மூர்த்தி என்பது பரவாஸூதேவன்வ்யூக வாஸூதேவன் என்ற இரு மூர்த்திகளாகக் காட்டப்பட்டது.

சிருஷ்டி காலத்திலே ப்ரக்ருகதிமஹாந் என்ற இரண்டு தத்துவங்களைச் சரீரமாகக் கொண்டு விளங்கும் நிலையைக் குறிப்பிடுகிறார் என்றும் காட்டப்பட்டது.

இரண்டு சுடராய்: சூரியன் சந்திரன் என்ற இரண்டு சுடராய் , அதாவது வெப்பத்திற்கும் குளிர்ச்சிக்கும் காரண பூதனாய் எழுந்தருளியிருக்கும் தன்மை காட்டப்பட்டது.

இருவராய் வந்தார்:  ராமன் இலட்சுமணன் என்ற இரு உருவமாக வந்தார் என்பது திருமங்கையாழ்வார் வாக்கு. சேஷன் சேஷி என்ற இருவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.  ஆதிசேஷன் பெருமாள் கூடவே இருக்கக்கூடியவன், பிரியாமல் இருக்கக்கூடியவன். இராமன் சீதாப்பிராட்டயை பிரிந்திருந்த காலத்திலும்,  இராமாயண காலத்தில் ஆதிசேஷன் அவதாரமாக இருந்த இளையபெருமாள் என்ற இலக்குமணனைப் பிரிந்து இருக்கவில்லை என்பதை அறிகிறோம்.

ஆதிசேஷன் சேஷியாக பற்பல வடிவங்களில் பற்பல காலங்களில் பற்பல சேவைகளைச் செய்துள்ளார் என்பதனை, முதல் திருவந்தாதி பொய்கையாழ்வார் பாடலின் மூலம் அறியப்படுகிறது.

"சென்றால் குடை ஆம் இருந்தால் சிங்காசனம் ஆம்
நின்றால் மரவடி ஆம் நீள் கடலுள் என்றும்
புணை ஆம் மணி விளக்கு ஆம் பூம் பட்டு ஆம் புல்கும்
அணை ஆம் திருமாற்கு அரவு"

என்று ஆதிசேஷனின் அவதாரங்கள் சேஷியாக நின்று கைங்கரியம் செய்ததைக் காட்டுகிறது.

மூன்று மூர்த்தி:  வ்யூக வாஸூதேவன் மூன்று மூர்த்திகளாக விரிந்து ஸங்கர்ஷணஅநிருத்தபிரத்யும்ந என்று நிற்பதைக் காட்டுகிறது என்பது திருசந்தவிருத்தம், திருவாய்மொழி வ்யாக்யானம்.

சத்வராஜஸதாமஸ என்ற மூன்று வகைப்பட்ட அஹங்காரம் என்கிற தத்துவத்தைச் சரீரமாகக் கொண்டு நிற்கும் நிலை என்பது திருவாய்மொழி காட்டும் ஒரு வ்யாக்யானம்.

நாலு மூர்த்திப்ரதாநம், புருஷன், அவ்யக்தம், காலம் என்னுமிவற்றை சரீரமாகக்கொண்ட நாலு மூர்த்தியாய் என்று திருசந்தவிருத்தத்தில் காட்டப்பட்டது.

வாஸூதேவன், ஸங்கர்ஷண, அநிருத்த, பிரத்யும்ந என்ற நான்கு வ்யூகமாக எழுந்தருளியுள்ளார். எம்பெருமானுக்கு அர்ச்சனை செய்யும் பொழுது இந்த நான்கு நாமாவளிகளில் தொடங்கி ஆரம்பிக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமங்கையாழ்வார் திருவெழுக்கூற்றிருக்கை என்ற திவ்ய பிரபந்தத்தில்,

"அறம் முதல் நான்கு அவை ஆய் 
மூர்த்தி மூன்று ஆய் இரு வகைப் பயன் ஆய்
ஒன்று ஆய் விரிந்து நின்றனை"

என்று பாடியுள்ளார்.

அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களை அளிப்பவன் 

படைப்பு தொழிலை நடத்துகைக்காக நான்முகனை ஆவேசித்தும் , ஸம்ஹாரத் தொழிலை நடத்துகைக்காகச் சிவபிரானை ஆவேசித்தும், ரக்ஷணத் தொழிலை நடத்துகைக்குத் தனான தன்மையிலே இருந்தும் , மூவுருவினனாய் நின்றாய்.

ஜீவாத்மாக்கள் படும் இன்ப துன்பம் என்ற இரு வகைப் பயனுக்கும் ப்ரயோஜகனாய் நீ என்றும் , 

பிரபஞ்சம் முழுவதும் பரவி நிற்கும் பிரம்மம் நீ ஒருவனே என்றும், 

திருமங்கையாழ்வார் திருவெழுக்கூற்றிருக்கை வியாக்கியானம் காட்டுகிறது.


ஐம் பூதமாய்: நிலம், நீர், தீ, வாயு, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களின் வடிவமாக எழுந்தருளியுள்ளான் என்று திருவாய்மொழியில் நம்மாழ்வார் அருளுகிறார்.

திருமழிசையாழ்வார் திருசந்தவிருத்தம் என்ற திவ்ய பிரபந்தத்தைத் தொடங்கும் போது,

"பூ நிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய்
தீ நிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீ நிலாயது ஒன்றும் ஆகி வேறு வேறு தன்மையாய்
நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே?"

பஞ்சபூதங்களின் வடிவமாகவும் , அவை உணர்த்தும் ஐந்து குணங்களாகவும் எம்பெருமான் எழுந்தருளியுள்ளார் என்று ஆரம்பிக்கிறார்.

                                                                                                                                                    .........  தொடரும் 
மகர சடகோபன்
தென்திருப்பேரை 

கருத்துகள்

  1. அருமை, அஹோ பாக்கியம். தந்யோஸ்மி ஸ்வாமின்.
    வர்ததாம் அபி வர்ததாம்

    அடியேன் இராமானுஜ தாசன்
    🙏🙏🙏🙏

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

எல்லைச்சாமி

கம்பனின் அம்பறாத்தூணி