திருநாமங்கள் காட்டும் தலைமைப் பண்புகள் - மணிவண்ணன்

 மணி வண்ணன் திருநாமம்:


நம்மாழ்வார் திருவாய்மொழி 7-3-2 ல் தென்திருப்பேரை எம்பெருமானை “

“ தேன் மொய்த்த பூம்பொழில் தண்பணை சூழ்* தெந்திருப்பேரெயில் வீற்றிருந்த* வானப்பிரான் மணிவண்ணன் கண்ணன்* செங்கனிவாயின் திறத்ததுவே” என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.




மணிவண்ணன் திருநாமம் காட்டும் தலைமைப் பண்புகள்

1. மணி போன்ற ரத்தினங்கள் விலை மதிப்பு உயர்ந்து இருந்தாலும், புடவைத் தலைப்பில் முடிந்து ஆளலாம்படி அடங்கியிருக்கும்.அதே போல் தலைவன் என்பவன் மதிப்பு புகழ் பெற்றிருந்தாலும் மக்கள் தொடர்புடையவர் என்ற எளிமையைப் பெற்றிருக்க வேண்டும். ( யசோதை உரலில் கயிறு கொண்டு கட்ட, கட்டுண்டு நின்றவன் என்பதன் மூலம் அவன் எளிமை உணரப்படுகிறது)


2. ரத்தினம் என்பது பார்ப்பதற்குப் பெருமிதத்தைத் தரும். அது பிறந்த இடமான மலையும் கடலும் பெருமிதத்துடன் இயற்கையில் தோன்றுபவையாக இருக்கின்றன. அந்த கடலும் மலைகளும் தன்னை அழித்துக் கொண்டு ரத்தினத்தை வெளிப்படுத்துகின்றன மக்களின் மகிழ்ச்சிக்காக என்பதுதான் உண்மை. அதே போல் தலைவன் என்பவனுக்கு அவனுடைய செயலால் மக்கள் மனதிலும் , அவன் மனதிலும்  பெருமிதம் தோன்றுகிறது. தலைவனைப் பெற்ற தாய் தந்தையர் தலைவனைப் பெற்றதால் பெருமிதம் அடைகின்றனர். இந்தப் பெருமிதம் இயற்கை கொடுத்த கொடை அவர்களுக்கு இந்தப் பிறப்பில்.  (எம்பெருமான் கடல் வண்ணன் , மலையப்பன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். "மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய்" என்பது திருவாய்மொழி வாக்கு. திருப்பாற்கடல், திருவேங்கடம், திருமாலிருஞ்சோலை போன்ற திவ்ய தேசங்கள்)


3. ரத்தினம் என்பது தானாகவே கடலிலும் மலைகளிலும் தோன்றுகிறது. கடல் , மலைகள் அவற்றைப் பாதுகாத்து வளர்க்கிறது. அதேபோல் தலைவன் என்பவன் ஒரு தாய் தந்தையருக்கு தானாகவே , அவனுடைய கர்ம பலன் காரணமாக இந்தப் பிறப்பில் அவர்களுக்குக் குழந்தையாகப் பிறந்து, அவர்கள் மூலம் பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறான்.  ரத்தினம் போல் தானாகவே தோன்றிய தலைவர்கள் பலர் உண்டு , அது அவர்களின் இயற்கைக் குணத்தில் ஒன்றாகக் கலந்து இருப்பது என்பது இப்பிறவியில் அவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற பெரும் பாக்கியம்.


4. ரத்தினத்தின் மேன்மை என்பது சுற்றுச்சூழலைப் பொறுத்து அதன் தரத்தின் தன்மை மெருகேற்ற அடையப்பெறுகிறது. அதேபோல் தலைவன் என்பவன் சுற்றுச்சூழல் தன்மையினால் அவனுடைய திறமையின் தரம் மெருகேற்ற அடையப் பெறுகிறது. ( எம்பெருமான் அர்ச்சையாக எழுந்தருளியிருக்கும் திவ்ய தேசங்கள் சுற்றுச்சூழலைப் பொறுத்து மேன்மை, மெருகேற்ற ஏற்படுகிறது). இப்படியாக உருவாக்கப்பட்ட தலைவர்களை ஒவ்வொரு தேசத்திலும், நிறுவனங்களிலும் பார்க்கிறோம்.


5. ரத்தினங்கள் என்பது பலமுறை சுத்தம் செய்து பட்டறைகளில் தீட்டினால் அதன் ஒளிர்வுத் தன்மை என்பது நன்றாக வெளிப்படும். ரத்தினம் ஒளிர்வால் மேன்மைபெறும். அதேபோல் தலைவன் என்பவன் தொடர் பயிற்சியினால் திறமைகளை மெருகேற்றிக் கொண்டு தன் பணிகளைத் திறம்படச் செயல்படுத்தமுடியும்.அதன்மூலம் மேன்மை பெறுவான்.   (எம்பெருமானுக்கும் , திவ்ய தேசங்களும் பக்தர்களின் சம்பந்தம் மூலமே அவனுடைய ஒளிர்வு என்பது ஏற்படுகிறது)


6. ரத்தினமானது தன்னையுடையவனை மார்பு நெறிக்கப் பண்ணும். அதே போல் நல்ல தலைவனை அடைந்த தேசம், தேசத்து மக்களை மார்பு நெறிக்கப் பண்ணும். ரத்தினமானது தன்னையுடையவனைப் பலரும் புகழும் படியும், சமுதாய செல்வாக்கு மிகுந்த நபராகப் பண்ணும். தலைவன் என்பவன் அவனுடைய செயல்களினால் பலராலும் பாராட்டக்கூடியவனாகவும் , சமுதாய செல்வாக்கு மிகுந்தவனாகவும் விளங்குவன்.


7. ரத்தினமானது சேற்றில் புதைந்து கிடந்தால் அதன் ஒளிர்வுத் தன்மை உலகத்திற்குத் தெரிய வராது. சேற்றை நீக்கினால் ரத்தின ஒளிர்வு புலப்படும். தலைவன் என்பவன் தன்னுடைய மாசுக்குணத்தை  அகற்றி, தான்  வெளிப்படும்போது அவனுடைய திறமை முழுவதுமாக வெளிப்படும் .


8. ரத்தினம் என்பது அதன் ஒளிர்வினால் அனைவரையும் தன்பால் ஈர்க்கும் தன்மை கொண்ட பொருள். அதேபோல் தலைவனின் செயல்கள், குணங்கள் அவன்பால் ஈர்க்கும் படி அமைய வேண்டும்.


9.  ரத்தினமானது தன்னையிழந்தவனைக்  கதறிக் கதறி அழச்செய்யும். புலம்பலை ஏற்படுத்தும். நல்ல தலைவனை இழக்கும் போது சமுதாயம் கதறிப் புலம்புவதைப் பார்க்கமுடிகிறது. இதுவே சிறந்த தலைவன் என்பதை வெளிப்படுத்தும் ( மக்கள் மனதில் நிற்கும் தலைவன்)


"மாலே மணிவண்ணா" என்று ஆண்டாளும் , "மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா" என்று அவளுடைய திருத்தகப்பனார் பெரியாழ்வார் வாக்குகளின் படி எம்பெருமான் எல்லோருக்கும் பெரும் தலைவனாக நின்று, இயற்கையின் மூலம் சிறந்த குணங்களை " தலைவன்" கற்றுக்கொள்ளும் படி உணர்த்திய வண்ணம் இருப்பது என்பது சனாதன தர்மத்தின் சிறப்பு. பாரத தேசத்தின் சிறப்பு .


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

கம்பனின் அம்பறாத்தூணி

மக்களின் தலைவன்