எண்களின் ஏற்றம் ( எண்களின் வடிவம் எம்பெருமான்) - 2

 






நவதிருப்பதி 

கடந்த பாகத்தில் திருமங்கையாழ்வார் எண்களைக் கொண்டு ஏறு முகமாகவும் இறங்கு முகமாகவும் தேர்த் தட்டுகளைக் கட்டமைத்து ஆராவமுதனை எழுந்தருளச் செய்தார் என்பதனை அனுபவித்தோம். தேர்த் தட்டுகள் கட்டமைப்பு என்பது குறியீடு அடிப்படையில், தனிமனிதனுக்கும் சமுதாயத்துக்கும்  ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் குறிக்கிறது. தேர் என்பது ஊர்கூடி சமுதாயமாக இழுப்பது போல்,  ஏற்ற இறக்கங்களைச் சமுதாயமாகச் சரிசெய்ய (Team work) வேண்டும் என்பதுதான் குறியீடு. எண்களின் மகிமையைத் தேர் பந்தன கவி மூலம் அனுபவித்தோம்.


அடிப்படை எண்கள் பத்து என்றாலும் , முதல் எண் பூஜ்யம். பூஜ்யம் என்பது ஒரு எண்ணுக்குப் பின் வரும்பொழுது அதன் மதிப்புக் கிடைக்கப்பெறுகிறது அல்லது உயர்கிறது. தனியாக அதற்கு மதிப்பு கிடையாது.  இந்த பூஜ்யத்தைக் கழித்து மற்றைய எண்கள் ஒன்பது.  அடிப்படை எண்கள் என்பது இந்த ஒன்பது எண்கள். கோள்கள் ஒன்பது. இப்பொழுது நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் திருவிழா ஒன்பது நாட்கள் நவராத்திரி. எங்களது ஊரான தென்திருப்பேரைச் சுற்றி அமைந்துள்ள வைணவ ஸ்தலங்கள் நவதிருப்பதிகள் என்றும், சில ஸ்தலங்கள் நவ கைலாசம் என்றும் அழைக்கப்படுகின்றன. 

அடியேனது  ஆசாரியனின் கடாக்ஷத்தைப் பிரார்த்திக்க வானமாமலை சென்றிருந்தேன். அப்பொழுது ஸ்வாமி 108 திவ்ய தேச கணக்கு எப்படி வந்தது என்பதை அழகாக சாதித்தருளினார்.‌‌ஸ்வாமி சாத்தித்தருளியதும் அடிப்படை எண்களைக் கொண்டு , இந்தத் திவ்ய தேச  எண்ணிக்கையை வரையறை செய்து சாதித்தருளினார்
                                                                      
அடிப்படையில் குணங்கள் மூன்று அதாவது ஸத்வராஜஸதாமஸ குணங்கள். இந்த மூன்று குணங்களுடன் ஒன்பதைப் பெருக்கினால்  கிடைக்கப் பெறுவது 27 நக்ஷத்திரங்கள்.

ஒவ்வொரு நக்ஷத்திரமும் நான்கு பாகங்களைக் கொண்டது.  மொத்த நக்ஷத்திரங்கள் (27×4) 108 பாகங்களாக இருக்கின்றன. இந்த நக்ஷத்திரங்களின் 108 பாகங்கள் இங்கு 108 திவ்யதேசங்களாக எம்பெருமான் ஶ்ரீமந் நாராயணன் எழுந்தருளியிருந்து நம்மையெல்லாம் ரக்ஷித்துக் கொண்டிருக்கிறான்.

இதில் உத்திராட நக்ஷத்திரத்தின் நான்காவது பாகம் மற்றும் திருவோண நக்ஷத்திரத்தின் முதல் பாகம் சந்திப்பில் அபிஜித் என்ற நக்ஷத்திரம் உள்ளது . இது சூரியனைக் காட்டிலும் மிகப் பிரகாசமான ஒளியைக் கொண்ட நக்ஷத்திரம். அந்த நக்ஷத்திரத்தின் ஒளியில் உத்திராடத்தின் நான்காவது பாகமும் திருவோணத்தின் முதல் பாகமும் இப்பூவுலகில் தெரிவதில்லை. அதுவே திருப்பாற்கடலாகவும்  திருநாடு என்கிற பரமபதமாகவும் இங்கே தெரிவதில்லை. மற்ற 106 திவ்யதேசங்களும் இப்பூவுலகில் உள்ளன, அதாவது நமக்குத் தெரிய வருகின்றன என்று வானமாமலை வர்த்தமான (இப்பொழுதுள்ள) ஸ்வாமி சாதித்தருளினார்.

ஆழ்வார்கள் திருவாக்குகளில் உறைந்து பாடல்களாக வெளிப்பட்டு,  வேத உபநிஷ அர்த்தங்களை விளக்கியும், அப்பாடல்களினால் அவன் உறையும் நிலங்கள் திவ்ய தேசங்கள் என்று சிறப்பாக அழைக்கப்பட்டு இன்றளவும் சிறப்புற்று விளங்குவதும், மேற்கூறிய அடிப்படை எண்களின் மகத்துவத்தினால்தான்.

இந்த ஒன்பது எண்களை ஒன்பது கோள்களாக அதாவது ஒன்பது நவக்கிரகங்களாகப் பிரித்து, ஒவ்வொரு கோள்களுக்கும் மூன்று நக்ஷத்திரங்கள் என்ற  அடிப்படையில், மொத்தம் 27 நக்ஷத்திரங்கள்

ஒன்பது திசைகள் நமது வாழ்க்கையில் நடைபெறும் என்று பஞ்சாங்கங்கள் சொல்கின்றன. அவை:- சூரிய திசை 6 வருடங்கள், சந்திர திசை 10 வருடங்கள், செவ்வாய் திசை 7 வருடங்கள், ராகுதிசை 18 வருடங்கள், குருதிசை 16 வருடங்கள், சனி திசை 19 வருடங்கள், புதன்திசை 17 வருடங்கள், கேது திசை 7 வருடங்கள், சுக்ர திசை 20 வருடங்கள் ஆக மொத்தம் 9 திசைகளும், ஒருவருக்கு நடைபெற்றால் 120 வருடங்கள் நடைபெறும். 


ஸ்வாமி ராமானுஜர் பூரண கோள்கனின் ஆட்சி அனுபவத்தைப் பெற்றவர், 120 ஆண்டுகள் பூரணமாக வாழ்ந்தவர். 

நக்ஷத்திரம் உள்ளடக்கிய ஜ்யோதிஸ்ய சாஸ்திரத்தை வழங்கியவன் ஆதிசேஷன். ஸ்வாமி இராமானுஜர் ஆதிசேஷனின் அவதாரம்.   நக்ஷத்திரங்களில் உள்ளுறைந்து திவ்ய தேசங்களில் அர்ச்சா திருமேனியுடன் தரிசனம் கொடுப்பதும்   ஶ்ரீமந்  நாராயணன்.   நக்ஷத்திரகணங்களினுடைய  ஜ்யோதிஸ சாஸ்திரத்தை வழங்கிய ஆதிசேஷன், பிற்காலத்தில்  இராமானுஜராக  அவதரித்து   நக்ஷத்திரத்தில் உள்ளுறையும் , ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களை உலகறியச் செய்தவர்.

பின்வரும் திருமழிசையாழ்வாரின் நான்முகன் திருவந்தாதி பாசுரம்,

  "தரித்திருந்தேனாகவே தாராகணப்போர்
  விரித்துரைத்த வெந்நாகத்துன்னைத் - தெரித்தெழுதி 
  வாசித்ததும் கேட்டும் வணங்கி வழிபட்டும் 
  பூசித்தும் போக்கினேன் போது"

தாராகணம் - நக்ஷத்திரகணங்களினுடைய

போர் -  ஸஞசாரத்தை ( சுபாசுப நிமித்தமாக)

விரித்து உரைத்த -  ஜ்யோதிச்சாஸ்தர முகத்தாலே விஸ்தாரமாக வெளியிட்டவனும்

வெந்நாகத்து உன்னை - பிரதிகூலர்க்கு தீக்ஷ்ணனுமான திருவனந்தாழ்வாரனுக்கு அந்தராத்மாவாகிய உன்னை

தெரித்து - அநுஸந்தித்தும்

எழுதி - எழுதியும்

வாசித்தும் - எழுதினவற்றை படித்தும்

கேட்டும் - ச்ரவணம் பண்ணியும்

வணங்கி - நமஸ்கரித்தும்

வழிபட்டும் - உபசாரங்களை செய்தும்

பூசித்தும் - பூசித்தும்

போது போக்கினேன் - காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறேன்

தரித்திருந்தேன் ஆகவே - ஸத்தை பெறுவதற்காக


வானமாமலை ஸ்வாமியும் மேற்கூறிய திருமழிசையாழ்வாரின் நிர்வாகம் கொண்டு 108 திவ்ய தேசங்களின் எண்ணிக்கை அமைப்பை  சாதித்தருளினார்.

அடிப்படை எண்களின்  மூலம் வரையறை செய்யப்பட்ட நக்ஷத்திரம் , நூற்றெட்டு திருப்பதி மகிமைகளை  அனுபவித்தோம்.

அடிப்படை எண்களின் உருவமாக எம்பெருமான் எழுந்தருளியுள்ளான் என்பதனை அடுத்த பாகத்தில் அனுபவிப்போம். 

                                                                     ......... (தொடரும்)
மகர சடகோபன்
தென்திருப்பேரை 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

கம்பனின் அம்பறாத்தூணி

மக்களின் தலைவன்