உப்பும் சுதந்திரமும்

 





இன்று சுதந்திர தினம் ....

உற்சாகம் ....... சுதந்திரக் காற்று ....... பொருள்களின் மீது வரிகள் விதிக்கப்பட்டாலும் .......ஒரு பக்கம் விலைகள் அதிகம் இருந்தாலும்....... ஒரு பக்கம் சம்பளம் உயர்ந்து காணப்படுகிறது என்பதும் உண்மை...... பொருளாதார சுழற்சியில் இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாத ஒன்று ......... ஆனந்தமான சுதந்திரக் காற்று.

சுதந்திரம் எங்கள் அடிப்படை உரிமை.........

சுதந்திரம் என்பது அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் அடிப்படை உரிமை ....... பேச்சு உரிமை ...... ஆட்சியை தேர்ந்தெடுக்கவும் மாற்றவும் உரிமை ......... கருத்து உரிமை ....... எழுத்து உரிமை ..... அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கும் உரிமை ......, உரிமை உணர்வுகளுடன் உள்கலந்த ஒன்று.......

ஒரு மனிதனுக்கு எல்லாம் இருந்து சுதந்திரம் மட்டும் இல்லை என்று வரும்போது அவனுடைய மனநிலை எவ்வாறாக இருக்கும் ....... இருந்தும் இல்லாதவன் போல் மனநிலை குன்றி காணப்படுவான். இதைச் சொல்லால் விவரிக்கமுடியாது ..… அனுபவத்தில் உணரக்கூடியது சுதந்திரம்..

"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்"........ தாகம் தணிந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன..... தாகம் பல வகையில் தூண்டி பல இன்னல்களை ஏற்படுத்தி ..... பல உணர்வுகளை தூண்டி .... கட்டுப்படுத்தி....... சோதனையின் தாகம் சுதந்திரம்.


நேற்று.......

ஏதோ உடல் வலி அதிகம் இருக்க, காலையில் எழுந்திருக்கும் நேரத்தில் உடல் வலியுடன் மனச்சோர்வும் சேர்ந்த அயர்வான நாள். 

மேலும் வெளியில் சென்று அயர்வை போக்கலாம் என்றால் மணல் புயல், எங்கும் மணல் பனிமூட்டம் போல் மணல் மூட்டம். வெளியில் செல்லமுடியாத நிலை. அயர்வுடன் பசியும் சேர்ந்து மேலும் ,.....,.


விரைவில் செய்யக்கூடிய எளிய உப்புமா செய்து சாப்பிடும் போது உப்பில்லை என்பதை அறிந்து , உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழிக்கு ஏற்ப " தூரக்குழி" என்னும் வயிற்றுக் குழியில் கொட்டினேன்.

அப்பொழுதுதான் உப்பின் அருமையும், உப்பின் இன்றியமையாத தன்மையும் அறிந்தோம். குழந்தை பருவத்தில் முதலில் சொல்லிக் கொடுக்கும் சொல் "உப்பு". இயல்பாக உச்சரிக்கக்கூடிய இயல்பு தன்மைப் பொருந்திய இயற்கைப் பண்டம்.

உடலில் உப்பின் தன்மை குறையும் பொழுது, உடல் சோர்வு தோன்றி , இரத்த அழுத்தம் குறைந்து மூளைப் பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரம் உப்பின் தன்மை அதிகரிக்கும் நேரத்தில் , இரத்தம் அழுத்தம் அதிகரிக்கும், இரத்த நாளங்களில் வெடிப்பை ஏற்படுத்தி இரத்தகசிவை உருவாக்கும்.  உடலில் உப்புத்தன்மையை சரிவர வைத்திருக்க வேண்டும். உப்பு அவசியம் அன்றாடம் தேவைப்படக்கூடிய பொருள்.

உப்பு உணவுக்கும் , சுவை கூட்டும் பொருளாக மட்டும் இல்லாமல், உணவு பொருட்களை நீண்ட நாள் உபயோகப்படுத்த அதனை பதப்படுத்தும் முக்கியப் பொருளாக உப்பு தேவைப்பட்டது. 

பெண்களின் மாதவிடாய் காலம் முடிந்து , குளித்து வீட்டிற்குள் வரும் பெண்மணியை உப்பு ஆகாரம் முதலில் உட்கொள்ளச் செய்வது என்பது இன்றும் சில கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் மரபு.

"உப்பும் தண்ணீரும் குடித்தால்"  உடல் சோர்வு முறிந்து, உற்சாகம் தரும் என்பது கிராம மக்கள் பழக்கம். 

" உப்பிட்டவரை உள்ளவும் நினை" என்பது பழமொழி.

இந்த பழமொழிக்கு  நேர்மாறாக இந்திய வரலாற்றில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது என்பதனை ராய் மாக்ஸிம் "உப்பு வேலி" என்ற புத்தகம் அருமையாக விளக்குகிறது.

புதர் வேலி ஒன்றை அமைத்து, உப்பு வியாபாரத்தைக் கட்டுபடுத்தி , உப்பின் மீது வரிகளை அதிகமாக  அதிகரித்து, உப்பு வாங்கி சாப்பிடுவதையே கொடுமைப் படுத்தியுள்ளனர் கிழக்கத்திய கம்பெனி நிர்வாகம்.


ஒரு சராசரி இந்தியனின் சம்பளம் ரூ. 1 ஆக இருக்க, அப்பொழுது ஒரு பவுண்ட உப்பின் விலை ரூ 2  என்று விற்கப்பட்டது. அது மேலும் அதிகரித்து ரூ 4.5  என்றும் விற்கப்பட்டது. சராசரி இரண்டு மாதம் முதல் 4.5 மாதம் சம்பளம் உப்புக்காக மட்டும் ஒதுக்கவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப் பட்டுள்ளனர்.

உப்பு வாங்குவது , உப்பை சமையலில் சேர்ப்பது என்பது இயலாதக் காரியமாக அன்று நிலவியது.

ஒரு புறம் கடினமான உழைப்பு , வியர்வை வெளியேற உழைப்பு , உப்பு உடலிலிருந்து வெளியேற்றம். மறுபக்கம் உப்பை உணவில் சேர்த்துக் கொள்ள முடியாத நிலைமை. உப்பு இல்லாமல் மக்கள் மடிந்தனர். இது கற்பனை செய்யமுடியாத ஒரு கொடுமை இந்த சமூகத்திற்கு உருவாக்கப்பட்டது.

இதற்கெல்லாம் காரணம் "புதர் வேலி" என்ற "உப்பு வேலி" வடக்கிலிருந்து தெற்காக சென்று, பாரதத்தின் கிழக்கு மேற்கை பிரித்தது. பல இலட்ச கணக்கான மக்களைக் காவு கொண்டது. கொலை, கொள்ளை, பசி, நோய் என்று பலவகைகளிலும் மக்களின் உயிர்கள் பலி வாங்கப் பட்டது.  இந்தச் சூழ்நிலை வடக்கிலும் , மேற்கிலும் , கிழக்கிலும் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தியது.‌ வங்கம் வலிமையாக வஞ்சிக்கப்பட்டது.

ஒரு புறம் உப்பு என்பது இயற்கையிலே கடலிலிருந்தும், சில பாறைகளிலிருந்தும் கிடைக்கப்பெற்றன. சிறு முதலீட்டில் தாயரிக்கப்பட்ட இன்றியமையாத, அன்றாட உபயோகப் பொருள். அதன் மீது செயற்கையாக வரியை விதித்து , விலையேற்றத்தை ஏற்படுத்தி மக்களை அவதிக்கு உள்ளாக்கினர்கள்.

இதன் காரணமாக காந்தியடிகள் "உப்பு சத்தியாக்கிரகம்" என்ற ஒரு சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது என்றும் ஆசிரியர்  இந்த உப்பு வேலி என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார் 

ஒவ்வொரு இந்தியனும் படித்து அறிந்துக் கொள்ள வேண்டிய அவசியமான புத்தகம்.

"உப்பு வேலி"

உப்பின் தாகம் தணிந்தது  சுதந்திரம்

உப்பு என்பது உணர்வு
சுதந்திரம் என்பது உணர்வு
உணர்வே சுதந்திரம்

மகர சடகோபன்
தென்திருப்பேரை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

எல்லைச்சாமி

கம்பனின் அம்பறாத்தூணி