திருநாமங்கள் காட்டும் தலைமைப் பண்புகள் - முகில் வண்ணன்
எம்பெருமான் திருநாமங்கள் காட்டும் தலைமைப் பண்புகள்.
காஞ்சி மஹா பெரியவர் ஶ்ரீ உ.வே. பிரதிவாத அண்ணங்காரச்சாரியார் ஸ்வாமி எழுதிய “உள்ளுறை பொருள் விளக்கு” என்ற நூல் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த நூலில், ஆழ்வார்கள் உபயோகப்படுத்திய எம்பெருமானின் உவமை திருநாமங்களான கடல் வண்ணன் , முகில் வண்ணன் போன்ற திருநாமங்கள் பெயர் வருவதற்கான காரணத்தை எம்பெருமானின் குணத்தை மேற்கோள் காட்டி ஒப்பிட்டு பெயர் பொருத்தத்தை அழகாக விளக்கியுள்ளார். இந்தக் குணங்கள் நிர்வாகத் தலைமைக்கும் அவசியம் என்பதனால் “எம்பெருமான் திருநாமங்கள் காட்டும் தலைமைப் பண்புகள்” என்ற தலைப்பில் எழுதலாம் என்றூ நினைத்து, அதில் ஒன்றான கடல் வண்ணன் என்ற திருநாமம் காட்டிய தலைமைப் பண்புகளை முதலில் எழுதினேன்.
முகில் வண்ணன்( மேகவண்ணன்) திருநாமம் :
தென்திருப்பேரை எம்பெருமானை நம்மாழ்வார் “ நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்தான்” என்று மங்களாசாசனம் செய்துள்ளார். அந்த திருநாமம் காட்டும் தலைமைப் பண்புகள் சிலவற்றைப் பார்ப்போம்.
1. மேகம் கடலிருந்து நீரை எடுத்து நல்ல நீராக மாற்றி பரரபட்சமின்றி எல்லா இடத்திலும் பெய்யும். அதேபோல் தலைவன் பாரபட்சமின்றி எல்லோரிடமும் அன்பு காட்டவேண்டும்.
2. மேகமானது உப்பு நிறைந்த கடல் நீரிலிருந்து எடுத்து நல்ல நீரை, தான் எடுத்த இடத்திலும் பெய்யும். அதேபோல் தலைவன் என்பவன் உருவாக்கப் படுகிறான். உருவாக்கும் பொழுது தன் ஆசானிடம் கற்றுக்கொண்ட நல்ல கெட்ட விஷயங்களை அலசி ஆராய்ந்து கெட்டவற்றை அகற்றி, நல்லதை செய்யும் பொழுது பெரிய தலைவனாக உருவாக்கப்படுகிறான். அந்த நல்ல கருத்துகள் அவனை உருவாக்கிய ஆசான் அல்லது தலைவனிடம் மீண்டும் பெரிய தலைவனாக மேன்மையேற்றிய குணங்கள் கற்பிக்கப்படும். இப்படியே சிறந்த தலைவர்கள் உலகில் உருவாக்கப்படுகிறார்கள். (Continuous Improvement on leadership quality)
3. மேகத்தில் மின்னலுள்ள காலத்தில் நீர் நிறைந்திருக்கும். மேகத்தின் கருணையால் நீராகப் பெய்யும்.அதேபோல் தலைவன் என்பவன் மக்களிடம் கூடியிருக்கும் பட்சத்தில் மட்டுமே அவனது நீர்மைத் தன் பலமை கருணையால் நல்லதைப் பொழியும். மக்களிடம் கூடியிருப்பவனே தலைவன்.
4. மேகமானது கர்ஜித்து சிலசமயம் பெய்யாமல் பொய்த்து விடும். ஆனால் பொய்த்து போன மேகத்தை நம்பியே மீண்டும் காத்திருக்க வேண்டும். ஏனென்றால் மேகமானது கருணையின் வடிவம். அதேபோல் தலைவன் சில நேரங்களில் கர்ஜித்து அன்பு காட்டாமல் போகலாம். இதை நடைமுறையில் சில சமயங்களில் அனைவரும் பார்க்கிறோம். ஆனால் அவனது இயற்கை குணமாவது கருணையின் வடிவமாக இருக்கவேண்டும்.
5. மேகம் மழையாக நிலத்தில் பெய்யும் பொழுது சில இடங்களில் நன்மைகளும், சில இடங்களில் தீமைகளும் ஏற்படும். எதிர்காலத் தேவைக்காக மேகம் மழையாக பெய்கிறது. தீமை ஏற்படுத்தாமல் மழை நீரை எதிர்கால நன்மைக்காக சில முன்னேற்பாடுகளை மக்கள் செய்யவேண்டும். அதேபோல் தலைவனின் செயல்களிலும் நன்மை தீமைகள் இருக்கலாம். ஆதலால் எதிர்கால நன்மையைக் கருதி செயலை முடக்காமல், செயலை அமுல்படுத்தவேண்டும். தீமைகள் கருதாமல் அந்த செயலின் நன்மைகளை மக்கள் பெரிதும் பயன்படுத்த வேண்டும்.
6. மேகமானது மயிலை சிறகடித்து ஆடச்செய்யும். தலைவன் என்பவனைப் பார்த்து மக்கள் பரவசம் அடைந்து மகிழ்ச்சியின் எல்லைக்குச் செல்லவேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக