திருவோணத் திருநாள் -2


 

ஆவணி திருவோணம் (ச்ரவண மாதம் ச்ரவண நக்ஷத்திரம்) அன்று, வாமன ஜெயந்தி, ஓணம்  என்றும், உலகளந்த உத்தமனின் உதயத்தைக்  கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில்,  ஸ்ரீமந் நாராயணனின் மற்ற அவதாரங்களான நரசிம்மன், இராமன்,  கண்ணன்,  வராஹன் போன்ற அவதாரங்களுக்கும்,  திருவோண நக்ஷத்திரக்கும் உள்ள தொடர்பை ஆழ்வார்கள் பாசுரங்கள் கொண்டு அநுபவிக்கப் பெற்றோம் கடந்த வார கட்டுரையில்.  

ஒரு நண்பர் கேட்ட கேள்வி,  ஓணம் என்பது கேரளத்துக்கு மட்டுமான பண்டிகையா அல்லது தமிழ் நாட்டிலும் கொண்டாடப்பட்ட பண்டிகையா என்ற கேள்விகளுக்கு , பதில் தேடும் விஷயமாக,  இந்த கட்டுரை அமைந்துள்ளது.  

தமிழ்நாட்டில் இன்றும்  புரட்டாசி மாதம் திருவோணம் நக்ஷத்திரம் ,  பல தரப்பட்ட மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன என்று பார்க்க முடிகிறது. சித்திரையில் சித்திரை,  வைகாசி விசாகம், ஆவணி திருவோணம், கார்த்திகையில் கார்த்திகை, மார்கழி திருவாதிரை,தை பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் என்று மாதமும் அதற்கான நக்ஷத்திரமும் சேர்ந்து வரும் நாள்கள்,   அந்த நாட்கள் எல்லாம் சனாதன தர்மத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.  கொண்டாடப்படும் நாள்களில் சிறிது கால வித்தியாசங்கள் இருந்து வந்துள்ளன. 

"நிலவே நீல் நிற விசும்பில் பல்கதிர் பரப்பி கலிகெழு மறுகின் விழவு அயரும்பே" 

முழு நிலா காலங்களில் இரவு முழுவதும் சந்திரனின் கதிரொளியில் விழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளன என்று மேற்கூறிய நற்றிணை , சங்க இலக்கிய நூல் தெளிவாகக் காட்டுகிறது.

மேற்கூறப்பட்ட நாட்கள் எல்லாம் முழு நிலா காலங்களில் வரக்கூடிய முக்கியமான தினங்கள். முழு நிலா காலம் என்பதனால் விழாக்கள் நிலா வெளிச்சத்தில் இரவு முழுவது குதூகலமாக கொண்டாடப்பட்டது.‌ சங்க நூல்கள் மேற்கூறப்பட்ட அனைத்து திருவிழா கொண்டாடங்களையும் குறிக்கிறது. 

மேலும் திருவிழாக்கள் நதிகளிலும், நில விளைச்சலைக் குறிக்கும் வகையிலும்  கொண்டாடப்பட்டுள்ளது. 

பாரதத்தில் சூரியனை மையமாக்கொண்டு காலத்தை நிர்ணயம் செய்யும் மக்களும்,  சந்திரனை மையமாக் கொண்டு காலத்தை நிர்ணயம் செய்யும் மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.  அவர்களுக்கு இடையில் குறைந்தது 11நாட்கள் வித்தியாசம் இருப்பதையும் நாம் அறிகிறோம். விழாக்கள் கொண்டாடுவதில் கால வித்தியாசங்கள் இருப்பதை நாம் உணர்ந்து அறிந்துக் கொள்ள முடிகிறது.

ச்ரவண மாதத்தில் ச்ரவண நக்ஷத்திரம் என்பது மாதமும் நக்ஷத்திரமும் சேர்ந்து வருகின்ற நாள். அந்த நாளும் சனாதன தர்மத்தில் மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகிறது .  ஆவணி மாதம் ச்ரவண மாதம் என்று கொண்டாடப்படுகிறது மற்ற மாநில மக்களால்,  ஆதலால் ஆவணி திருவோணம் மிகவும் விசேஷமான நாளாகவே கருதப்பட்டு கொண்டாடப்பட்டுள்ளது என்பதனை தமிழ் நூல்கள் கொண்டு அறிய முயற்ச்சிப்போம்.  

ஆவணிக்கு அடுத்தமாதம் தமிழில் புரட்டாசி மாதம் என்பதனால், புரட்டாசி திருவோணம்,  திருவேங்கடமுடையானின் திருநக்ஷத்திரமாக தமிழ் நாடு,  ஆந்திரா போன்ற மாநிலங்களில் மிக சிறப்பாக மாவிளக்கேற்றி,  அன்னதானம் செய்து, குடைவிழா போன்ற நிகழ்ச்சிகள் மூலம் இன்றும் கொண்டாடிக் கொண்டு வருகின்றனர்.  இதிலிருந்து திருவோணம் தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படுகின்றன என்பது தெரிகிறது 

ஆவணி மாதம் திருவோண நக்ஷத்திரம் வாமனனுக்கும்,  புரட்டாசி திருவோணம் திருவேங்கடமுடையானுக்கும் கொண்டாடப்படுகின்ற நாள்கள் என்றாலும்,  பொதுவாக ஸ்ரீமந் நாராயணன்,  மஹாவிஷ்ணுவுக்கு ஏற்ற உயர்ந்த நாளாகக் கருதி மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பது நமக்கு புலப்படுகிறது.  

பாண்டியன் காலத்தில் தமிழ்நாட்டில் ஓணவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளன என்தற்கான குறிப்பு மதுரை காஞ்சி என்ற நூலிருந்து கிடைக்கப்பெறுகின்றன. மாங்குடி மருதனார் என்ற புலவர்,  அப்பொழுது பாண்டிய நாட்டை ஆண்டு வந்த தலையங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் என்ற அரசனைப் போற்றி எழுதிய நூல் மதுரை காஞ்சி.  

ஒரு அரசன் போரில் வெற்றிபெற்றதன் மகிழ்ச்சியை குறிக்கும் வண்ணம் சூடுவது வாகைப்பூ.  வாகை சூடியவுடன் வெற்றி களிப்பில்,  அகங்காரம் தலையேறி அரசன் தடுமாறக் கூடாது என்பதற்காக,  அமைச்சர்கள் ஆன்றோர்கள் அறிவுரைகளைக் கூறி,  அரசனுக்கு காஞ்சி பூ சூடுவது வழக்கம்.  இதை போர் தினை என்று கூறுவார்கள்.  வெட்சி, வஞ்சி, உழிஞை,தும்பை, வாகை என்று ஐந்து வகையான பூக்கள் போர்களத்திலும்,  போர் முடிந்து நல்லாட்சி நடைபெற காஞ்சிபூ சூடுவதும் வழக்கமாக கொண்டடிருந்தனர் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. 

அவ்வாறு சூட்டியதே மதுரை காஞ்சி.  போரில் சேர சோழ மன்னர்களை தலையங்கானத்து என்ற இடத்தில் வென்ற பாண்டியனை,  நிலையான ஆட்சி கொடுப்பதற்காக அறிவுரை கூறிய நூல் மதுரை காஞ்சி என்று கருதப்படுகிறது.


கணம்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்மாயோன் மேய ஓண நல் நாள்,கோணம் தின்ற வடு ஆழ் முகத்த,சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை,மறம் கொள் சேரி மாறு பொரு செருவில், மாறாது உற்ற வடுப் படு நெற்றி,
சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்டநெடுங் கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப,கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர”
கணவர் உவப்பப் புதல்வர் பயந்துபணைத்து ஏந்து இளமுலை அமுதம் ஊறதிவவு மெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணி,குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி

இந்த பாடலில் “  மாயோன் மேய ஓண நன்னாள் “ என்று ஓணம் பண்டிகை பாண்டியன் தேசத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளன என்று மதுரை காஞ்சியில் குறிப்புகள் காணப்படுகின்றன. சேரிப்போர் என்ற வீர விளையாட்டுகளும், அதனால் ஏற்பட்ட வடுகள் மாறாது நெற்றியில் வீரர்களுக்கு இருப்பதையும்,  யாழ் போன்ற இசைக்கருவிகள் முழக்கமிட்டு யானை விளையாட்டுகளும், கணவன் மனைவி பிள்ளகள் சூழ ஓண பண்டிகையை கண்டு களித்து குட கூத்தாடினார்கள் என்ற குறிப்பும் காணப்படுகின்றன. இன்று கேரளாவில் கொண்டாடுவது போல் அனைத்தும் கொண்டாடியதற்கான ஆதாரங்கள் மதுரை காஞ்சியில் கிடைக்கப் பெறுகின்றன. 

இறையனார் களவியல் என்ற நூலுக்கு உரை எழுதிய நக்கீரர், களவு பகுதியில் உள்ள 29ம் பாட்டுக்கு “ காப்பு கைமிக்குக் காமம் பெருகினும்“ பின் வருமாறு உரை எழுதுகிறார். ணசயஹஞ
சிறைக்காவல் வைத்திருக்கும் தலைவியை , தலைவன் சந்திக்காமல்  இருப்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவையாவன தாய் துஞ்சாமை,நாய் துஞ்சாமை, ஊர் துஞ்சாமை, காவலர் கடுகுதல்,  நிலவு வெளிப்படுதல், கோழிக் குரல் காட்டல். இதில் ஊர்துஞ்சாமை என்று சொல்லும் பொழுது,

மதுரையில் ஆவணி அவிட்டம், உறையூர் பங்குனி உத்திரநாள், கருவூர் உள்ளிவிழா “என்று குறிப்பிடுகிறார். மதுரையில் ஆவணி அவிட்டம் என்பது ஆவணி திருவோணத்தையை குறிக்கிறது என்ற குறிப்பும் கிடைக்கப்பெறுகின்றன. திருவோணத்துக்கு மறுநாள் அவிட்டம் என்பதனால், முழுநிலவு காலத்தில்  ஓணத்தையை குறித்து உரை எழுதியதாகவும்,  பாண்டியன் தலைநகர் மதுரையில் ஓணம் பண்டிகை ஊர்துஞ்சாமல் பல்வேறு களியாட்டங்களுடன் கொண்டாடப்பட்டது என்று தெரிகிறது

திருஞானசம்பந்தர் பூம்பாவாய் என்ற பதிகத்தில்,  
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள் துய்ப்புனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்” என்று ஓண விழாவின் சிறப்பை குறிப்பிடுகிறார்.   

ஆவணி திருவோணம், புரட்டாசி திருவோணம், ஐப்பசி திருவோணம் என்று மூன்று மாதங்களில் தொடர்ச்சியாக திருவோணம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்றும் , இன்றளவும் அந்த விழாக் கொண்டாட்டங்கள் பாரதத்தில் தொடர்கின்றன என்பதைப் பார்க்கமுடிகிறது.

நஷத்திரங்கள் மொத்தம் 27,  அவற்றுள் இரண்டு நஷத்திரங்கள் ” திரு” என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகின்றன. இது தமிழின் ஏற்றமா? அந்த இரண்டு நக்ஷத்திரத்தின் ஏற்றமா?,  அல்லது அந்த நக்ஷத்திரங்களை திருநக்ஷத்திரமாகக் கொண்டுள்ள மூர்த்திகளின் ஏற்றமா? என்று எண்ணும்படி வியப்பாக உள்ளன.

ஒன்று திருவோணம் மற்றொன்று திருவாதிரை. திருவோணம் திருமாலின் திருநஷத்திரம், திருவாதிரை சிவபெருமானின் திருநஷத்திரம்.  பொதுவாக “திரு” என்பது பெண் தெய்வமான தாயாரைக் குறிக்கும் சொல்அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைமார்பா , என்று தம் நெஞ்சில் எப்பொழுதும் மஹாலெஷ்மியை வைத்துள்ளவர் மஹாவிஷ்ணு.  சிவபெருமான் தன்தேவிக்கு உடம்பில் பாதி பாகத்தைக் கொடுத்தவர்.  இருவரும் தன் உடம்பில் தத்தம் தேவியர்களுக்கு இடம் கொடுத்தவர்கள் என்பதனால்,  அவர்களுடைய திருநக்ஷத்திரம் தமிழில் “திரு”  என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறதோ என்று எண்ணும்படியும் வியப்பாக உள்ளது.

மாயோன் ஐந்தினை கடவுள்களில் ஒருவனாகவும், முல்லை நிலத்தில் வணங்கப்படும் கடவுளாகவும் இருப்பதனால்,  மாயோனுக்கு உகந்த நக்ஷத்திரமான திருவோணம் தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படுவது இயற்கையான ஒன்று.  திருவோணமும் தமிழர் பண்டிகையே,  தமிழர்களாகிய நாமும் சிறப்பாகக் கொண்டாடுவோம்.  


அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துக்கள் 


மகர சடகோபன் 

தென்திருப்பேரை 


கருத்துகள்

  1. அற்புதமான மேற்கோள்களுடன் அறிந்திடாத பல தகவல்கள் கொண்ட கட்டுரை. மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

எல்லைச்சாமி

கம்பனின் அம்பறாத்தூணி