எண்களின் ஏற்றம்

 

அலுவலகத்தில் சில நபர்கள் எண்களைப் பார்த்துக் கொண்டிருப்பதும், பிறகு அதனை எப்படிக் கட்டுப்படுத்துவதும் என்பதையே சிந்தனை செய்த வண்ணம் இருப்பார்கள். அவர்களைப் பார்த்து நான் வேடிக்கையாக ஒன்று சொல்லுவது, உங்களிடம் 0 முதல் 9 வரையான பத்து எண்கள் மட்டுமே இருக்கின்றன.  நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய முடிவின் இறுதி என்பது இந்த பத்து எண்களின் சேர்க்கையில் தான் அமையும். ஆதலால் பத்து எண்களின் கலவையை வைத்து விளையாடுகிறீர்கள் என்று வேடிக்கையாக , நகைச் சுவையாகக் கூறிவருவேன்.  பத்து எண்களின் சேர்க்கையில் தான் உலகம் இயங்குகிறது என்பதுதான் உண்மை.

எண்களே கணிதம், பொருளாதாரம், வணிகம், வானவியல், கணக்கியல், புள்ளியியல், அறிவியல் போன்ற அனைத்து துறைகளுக்கும் அடிப்படை நாதமாக உள்ளது என்பது நாம் அறிந்த உண்மை.

இந்த எண்கள்தான் உலகத்தையே தலைகீழாகவும் மாற்றுகிறது. பணம் என்பதும் ஒருவகையான எண்களே. இந்த எண்கள் ஒரு சிலரை மேலும் எடுத்துச்செல்லும், ஒரு சிலரைக் கீழாகவும் எடுத்துச் செல்லும் தன்மை கொண்டது.

எண்களே மக்களாட்சியையும் தீர்மானிக்கிறது. எண்களே அரசியல்வாதிகளைப் பலவிதத்திலும் மயக்குகிறது. எண்களைக்( பணம்) கொண்டு மக்களையும் மயக்குகின்றனர். எண்களைக் கொண்டு பொருளாதாரம் தீர்மானிக்கப்படுகிறது. அதே பொருளாதார எண்கள் உலகத்தையே தலைகீழாகத் திருப்பி உலகத்தை உலுக்குகிறது என்பதையும் அறிகிறோம்.

இந்த விஞ்ஞானத்தோடு இயந்த இந்த எண்களின் மகத்துவம் என்பது மெய்ஞானத்துடன் இயந்து பயணித்தது என்றால் நமக்கு மிகையாக இருக்கும். சனாதன தர்மத்தில் இந்த எண்களுக்கு என்று ஒரு மகிமை இருந்துள்ளது.

பிரபஞ்சம் முழுவதும் பஞ்சபூதங்களாகப் பார்க்கப்படுகிறது. பஞ்சபூதங்களிலிருந்து ஐந்து குணங்கள் வெளிப்படுகிறது. இந்த ஐந்து குணங்களை ஐம்புலன்கள் கொண்டு அறிகிறோம். எண்களும் எண்ணிக்கையும் சமுதாயத்துடன் ஒன்றி இருக்கின்றன என்பதனை உணர்த்திய வண்ணம் அழியாமல் இன்றளவும் நிற்கும் தருமம் பாரதம்.

தேர் என்பது அழகான ஒன்று. தேர்த் திருவிழா என்றாலே மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு சம்பவம். ஊர் கூடினால் தான் தேர் இழுக்க முடியும் என்பது பழமொழி. சமுதாயம் ஒன்று கூடி தேரை இழுத்து ஒற்றுமையாக மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் திருவிழாவாக இன்றும் கிராமங்களில் கொண்டாடப்படுகிறது.

தேர் கட்டுமானம் என்பது ஒரு வகை எண்ணிக்கையைக் கொண்டு ஏறுவரிசையிலும் , பின் இறங்கு வரிசையிலும் கட்டப்படுகிறது.  இந்த கட்டுமானம் உணர்த்துவது ஏற்றம் இறக்கம் என்பது தனிமனிதனுக்கும் , சமுதாயத்துக்கும் பொதுவான ஒன்று. அதைச் சமுதாயம் ஒன்றுகூடிச் சரிசெய்து வாழ்க்கை என்ற சக்கரத்தை இழுத்துச் செல்லமுடியும்.

தமிழின் தேர் பந்தனம் அல்லது ரத பந்தனம் என்றே ஒரு கவி அமைப்பு உள்ளது.  தென்திருப்பேரை என்ற கிராமத்தில் மூன்று  ரத பந்தனங்கள் ஊர் கவிப்பெருமக்களால் இயற்றப்பட்டது. ஒன்று திருப்பேரையில் நித்யவாசம் செய்து கொண்டிருக்கும் ஶ்ரீ மகரநெடுங்குழைக்காதன் மேல் இயற்றப்பட்டது. அதனை தென்திருப்பேரை கோயிலில் , கொடிமரத்துக்கு முன்னுள்ள குறடு முகப்பில் காணலாம்.  மற்றொன்று வானமாமலை மடத்து 23வது பட்டத்து ஜீயர் சுவாமிகள் மேல் இயற்றப்பட்டது. மூன்றாவது திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமி பெயரில் இயற்றப்பட்டது. ஒன்று மட்டும் உள்ளது, இரண்டு இப்பொழுது இல்லை.  இதனை எனது " பேராபுரி மஹாத்ம்யம்" என்ற நூலில் மூன்று ரத பந்தன கவிதையும் கொடுத்துள்ளேன்.

திருமங்கையாழ்வார் திருவெழுக்கூற்றிருக்கை என்ற பிரபந்தத்தை ரத பந்தன கவி அமைப்பில் இயற்றியுள்ளார். ஒன்றிலிருந்து ஏழு வரை சென்று பிறகு ஏழுலிருந்து ஒன்று வரை இறக்கி இந்த பிரபந்தத்தைப் பாடியுள்ளார். கும்பகோணம் ஆராவமுதனுக்காக இயற்றப்பட்ட அற்புதமான ரத பந்தன கவி. கும்பகோணம் ஆராவமுதன் சந்நிதியில் இந்த பிரபந்தத்தைத்  தேர் சித்திர வடிவில் வரைந்து வைத்துள்ளனர்.


"ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில்
ஒருமுறை அயனை ஈன்றனை ஒரு முறை
இரு சுடர் மீதினில் இயங்கா மும் மதிள்
இலங்கை இரு கால் வளைய ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில்   (5)
அட்டனை மூவடி நானிலம் வேண்டி
முப்புரி நூலொடு மான் உரி இலங்கு
மார்வினில் இரு பிறப்பு ஒரு மாண் ஆகி
ஒரு முறை ஈர் அடி மூவுலகு அளந்தனை
நால் திசை நடுங்க அம் சிறைப் பறவை   (10)
ஏறி நால் வாய் மும் மதத்து இரு செவி
ஒரு தனி வேழத்து அரந்தையை ஒருநாள்
இரு நீர் மடுவுள் தீர்த்தனை முத் தீ
நான்மறை ஐ வகை வேள்வி அறு தொழில்
அந்தணர் வணங்கும் தன்மையை"

என்று இந்தப் பிரபந்தம் நீண்டு செல்கிறது மூலம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் ( பாட்டின் ஒரு சில வரிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன)

இங்கே முக்கியமாகக் கருதுவது எண்களின் அடிப்படையில் இந்த திருவெழுக்கூற்றிருக்கை பிரபந்தம் அமைந்துள்ளது என்பதுதான். எம்பெருமானின் பெருமைகளையும், பக்தி மற்றும் சரணாகதி தத்துவங்களைப் பாடவந்த ஆழ்வார்கள், எண்களைப் பற்றிப் பாடியுள்ளதன் நோக்கம், எம்பெருமானை எண்களின் வடிவமாகப் பார்த்துள்ளனர். அடிப்படை எண்களின் அனைத்து வடிவங்களிலும் எம்பெருமானைத் தரிசனம் செய்துள்ளார்கள் ஆழ்வார்கள். ஆதலால்தான் எண்ணிக்கை என்பது மிகவும் முக்கியமாக ஆழ்வார்களின் மனதிலும் இடம் பெற்றுள்ளது. 

                                                                                                        ....... தொடரும் 

மகர சடகோபன்
தென்திருப்பேரை 
                             

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

கம்பனின் அம்பறாத்தூணி

மக்களின் தலைவன்