திருவோணத் திருநாள்
"கணம்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்மாயோன் மேய ஓண நல் நாள்" - மதுரை காஞ்சி
தமிழர் சங்கநூலில் காணப்படும் ஒரு திருவிழா "ஓண நல் நாள்" , ஆனால் தமிழகம் முற்றும் மறந்து நம் அண்டை மாநிலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கும் திருவிழா.
ஆவணிமாதம் , கேரள சிங்க மாதத்தில்(ச்ரவண மாதம்) திருவோண நக்ஷத்திரம், கேரள தேசத்தில் “ஓணம்” என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கொச்சி அருகாமையில் இருக்கும் “திருகாட்கரை” என்ற திவ்யதேசத்தில் நடைபெறும் முக்கியமான திருவிழா.
இந்த திவ்யதேசத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமான்”திருகாட்கரை அப்பனுக்கு” பத்து நாட்கள் ஆவணி மாதம் ஹஸ்த நக்ஷத்திரத்தில் தொடங்கி திருவோண நக்ஷத்திரத்து அன்று முடியும் திருநாள் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றன. நாளடைவில் இந்த திருவிழா கேரளா தேசம் முழுவதும் “ஓணம்” என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திருகாட்கரை அப்பன் “ வாமனன்” என்றும், திருவிக்கிரமன் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த நாளில் மஹாபலி சக்கரவர்த்தி வருகை தந்து, தான் ஆண்ட தேசத்தையும் தேசமக்களையும் பார்வையிட்டு ஆசீர்வசிப்பதாக கருதப்படும் நாளாகவும் , தேசத்துக்கு வருகை தரும் மஹாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் திருநாளாக “ஓணம்” கேரளா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
வாமன அவதாரம் தோன்றிய நாள் " ச்ரவண மாதத்தில் ச்ரவண நக்ஷத்திரம்", அன்று வாமன ஜெயந்தி. அந்த புனித நாளை " திருவோண நல்நாளாக" கொண்டாடி வருகின்றனர்.
பக்த பிரகலாதன் பேரனாக நாட்டை ஆண்டு வந்த மஹாபலி சக்கரவர்த்தி, இந்திரனை வென்று மூவுலகயையும் ஆண்டு வந்தான். தேவலோக சாம்ராஜ்யத்தை இழந்த இந்திரன், ஸ்ரீமந் நாராயணனை சரணடைந்து வேண்டிக்கொள்ள, ஸ்ரீமந் நாராயணன் வாமனனாக அவதரித்தார்.
காஸ்யப முனிவருக்கு இரண்டு மனைவிகள் திதி, அதிதி. காஸ்யப முனிவருக்கும் அதிதிக்கும் பிறந்தவர்கள் தேவர்கள். காஸ்யப முனிவருக்கும் திதிக்கும் பிறந்தவர்கள் இரண்யாட்சன், இரண்யகசிபு. இரண்யகசிபுக்கு பிறந்த மகன் பக்த பிரகாலதன். பக்த பிரகாலதன் பேரனாக மஹாபலி சக்கரவர்த்தி, தேச மக்களை நன்றாக பாதுகாத்து ஆட்சி செய்து வந்தான். மகாவலிமைக் கொண்ட மஹாபலி, இந்திரனையும் வென்று மூவுலகங்களையும் ஆண்டு வந்த காலத்தில், தேசத்தை இழந்த இந்திரனின் வேண்டுக்கோளுக்கு இணங்க, காஸ்யப முனிவருக்கும் அதிதிக்கும் மகனாக “ வாமனன்” அவதரித்தார்.
வாமனன் மாணுருவாய் மாவலி வேள்வியில் மூன்றடி வேண்டி, ஈரடியால் மூவுலகை அளந்து, மண்முழுதும் அகப்படுத்தி, மூன்றாவது அடியை மஹாபலி சக்கரவர்த்தி தலையில் வைத்து ஆசி வழங்கினார்.
அப்பொழுது அவன் கேட்ட வரமானது, வருடந்தோறும் சிங்க மாதத்தில் திருவோணம் அன்று, தேச மக்களை காணுமாறு வரம் கேட்க, அதையும் வாமனான “ ஸ்ரீமந் நாராயணன்” வழங்கினார் என்பது சரித்திரம். அந்த நாளை “ ஓணம் “ என்று கேரள மக்கள் மஹாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளாக கொண்டாடுகிறார்கள்.
வாமன அவதாரத்தில் குறளுருவாய் சென்று, நெடுமாலாக வளர்ந்து, மூவுலகையும் அளக்கும் பொழுது, மண்முழுதும் அகப்படுத்தி , உலக மக்கள் அனைவரின் தலைமேலும் திருவடியால் தடவி, உலக மக்களை ஆசீர்வதிப்பதற்கான அவதாரம் வாமன திருவிக்கிரம அவதாரம்.
"மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை, மலர் புரையும் திருவடியை வணங்கினேனே”
என்று திருமங்கயாழ்வாரும்,
“மாமுதலடி போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி, மண்முழுதும் அகப்படுத்து"
என்று நம்மாழ்வாரும்,
பெருமாளின் பெரிய திருவடி, தாமரை மலர் போல் விரிந்து, கவிழ்த்து ஆசீர்வசித்து, மண்முழுதும் அகப்படுத்தினான், என்று வாமன திருவிக்கிரம அவதார ரகசியத்தை தெளிவாக கூறியுள்ளனர்.
அவன் திருவடி சம்மந்தத்தினால் பூவுலகம் அனைத்து வளங்களையும் பெற்று மகிழ்வாக இருக்கின்றன.
மொத்தம் 27 நக்ஷத்திரங்கள் இருக்க, எல்லா நட்சத்திரங்களுமே ஏற்றமுடைய நஷத்திரமாக இருக்க, திருவோணம் நக்ஷத்திரம் தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை ஆழ்வார்கள் பாசுரங்கள் கொண்டு அறிய முற்படுவோம்
பெரியாழ்வார் திருப்பல்லாண்டு என்ற பிரபந்த்தில்
“எந்தை தந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன், ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம், திருவோணத் திருவிழவில் அந்தியப்போதில் அரியுருவாகி, அரியை அழித்தவனை பந்தனை தீரப் பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே“
நரசிம்ம அவதாரத்தை பின் இரண்டு அடிகளில் தெளிவாக காண்பித்து, ஏழு பிறப்புகளிலும் திருவோணத்தை திருநாளாக கொண்டாடுவோம் என்று பெரியாழ்வார் கூறுகிறார். நரசிம்மன் அவதரித்தது ஸ்வாதி நக்ஷத்திரமாக இருக்க, இங்கு திருவோணத்தை கொண்டாடுகிறார்.
பெரியாழ்வார் 1-2- 6 திருமொழியில்,
“மத்த களிற்று வசுதேவர் தம்முடை, சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்" என்று,
ஹஸ்த நக்ஷத்திரத்தின் கீழாக பத்தாம் நாள் திருவோணம் நக்ஷத்திரம், மேலாக பத்தாம் நாள் ரோகிணி நக்ஷத்திரம். இங்கே ஆழ்வாரின் திருவுள்ளம் கண்ணனின் அவதார நக்ஷத்திரத்தை திருவோணம் என்றே குறிப்பிடுகிறார், இதனை மற்றொரு பாசுரம் மூலம் தெளிவாக அறியப்பெறுவோம்.
கண்ணன் பிறந்த வைபத்தை கூறும் முதல் பத்தில் 1-3 ல்
“ பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத்தான் புகுவார் புக்கு போதுவார்
ஆணொப்பார் இவன் நேரில்லை காண்
திருவோணத்தாண் உலகாளும் என்பார்களே"
இங்கே பெரியாழ்வார் கண்ணன் பிறந்த நக்ஷத்திரம் ரோஹிணியாக இருக்க, அதைவிடுத்து திருவோணம் என்று கொண்டாடுகிறார். இதை வைத்து "அத்தத்தின் பத்தாம் நாள்" திருவோணம் என்பதும், கண்ணன் அவதரித்தது திருவோண நக்ஷத்திரம் என்பதும் பெரியாழ்வார் திருவுள்ளம்.
“கன்றுகள் ஓடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால்
தென்றி கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய், நீ பிறந்த திருவோணம்
இன்று நீ நீராட வேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய் “
கடைசி இரண்டு வரியில், ரிஷிமுக பர்வத்தில் ஸூக்ரீவனிடம் இராமன் தன் வலிமையைக் காட்ட, ஒரு அம்பினால் ஏழு மரங்களை ஒருங்கே எய்தவன் என்று பெயர் பெற்ற இராமனை குறிப்பிட்டு, பிறந்த நஷத்திரம் திருவோணம் என்று கூறுகிறார் பெரியாழ்வார். இராமன் பிறந்த நஷத்திரம் புனர்பூசமாக இருக்க, இங்கு “நீ பிறந்த திருவோணம்” என்று ஆழ்வார் கொண்டாடுகிறார்.
பெரியாழ்வார் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தார் வராஹ க்ஷேத்திரமாக கருதப்படுகிறது. அங்கே கோயில் கொண்டிருக்கும் எம்பெருமான் “ வடபத்ரசாயி “ என்ற ஆலிலைக் கண்ணன். ஆனால் பெருமாளின் திருநக்ஷத்திரமாக புரட்டாசி திருவோணம் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் கண்டருளி, திருவோணத்து அன்று தீர்த்தவாரி கண்டருளிகிறான், ஸ்ரீவில்லிபுத்தூர் வராஹ க்ஷேத்திரத்தில் இருக்கும் வடபெருங்கோயிலுடையான்.
"உலகு உண்ட பெருவாயா" என்று நம்மாழ்வரால் போற்றப்பட்ட திருவேங்கடமுடையான் திவ்ய க்ஷேத்திரம், வராஹ க்ஷேத்திரம். ஆனால் சிந்து பூ மகிழும் திருவேங்டத்து ஆயன், புரட்டாசி மாதத்தில் பிரமாண்டமாக பிரமோற்சவம் கண்டருளி, புரட்டாசி திருவோணம் அன்று தீர்த்தவாரி கண்டருளிகிறான்.
இவ்வாறக இரண்டு வராக க்ஷேத்திரத்து எம்பெருமான்களும் திருவோணம் நக்ஷத்திரத்தை தனது நக்ஷத்திரமாகக் கொண்டு திருநாள் கண்டருளிகிறான் என்பதனையும் கவனித்தால் திருவோணத்தின் பெருமை நன்றாக புலப்படும்.
ஸ்ரீமந் நாராயணனின் அவதாரமான வராஹம், நரசிம்மம் , வாமனன், கண்ணன், இராமன் என்று பல்வேறு அவதாரங்கள், பல்வேறு நக்ஷத்திரத்தில் தோன்றினாலும், ஆழ்வார்கள் திருவோண நக்ஷத்திரம் என்று குறிப்பிடுவதை மேலே பாசுரங்களின் மூலம் அறிந்துக் கொண்டோம்.
உத்திராடத்தின் நான்காம் பாகமும் திருவோணத்தின் முதல் பாகமும் சந்திக்கும் நக்ஷத்திரம் "அபிஜித்" என்ற பேரொளி கொண்ட நக்ஷத்திரம். சூரியனையும் விட மிகப் பிரகாசமான நக்ஷத்திரம். அபிஜித் என்றாலே வெற்றி , அதிர்ஷ்டம் தரக்கூடிய நக்ஷத்திரம். கெளரவர்கள் வெற்றிபெற மஹாபாரத போரை அபிஜித் முகூர்த்த காலத்தில் தொடங்க சஹாதேவன் நாள் குறித்துக் கொடுத்தான். அதனை அறிந்த கண்ணன் அபிஜித் நக்ஷத்திரத்தை மறைத்து வைத்தான் என்றும் அறியப்படுகிறது. அபிஜித் என்ற பேரொளி வண்ணனாகவும் ஶ்ரீமந் நாராயணன் விளங்குகிறான். அபிஜித் நக்ஷத்திரத்தை தன்னகத்தே கொண்டு விளங்கும் திருவோணத்தான் என்பது மற்றொரு சிறப்பு.
ஸ்ரீமந் நாராயணனின் திருநக்ஷத்திரம் “ திருவோணம்” என்பதனால், அவன் எந்த நக்ஷத்திரத்தில் அவதாரம் எடுத்தாலும், ஆழ்வார்கள் அவனுடைய ஆதிமூல நக்ஷத்திரமான திருவோணத்துடன் ஒப்பிட்டு பாசுரம் பாடியிருக்கிறார்கள். திருவோணத்தான் உலகை ஆள்வான் என்பது ஆழ்வார்கள் வாக்கு. அவனே வாமன அவதாரத்தில் திருவிக்கிரமானாக உலகை அளந்தான். அவனே உலகு உண்ட பெருவாயனாக திருவேங்கடத்தில் புரட்டாசி திருவோணம் அன்று தோன்றி உலகை ஆண்டுக் கொண்டிருக்கிறான். இவ்வுளவு சிறப்பு வாய்ந்த ஸ்ரீமந் நாராயணனின் திருநக்ஷத்திரமான திருவோணம் நன்னாளை “ ஓணம் “ என்றும், வாமன ஜெயந்தி என்றும், மஹாபலி சக்கரவர்த்தியை வருடந்தோறும் வரவேற்கும் நாளாகவும் , கேரள மக்கள் அன்போடு கொண்டாடி வருகின்றனர்.
இதற்கு முதற்காரணமாக இருந்த “ உருகுமால் நெஞ்சம்” என்று நம்மாழ்வரால் பாடப்பெற்ற “ திருகாட்கரை அப்பன்” திருவடிகளில் பல்லாண்டு பாடி, மண்ணவர்கள் ( மண்ணில் பிறந்தவர்கள்) நலமுடன் வாழ பிரார்த்திப்போம்.
“ஒண் மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப
ஒருகாலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண்மதியும் கடந்து அண்டமீது போகி
இருவிசும்பிலூடு போய் எழுந்து, மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித்
தாரகையின் புறம்தடவி அப்பால் மிக்கு
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை
மலர் புரையும் திருவடியே வணங்கினேனே"
என்று திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகத்தில் திருவிக்கிரம அவதார சிறப்பை தெரிவித்தது போல், மலர் புரையும் திருவடியைப் போற்றி நாமும் வணங்குவோம்.
...........(தொடரும் திருவோணம் தமிழர் திருநாள்)
மகர சடகோபன்
தென்திருப்பேரை
நிறைய நல்ல நலதகவல்கள், அருமை
பதிலளிநீக்குஅருமை. அரிய பல கருத்துக்களை நல்ல தமிழில் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.🙏
பதிலளிநீக்கு